மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

இந்தியாவின் டாம் குருஸ்' பிரபாஸ் - குவியும் பெண் ரசிகைகள்!

இந்தியாவின் டாம் குருஸ்' பிரபாஸ் - குவியும் பெண் ரசிகைகள்!

இந்திய அளவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட , பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் இரண்டுமே பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இவை இரண்டுமே தென்னிந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.குறிப்பாக, தற்போது வெளியாகி உள்ள பாகுபலி 2வது பாகம், பெரும் வசூல் சாதனையைப் படைத்து வருகிறது. இந்தப் படத்தில் நடித்த அனைவருமே, உலக அளவில் பிரபலமாகி உள்ளனர். குறிப்பாக, ஹீரோ பிரபாஸ் 'பாகுபலி' படத்தின் மூலம் உலக அளவில் பிரபலம் அடைந்துள்ளார்.

அவருக்கு ஏற்கனவே, தென்னிந்திய அளவில் ஏராளமான ரசிகைகள் உள்ளனர். பிரபாஸ் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். அவரது ஆஜானுபாகுவான தோற்றம் காரணமாக, இளம்பெண்கள் மட்டுமின்றி, ஆண் ரசிகர்களும்கூட, பிரபாஸை வெகுவாக ரசிக்கின்றனர்.அதேசமயம், பிரபாஸ்க்கு, இளம்பெண்கள் லவ் புரபோஸ் செய்வதும் தொடர்கதையாக உள்ளது. அவரது ஷூட்டிங் நடைபெறும்போதெல்லாம் அங்கே இளம்பெண்கள் கூட்டமாகக் கூடி, பிரபாஸிடம் ஐ லவ் யூ சொல்வதும், திருமணம் செய்துகொள்ளும்படி வலியுறுத்துவதும் வாடிக்கைதான். இந்நிலையில், பாகுபலி படத்தின் முதல் பாகம், இரண்டாம் ஆகியவற்றின் படப்பிடிப்பில் மட்டும், அதாவது கடந்த 3 ஆண்டு காலத்தில், சுமார் 6,000 இளம்பெண்கள், தங்களைத் திருமணம் செய்துகொள்ளும்படி, பிரபாஸிடம் கோரியுள்ளனர். இவ்விஷயத்தை நம்பமுடியாவிட்டாலும் உண்மையாகவே நடந்துள்ளது.

ஆனால், அவர்கள் அனைவரின் அன்பையும் புரிந்துகொண்டு பொறுமையாக ஏற்றுக் கொண்ட பிரபாஸ், தற்போதைய நிலையில் தனக்கு ஷூட்டிங் நடத்த வேண்டிய பொறுப்பு உள்ளதால், திருமணம் பற்றி யோசிக்க நேரம் இல்லை அப்படிக் கூறிய பெண்களிடம் சமாதானம் கூறியுள்ளார்.

இதனால், இளம்பெண்கள் பலர் ஏமாற்றம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. எனினும், இதுவரை பிரபாஸ் யாரையும் காதலிக்கவில்லை. திருமணமும் செய்துகொள்ளவில்லை என்பதால், அவருக்காகக் காத்திருக்கத் தயார் என்றும், பல இளம்பெண்கள் கூறிவருவது இன்றளவும் நடந்து வருகிறதாம்.தற்போது, பாகுபலி 2 வெளியாகி வெற்றி பெற்றுள்ள நிலையில், பிரபாஸ்க்கு தென்னிந்தியா மட்டுமின்றி, உலக அளவில் இளம்பெண்களிடையே டிமாண்ட் அதிகரித்துள்ளது. மொத்தத்தில், இதுவரை இளம்பெண்களின் கனவு காதலான இருந்த பல நடிகர்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, பிரபாஸ் வலம்வருகிறார்.

ஆனால் இந்த இடத்தை பிடிக்க பிரபாஸ் கொஞ்ச நஞ்சம் கஷ்டப்படவில்லை. கடந்த ஐந்து வருடங்களாக பொருளாதார நெருக்கடியில் இருந்திருக்கிறார். ‘பாகுபலி’ முதல் பாகத்திற்கு பிரபாஸுக்கு சம்பளமாக ரூ.20 கோடி கொடுத்தார்களாம். இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளுமே இதில் நடித்துக் கொண்டிருக்கும்போதே வேறு வேறு படங்களில் நடித்தார்களே தவிர, பிரபாஸ் மட்டும் எந்த படங்களும் ஒப்புக்கொள்ளாமல் ‘பாகுபலி’யின் அடுத்த பாகத்தில் நடிக்க உடலை வருத்தி தயார் செய்து காத்திருந்தாராம்.

அந்த சமயத்தில் பிரபாஸுக்கு பணக்கஷ்டம் வந்துவிட இதை பயன்படுத்திக்கொள்ள நினைத்த சில தயாரிப்பாளர்கள் அவர்களிடம் கால்ஷீட் வாங்குவதற்காக பணத்தோடு அவரது வீட்டில் போய் நின்றுள்ளார்கள். சிலர், பணத்தை கொடுத்த உதவியாக கூட வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்கள்.

அப்போது, பிரபாஸ் இயக்குநர் ராஜமௌலியை தொடர்புகொண்டு என்ன செய்யவென்று கேட்க, அப்படி பணம் கொடுக்க வருபவர்களிடம் பணத்தை கடனாக வாங்கிக் கொள், படத்தின் நடிப்பேன் என்று வாக்குறுதி கொடுக்க வேண்டாம். பின்னர் அவர்களுக்கு திருப்பி கொடுத்துவிடு என்று அறிவுரை கூறியுள்ளார். ரூ.10 கோடி ரூபாய்க்கு ஒரு விளம்பரத்தில் நடிக்க வந்த வாய்ப்பைவிட பாகுபலிக்காக நடிக்க மறுத்திருக்கிறார் பிரபாஸ்.

உலக அளவில் இந்திய சினிமாவுக்கும் பெருமை தேடித் தந்துள்ள 'பாகுபலி 2' திரைப்படத்தின் கதாநாயகன் பிரபாஸ், தனது 5 ஆண்டுகால கடுமையான உழைப்பின் வெற்றியை தற்போது அமெரிக்காவில் கொண்டாடி வருகிறார். நெருங்கிய நண்பர்களுடன் அமெரிக்காவில் விடுமுறை கொண்டாடி வரும் பிரபாஸ், குடும்பத்தார், நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பிரபாஸ் தனது அறிக்கையில், கடந்த 5 ஆண்டுகாலம் எனக்கு உறுதுணையாகவும், ஆதரவாகவும் இருந்து அன்பு செலுத்திய அனைவருக்கும் நன்றி. உங்களுடைய ஆதரவில்லாமல் இது சாத்தியம் ஆகியிருக்க முடியாது. அனைவருக்கும் அன்பு கலந்த எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

'பாகுபலி 2' திரைப்படத்தில் நேர்த்தியான, கம்பீரமான நடிப்பினை வெளிப்படுத்திய பிரபாஸ்க்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 'பாகுபலி 2' வெளியான முதல் நாளிலேயே ரூ.121 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. இப்படம் விரைவில் ரூ.1000கோடி வரை வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஹாலிவுட் நடிகர் டாம் குருசுக்கு 'மிஷன் இம்பாஸிபிள்' படத்தின் முதல், இரண்டாம் பாகம் வந்த போது இதே போல ரசிகர்களும், ரசிகைகளும் அவரை கொண்டாடினார்கள். ஆனால் இப்போது இந்தியாவிலுள்ள இளம்பெண்கள் பிரபாஸை ' இந்தியாவின் டாம்குருஸ்' என்று அழைக்கும் அளவுக்கு அவரது புகழ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon