மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 9 ஏப் 2020

ஓட்டு மெஷின்: தேர்தல் ஆணையம் அழைப்பு!

ஓட்டு மெஷின்: தேர்தல் ஆணையம் அழைப்பு!

வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது நம்பகத்தன்மை இல்லை என்று, அரசியல் கட்சியினர் பலர் தொடர்ந்து புகார் தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து விவாதிப்பதற்காக வருகிற 12ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஐந்து மாநில சட்டசபை தேர்தல் மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற டெல்லி மாநகராட்சி தேர்தல்களில் தோல்வியைத் தழுவிய பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி மற்றும் இடதுசாரிகள் போன்ற பல கட்சியினர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து புகார் தெரிவித்தனர். அதையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான நம்பகத்தன்மை குறைந்ததால், வரும் காலங்களில் நடைபெறும் தேர்தல்களில் பழைய முறையான வாக்குச்சீட்டு முறையிலேயே நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இந்தப் புகாரை தேர்தல் ஆணையம், மத்திய அரசு மட்டுமன்றி முன்னாள் தேர்தல் ஆணையர்கள் பலரும் இந்தக் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மறுத்து வந்தனர்.

இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய வாய்ப்பே இல்லை. நம்பிக்கை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையத்தில் வந்து நிரூபிக்கட்டும் எனத் தலைமை தேர்தல் ஆணையர் நசீம் சைதி தெரிவித்தார். வரும் காலங்களில் நடைபெறும் தேர்தல்களில் யாருக்கு வாக்களித்தோம்? என வாக்காளர்கள் தெரிந்துகொள்ளும்வகையில் ஒப்புகைச் சீட்டு அளிக்கும் நவீன இயந்திரங்கள் கூடுதலாக வாங்க இருப்பதாக தேர்தல் ஆணையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது, இந்தப் பிரச்னை குறித்து நாடு முழுவதும் விவாதம் நடந்துவரும்நிலையில், இதுகுறித்து விவாதிக்க வரும் 12ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. இந்தக் கூட்டத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது நம்பகத்தன்மை இல்லையென தெரிவிக்கவுள்ளன

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon