மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

நீட் தேர்வு: உயர்நீதிமன்றம் கேள்வி!

நீட் தேர்வு:  உயர்நீதிமன்றம் கேள்வி!

நீட் தேர்வுக்கு தமிழகம் மட்டும் எதிர்ப்புத் தெரிவிப்பது ஏன்? என்று, உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடந்த ஆண்டு மத்திய அரசு, நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேர மாணவர்களுக்கு நீட் நுழைவுத்தேர்வு கட்டாயம் என்று கூறியது. இதனால், தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் விலக்களிக்க வேண்டும் என்று, தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. இதையடுத்து, நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. அந்த அவசரச் சட்டம் ஓராண்டில் முடிவடைந்ததையடுத்து, தமிழக மாணவர்கள் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் பல்வேறு கட்சியினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கக் கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்து கேட்டுக்கொண்டார்.

இருப்பினும், தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படாததை அடுத்து, வரும் மே 7ஆம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கான முடிவு ஜுன் மாதம் வெளியிடப்படும். இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

இந்நிலையில், நீட் தேர்வு மதிப்பெண்களுடன் பிளஸ் 2 மதிப்பெண்களையும் சேர்த்து கணக்கிடக் கோரி கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயிலைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுமீதான விசாரணை நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் அமர்வு முன் இன்று மே 4ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

நீட் தேர்வை மற்ற மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளும்போது தமிழகம் மட்டும் எதிர்ப்புத் தெரிவிப்பது ஏன்? நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத் திட்டப்படி நடத்தப்படுகிறது என்றாலும் அதற்கு இணையான கல்வி தமிழகத்தில் இல்லையா? அல்லது இந்த தேர்வை எழுதுவதற்கு தமிழக மாணவர்களுக்கு திறமை இல்லையா? அவ்வாறெனில் மாணவர்களுக்கு தகுதியான ஆசிரியர் பாடம் கற்றுத் தரவில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் தமிழகத்தில் காளான் போல் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் உருவாக்கியுள்ளன. இந்தக் கல்லூரிகள் தரமில்லாத ஆசிரியர்களை உருவாக்குகிறது. அதனால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறிய நீதிபதிகள், இந்த மனுவுக்கு சி.பி.எஸ்.இ. இயக்குநர் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதையடுத்து, வழக்கு விசாரணையை நாளை மே 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon