மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 25 செப் 2020

டிஜிட்டல் திண்ணை:முதல்வர் பழனிசாமிக்கு 10 கேள்விகள்!

டிஜிட்டல் திண்ணை:முதல்வர் பழனிசாமிக்கு 10 கேள்விகள்!

மொபைல் டேட்டாவை ஆன் செய்தோம். ஃபேஸ்புக்கில் நீண்டதொரு ஸ்டேட்டஸ் தயாராக இருந்தது.

‘‘இங்கே நான் எதுவும் சொல்லப் போவதில்லை. சில கேள்விகளை மட்டும் முன்வைக்கிறேன். பதில் சொல்லவேண்டியவர் முதல்வர் பழனிசாமிதான்!

1. முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமானது கொடநாடு எஸ்டேட். அவர் உயிருடன் இருந்தவரை, போயஸ் கார்டனைத் தவிர அதிகம் தங்கிய இடம் என்றால் அது கொடநாடு எஸ்டேட்தான். அப்படிப்பட்ட கொடநாடு எஸ்டேட்டில், கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி காவலாளி ஓம்பகதூர் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இன்னொரு காவலாளி கிருஷ்ணபகதூர் கொடூரமாகத் தாக்கப்பட்டார். அதன்பிறகு, எஸ்டேட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் உள்ளே இருந்தவற்றை கொள்ளையடித்துச் சென்றது. இந்த வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க ஏன் இவ்வளவு தாமதம்?

2. ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்த கனகராஜ் திடீரென விபத்தில் இறந்துபோனார். இறப்பற்குமுன்பு சென்னைக்கு வந்தார் கனகராஜ். முக்கியப் பிரமுகர் ஒருவரின் வாரிசை அவரின் வீட்டுக்கு வெளியே ரகசியமாக சந்தித்துப் பேசினார். எதற்காக அவரைச் சந்தித்தார் கனகராஜ்? அந்த சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

3. ஏப்ரல் 20ஆம் தேதி கிழக்கு கடற்கரைச் சாலையில் எந்திரன் பட ஷூட்டிங் நடந்த ஸ்பாட்டுக்கு அருகேயுள்ள கிரீன் மிடாஸ் நட்சத்திர ஹோட்டலுக்கு ஓலா கால் டாக்சி நிறுவனத்தின் இன்னோவா காரில் அதிமுக பிரபலம் ஒருவரின் சகோதரரும், முன்னாள் அமைச்சர் ஒருவரும் காலை 10.30 மணிக்கு வந்தார்கள். மதியம் 1.10 வரை அவர்கள் உள்ளேயிருந்தார்கள். அப்போது, அங்கே கொலை செய்யப்பட்ட கார் டிரைவர் கனகராஜும், தற்போதைய மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ., ஒருவரும் இருந்தார்கள். அவர்களுடன் வந்த இருவரும் பேசியிருக்கிறார்கள். எதற்காக வந்தார்கள்... என்ன பேசினார்கள்?

4. அதே இடத்தில், மஃப்டி உடையில் ஐ.ஜி., அதிகாரி ஒருவரும் இருந்திருக்கிறார். அவரும் தனியாக டிரைவர் கனகராஜுடன் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். யார் அவர்?

5. நட்சத்திர ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமராவில் உள்ளே வந்தவர்கள் யார்... உள்ளே இருந்தவர்கள் யார்... என்பதெல்லாம் பதிவாகியிருக்கிறது. அந்தப் பதிவுகளை காவல் துறை ஏன் இன்னும் கேட்டு வாங்கவில்லை?

6. அதிமுக பிரபலத்தின் சகோதரர் அந்த ஹோட்டலிலிருந்து கிளம்பும்போது, டிரைவர் கனகராஜ் கையில் செய்தித்தாளில் சுற்றப்பட்ட ரூபாய் நோட்டுக் கட்டுகளை கொடுத்திருக்கிறார். எதற்காக அந்தப் பணம் கனகராஜுக்கு கொடுக்கப்பட்டது?

7. கொடநாடு எஸ்டேட்டில் உள்ள கப்போர்டுகள் தொடங்கி, உள்ளே மர வேலைகள் அத்தனையும் செய்தவர் சஜின். இவர், கொடநாட்டுக்கு வரும்போதெல்லாம் உள்ளே காரில் அழைத்துச் செல்வது டிரைவர் கனகராஜ்தான். கொள்ளை நடந்த சமயத்தில் சஜின் எங்கே இருந்தார்? கொடநாடு கொலைக்குப் பிறகு வெளிநாட்டுக்குச் சென்றவர் திரும்பிவிட்டாரா?

8. கொடநாடு எஸ்டேட்டில் உள்ள ஊழியர்களுக்கு ஜெயலலிதா, அவர் படம் பொறித்த வாட்சுகளை பரிசாக வழங்குவார். இந்த வாட்சுகளின் மதிப்பு ரூ.2 ஆயிரம்தான். அந்த வாட்சுகள் மட்டும்தான் காணாமல் போயிருப்பதாக போலீஸ் சொல்கிறது. இந்த வாட்சுகளை கொள்ளையடிக்கத்தான் கொள்ளை கும்பல் வந்ததா?

9. மூணாறு பகுதியில் 500 ஏக்கர் ஏலக்காய் எஸ்டேட்டும், 200 ஏக்கர் செம்மர எஸ்டேட்டும் அதிமுக மாஜி அமைச்சர் ஒருவர் வாங்கியிருந்தார். அதேபோல, இன்னொரு மாஜி அமைச்சருக்கு ராமநாதபுரத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் சொந்தமாக இருந்தது. இன்னொரு மாஜி அமைச்சர் சொத்துகளும் கைப்பற்றப்பட்டன. கடந்த இரண்டு வருடங்களுக்குமுன்பு, அந்த மூன்று முக்கியப் பிரமுகர்களிடமும் ஜெயலலிதா விசாரணை நடத்தினார். அந்த இடத்துக்கான டாக்குமெண்ட்டுகளை அவர்களிடம் வாங்கிக்கொண்ட பின்புதான் எம்.எல்.ஏ., சீட்டே தந்தார். இதில், மூணாறு எஸ்டேட் மட்டும் கொடநாட்டில் மேனேஜராக இருக்கும் நடராஜன் பெயரில் மாற்றப்பட்டது. ஆனால் பத்திரப்பதிவு எதுவும் செய்யவில்லை. கொடநாடு எஸ்டேட்டுக்குள் இருந்த அந்த மூன்றுபேரின் டாக்குமெண்ட்டுகள் இப்போது எங்கே இருக்கிறது?

10. கொடநாட்டில் கொள்ளையடிக்க வந்த கும்பலில் எல்லோரும் முகமூடி அணிந்திருக்கிறார்கள். உள்ளே நுழையும்போது காவலர்களுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது ஒருவரின் முகமூடி விலகியது. அவர், அந்தக் காவலர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர். அதனால்தான் காவலர் ஒருவர் கொல்லப்பட்டார், ஒருவர் வெட்டப்பட்டார். முகமூடி விலகிய அந்த நபர் இப்போது உயிருடன் இல்லை. இது சம்பந்தமாக காவல் துறை விசாரித்ததா?

இந்த பத்துக் கேள்விகளுக்கு காவல் துறையை தனது கையில் வைத்திருக்கும் முதல்வர் பழனிசாமி பதில் சொன்னாலேபோதும். எல்லா சந்தேகங்களும் தீர்க்கப்படும், உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துவிடும். சொல்வாரா?” என்ற கேள்வியுடன் முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.

“பார்க்கலாம்!” என்ற கமெண்ட்டை போட்டு ஷேர் செய்துவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.

வியாழன், 4 மே 2017

அடுத்ததுchevronRight icon