மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஏப் 2020

ராமானுஜரை அழைத்த ஆளவந்தார்!

 ராமானுஜரை அழைத்த ஆளவந்தார்!

அக்கியாழ்வானை மூன்று விஷயங்கள் மூலம் தோற்கடித்து ஆளவந்தார் என்று போற்றப்பட்ட யமுனை வழித் துறைவன் பற்றி பார்த்தோம்.

அந்த ஆளவந்தார் திருவரங்கம் சென்றதும் சாதாரண செய்தியில்லை. பரிசுப் பொருளாக நாட்டில் ஒரு பாகம் கிடைத்ததும் ஆளவந்தார் சற்றே அகம் மயங்கித்தான் போனார். அரண்மனையிலேயே பல நாட்கள் இருந்து சொகுசு வாழ்வை அனுபவிக்கத் தொடங்கினார்.

ஆனால்… இதெல்லாம் மணக்கால் நம்பிக்கு பெரும் வருத்தமாக இருந்தது. தனது குருவின் குரு நாதமுனிகளுக்கு செய்துகொடுத்த உறுதிமொழிகள் காப்பாற்றப்படாமல் போய்விடுமோ என்று கலங்கினார் மணக்கால் நம்பி. ஏனெனில் அவருக்குத்தான் தெரியும் ஆளவந்தாரின் திசை அரண்மனை அல்ல… அரங்கம் என்று. இந்நிலையில் மணக்கால் நம்பிகள் எப்படியாவது ஆளவந்தாரைப் பார்த்து அவரது தாத்தா நாதமுனிகளின் ஆவல் பற்றி தெரிவித்துவிட வேண்டும் என்று பல வகையிலும் முயன்றார், ஆனால் அரண்மனைக்குள் ஆளவந்தாரை நெருங்க முடியவில்லை.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பார்கள். அதுபோல இந்த நெருக்கடியான நிலையில் மணக்கால் நம்பிக்கு மனதில் திடீரென ஓர் எண்ணம் தோன்றியது. ஆளவந்தாரை சிறுகுழந்தையில் இருந்தே தெரிந்துள்ள மணக்கால்நம்பிக்கு, தூதுவளை கீரை என்றால் ஆளவந்தாருக்கு உயிர் என்ற விஷயம் நினைவுக்கு வந்தது. அன்றில் இருந்து அரண்மனை சமையல்காரனைப் பிடித்து ஆளவந்தாருக்குக் கொண்டு சேர்ப்பிக்கும்படி தினமும் தூதுவளை கீரைகளை கொடுக்க ஆரம்பித்தார். தனது சாப்பாட்டில் தூதுவளை இருப்பதைப் பார்த்து ஆளவந்தாருக்கு மகிழ்ச்சி. விரும்பிச் சாப்பிட்டார். கொஞ்ச நாட்கள் தொடர்ந்து தூதுவளை வழங்கிய மணக்கால் நம்பிகள் திடீரென தூதுவளை கொடுப்படை நிறுத்திவிட்டார்.

இவர் கொடுப்பது நின்றுபோனதும், அங்கே சமையலிலும் தூதுவளை ஏது என்றாகிப் போனது. ஆளவந்தார் தனது சமையல்காரனைக் கூப்பிட்டு, ‘இன்னிக்கு தூதுவளை இல்லியா?” என்று கேட்டார். உடனே சமையல்காரர், ’தினமும் உங்க பேரைச் சொல்லி ஒருத்தர் கொடுத்துட்டுப் போவார். இன்னிக்கு ஆள் வந்தார். ஆனால் கொடுக்கவில்லை’ என்று சொன்னதும் ஆளவந்தாருக்கு தூதுவளை தாண்டி ஏதோ விஷயம் இருப்பது புலப்பட்டது.

சமையல்காரனிடம் சொல்லி அந்த தூதுவளை வழங்குபவரை சில நாட்களிலேயே சந்தித்தார் ஆளவந்தார்.

மணக்கால் நம்பியை அவருக்கு மறந்துபோயிற்று. ‘யார் நீங்கள். என்ன வேண்டும் உங்களுக்கு?’ என்று கேட்டார்.

மணக்கால் நம்பியோ…’ நான் பெற வரவில்லை. கொடுத்துவிட்டுப் போக வந்திருக்கிறேன்’ என்று சொல்லி தன்னைப் பற்றி விளக்கியுள்ளார். மேலும் ஆளவந்தாருக்கு திருவரங்கத்தில் பல கடமைகள் இருக்கும்போது இப்படி அரண்மனையில் இருக்கலாமா என்று கேட்டார்.

அதன்பிறகு ஆளவந்தார் விழிப்பு பெற்று… மணக்கால் நம்பியை வணங்கினார். அவரிடம் கற்க வேண்டிய விஷயங்களைக் கற்று திருவரங்கம் சென்று மணக்கால் நம்பியிடம் இருந்து திருவரங்கம் கோயில் உள்ளிட்ட பொறுப்புகளை செவ்வனே செய்யத் தொடங்கினார்,

ஆளவந்தாருக்கு பெரிய நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, மாறனேரி நம்பி, பெரிய திருமலை நம்பி, திருமாலையாண்டான், திருக்கச்சி நம்பிகள ஆகியோர் சீடர்களாக இருந்தனர். ஒருபக்கம் ஆளவந்தார் திருவரங்கத்தில் ஆச்சாரிய பணிகளை செய்து கொண்டிருக்க… அதே காலகட்டத்தில் ராமானுஜர் காஞ்சிபுரத்தில் தங்கி பெருமாளுக்கு கைங்கர்யங்கள் செய்து கொண்டிருந்தார்.

ராமானுஜர் தனது குருவான யாதவ பிரகாசரிடம் பாடங்கள் கற்றுக் கொண்டிருந்தார். அப்போது யாதவ பிரகாசர் தான் ஒரு அத்வைதி என்பதால் அதன் அடிப்படையிலேயே பாடங்களை நடத்தி வந்தார். ஆனால் இதை ஏற்றுக் கொள்ள முடியாத ராமானுஜர் ஒவ்வொரு கட்டத்திலும் தனது குருவுடன் முரண்பட்டு வந்தார்..

ஒரு சுலோகத்தில்… அதிகாலை சூரியனைப் போல் நாராயணனின் கண்கள் சிவந்திருக்கின்றன என்று வந்திருக்கும், ஆனால் இதை யாதவப் பிரகாசர், குரங்கின் பின் பகுதி போல நாராயணனின் கண்கள் சிவந்திருந்தன என்று பாடம் நடத்தினார். இதைக் கேட்டு ராமானுஜர் கண்ணீர் வடித்தார்.

யாதவப் பிரகாசர் ராமானுஜரிடம், ஏன் அழுகிறாய் என்று கேட்க… உம்மிடம் பாடம் படிக்க வேண்டியிருக்கிறதே என்றே அழுகிறேன் என்று அச்சொல்லின் தெளிவான பொருளை விளக்கிவிட்டு வெளியேறினார்.

இப்படிப் பல விஷயங்களில் ராமானுஜரின் வித்தியாசமானவராகவும், இதுவரை இல்லாத மாணவராக ராமானுஜர் காஞ்சிபுரத்தில் புகழ் பெற்றுவருவதையும் ஆளவந்தார் அறிந்தார்.

ஒருநாள் தனது சீடர்களோடு காஞ்சிபுரம் வந்தார் ஆளவந்தார். எல்லாரும் ராமானுஜர் ராமானுஜர் என்றே பேசுகிறார்களே.., யாரப்பா அது என்று கேட்க… சீடர்கள் ராமானுஜரைக் காட்டினார்கள். தான் யார் என்று சொல்லிக் கொள்ளாமலேயே ராமானுஜரையும் அவரது பணிகளையும் கண்டு ரசித்துப் பாராட்டினார் ஆளவந்தார். அப்போதே ஆளவந்தார் முடிவெடுத்திருந்தார். ‘ தனக்குப் பின் திருவரங்கத்தை நிர்வகிக்க முடியும் என்றால் அது ராமானுஜரால்தான் முடியும்’ என்று. இதை தன் சீடர்களிடமும் கூறினார்.

காலங்கள் ஓடுகின்றன. மீண்டும் திருவரங்கம் சென்ற ஆளவந்தார், ஒரு கட்டத்தில் ராமானுஜரை அழைத்து வரச் சொல்கிறார். தனது சீடர் பெரிய நம்பியிடம் சொல்லி ராமானுஜரை உடனடியாக அழைத்து வா என்று சொல்லி அனுப்புகிறார்.

இதுபோன்ற பகவத் குரு பரம்பரை விஷயங்களைப் பற்றி வைணவச் செம்மல் டாக்டர் ஜெகத்ரட்சகன் அவர்கள் ஆழ்ந்த அறிவு கொண்டவராய் மேடைகளில் பேசுகையில் கேட்டுக் கொண்டே இருக்கலாம். ராமானுஜர் ஆயிரமாவது திருநட்சத்திரத்தை ஒட்டி டாக்டர் ஜெகத்ரட்சகன் அவர்கள் நடத்திய ஒரு நாள் வைணவ மாநாட்டில் பல இதுபோன்ற பல சுவாரஸ்ய நிகழ்வுகளை அறிய வாய்ப்பாக இருந்தது,

சரி… பெரிய நம்பிகள் ராமானுஜரை கூட்டிக் கொண்டு திருவரங்கம் திரும்பினாரா…

பார்ப்போம்

விளம்பர பகுதி

வியாழன், 4 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon