மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 10 மே 2017

வல்லமை தாராயோ - 9 - தமயந்தி

வல்லமை தாராயோ - 9 - தமயந்தி

நம் காவல் நிலையங்களில் நிகழும் பாலியல் வன்முறைகளைப் பற்றி நாம் நிறையக் கேள்விப்பட்டிருக்கிறோம். மதுரை அங்கம்மாள் பல ஆண்டுகளாகத் தன்னைத் தன் கணவருக்கு முன்னமே பாலியியல் வன்புணர்வு செய்த காவலர்களை நீதியின் முன் நிறுத்த முயன்று அநியாயமாகத் தோற்றுப் போனார். ஆனால், இன்னமும் மனம் சளைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறார். அந்தியூர் விஜயாவின் இறுதிக்காலங்களில் அவரைப் பேராசிரியர் கல்யாணியுடன் சென்று சந்தித்தேன். அவர் பாலியல் வல்லுறவுக்கு ஆளான அந்த இரவு, அந்த குன்றுகளின் நிசப்தம் எல்லாமே அவர் குரலில் உறைந்த காயங்களின் கீறல்களைப் பிரதிபலித்துக் கொண்டேயிருந்தது.

சென்ற வாரம் சட்டீஸ்கரில் ராய்ப்பூர் பஸ்தார் சிறையில் சப் ஜெயிலர் வர்ஷா தோங்ரா தன் முகநூலில் சிறையில் இருக்கும் பழங்குடிப் பெண்களுக்கு நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகளைப் பற்றி பகிரங்கமாக எழுதியதால் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மின்சாரத்தைப் பெண்களின் மார்பில் பாய்ச்சிப் பின் அவர்களை வன்புணர்வும் செய்வதாக அவர் முகநூல் பதிவில் குறிப்பிட்டு உள்ளார். வர்ஷா இதை மிகத் தீவிரமாகச் சிந்தித்தே செய்திருக்க வேண்டும்.

மாட்டுக் கறி தின்னக் கூடாது என்ற இந்துத்துவா அரசியலை முன்வைக்கும் மோடி அரசாங்கம் இந்த சித்ரவதைகளை எப்படிப் பார்க்கிறது? என்பதை வர்ஷாவை பணியிடை நீக்கம் செய்வதிலிருந்தே புரிந்து கொள்ளலாம். தவறு செய்பவர்களைப் பணி நீக்கம் செய்யாமல் அதை வெளிக்கொணர்பவரை இப்படியான ஒரு நிர்பந்தத்துக்குள் உட்புகுத்துவது மிகவும் ஆபாசமான செயல்.

வர்ஷா முன்வைத்திருப்பது ஒரு மிக முக்கியமான கேள்வி. மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்குவதற்கு இப்படி நடவடிக்கைகள் மேற்கொண்டால் அது மாவோயிசத்தை வளர்க்காதா? என்பதே அது. தீவிரவாதம் என்பது வலிகளின் கோர்வை தான். அது வன்முறையாக மாறுவதே அந்த வலிகளுக்காகப் பழிதீர்க்க முயலும்போதுதான்.

பெண்களின் உடல் மீதான வன்முறையை அரசியல் பழி தீர்த்தல்களாகத் தான் நம் வரலாறு முன்வைக்கிறது. இன்று இணையதளம் முழுக்கவே அலைபேசிகளில் எடுக்கப்பட்ட பெண்களின் மார்புகளும் அந்தரங்கப் பகுதிகளும் தான் நிறைந்திருக்கிறது. பழங்குடி இனப் பெண்களை இங்கு மேம்படுத்தாது இதுபோல் பாலியியல் வன்முறைகளுக்கு ஆளாவதை இந்த அரசும் நீதித்துறையும் எப்படிப் பார்க்கிறது?

நிர்பயாவின் மரணத்துக்கும் பாலியல் வன்முறைக்கும் காரணமான குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் உள்ளர்த்தம் என்னவெனில் மரணமே தண்டனை என்பதால் இந்தியாவில் எந்த ஆண் மகனுமே எந்தப் பெண்ணையும் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப் பயப்படுவார்கள். இது ஒரு பக்கமெனில், இன்னொரு பக்கம் போர்னோகிராபி தளங்கள் பரவலாக இன்றைய இளைஞர்கள் கையில் இருக்கிறது. பாலியல் இச்சைகளைத் தூண்டக்கூடிய இத்தளங்கள் இதுபோன்ற பாலியல் குற்றங்கள் நிகழ்வதற்கு மிகப் பெரிய தூண்டுகோலாக உள்ளது. மேலும் இவை தடுக்கப்படாமல் அரசின் மௌனம் கலந்த ஆதரவோடு பெருகிப் பல்கவும் செய்கிறது. சட்டசபையில் பலான படம் பார்த்த எம்.எல்.ஏ. என்று செய்திகள் உலா வருகின்றன ஆதாரங்களோடு.

இவை எல்லாவற்றையும் பற்றி நாம் ஏன் பேச வேண்டும்? இவை எப்படி நம் வாழ்வோடு சம்பந்தப்பட்டிருக்க முடியும்? இந்தக் கேள்விகள் நம்மைத் துரத்தும். ஆனால், எங்கோ நிர்பயா வழக்கில் கொடுக்கப்பட்ட மரண தண்டனை பற்றி நம்மில் பெரும்பாலானோருக்குக் கருத்தே இல்லை. சிலருக்கோ ஒரு பெண்ணைக் கொடுமையாகப் பாலியல் சித்ரவதைகளுக்கு ஆளாக்கிக் கொன்றிருக்கிறார்கள் அவ்வளவே. ஆனால், பெண்ணியம் என்று பேசும் பலர் அதை எதிர்த்து முகநூலில் ஏன் எழுதுகிறார்கள் என்று யோசிப்பதில்லை. ஒரு குற்றத்துக்கு அதற்கு நிகரான அல்லது அதே குற்றம்தான் தண்டனையாக முடியுமெனில் இங்கு நீதி என்பது இன்னொரு குற்றத்தைச் சட்டபூர்வமாக நிகழ்த்துவது தானா?

கண்ணூர் என்னும் கேரள மாவட்டத்து ஊரில் நீட் பரீட்சையில் ஒரு மாணவி உள்ளணிந்திருக்கும் மேலாடையைக் கழற்றினால்தான் பரீட்சை அணிய அனுமதிப்போம் என்று சொன்ன காரணத்தால் அந்தப் பெண் தன் மேல் உள்ளாடையைக் கழற்றித் தன் அம்மாவிடம் கொடுத்திருக்கிறார். இன்னொரு பெண் தான் அணிந்திருந்த ஜீன்சில் உலோகப் பொத்தான்கள் இருந்த காரணத்தால் பரீட்சை ஹாலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு அதை வெட்டி எறிந்த பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

கள்ளப்பணத்தை ஒழிக்க என்று புதிய பொருளாதாரக் கொள்கையை பிஜேபி அரசு கொண்டு வந்தார்கள். ஆனால், இன்று வரை பழைய பணம் மாற்றுவதே ஒரு பிசினஸாக நடக்கிறது. ஒரு லட்சம் என்றால் கொடுக்கப்பட்ட ஆட்களுக்கு அறுபதிலிருந்து எழுபது சதவிகிதப் பணமும் பரிவர்த்தனையை நிகழ்த்திக் கொடுப்பவர்களுக்கு நாற்பதிலிருந்து முப்பது சதவிகிதம் லாபம் கிடைக்க நடைபெறும் இந்த வியாபாரம் இந்த அரசுக்குக் கள்ளத்தனமாய்த் தெரியாதா?

இப்படி மாயைகளை முன்னிருத்தும் அரசு எப்படிப் பெண்களின் வாழ்வை முக்கியமாகக் கருதும்? நன்றாகக் கவனியுங்கள். நான் வாழ்வென்றே சொன்னேன். பெண்களின் பாதுகாப்பென்று சொல்லவில்லை. அது ஒவ்வொரு பெண்ணும் தனக்குத் தானே செய்து கொள்ளும் ஏற்பாடாகவே இருக்கிறது. பின் எதற்கு இந்தப் பொம்மை அரசாங்கமும் பெண்களுக்குக் கழிப்பறை வேண்டும் என்று சொல்லும் வெளிநாட்டில் கழிப்பறைகள் எப்படி இருக்கிறதென ஆய்வு செய்யாத, ஆனால் வெளிநாட்டுக்குப் பறக்கும் பிரதமரும்.

இந்த வாரம் நமக்குக் கடிதம் எழுதிய சகோதரியின் குரல் மிக முக்கியமான ஒன்று

அன்புள்ள அக்கா

சிறு வயதிலிருந்தே அப்பாவால் தொடக் கூடாத இடங்களெல்லாம் தொடப்பட்டுச் சித்ரவதை அனுபவித்தவள் நான். பெற்ற அப்பாவை அம்மாவால் எதிர்க்க முடியாமல் தூக்கு போட்டு விட்டு உலகத்தை விட்டே போய் விட்டாள். அப்பா இன்னொரு கல்யாணம் செய்து கொண்டார். என்னை விட்டு விலகினார். ஆனால் சித்தியின் கொடுமைகளில் சிக்கினேன். அப்போது ஒருவன் அதீத அன்பைக் காட்டினான். என்னுடைய கல்லூரித் தோழன் அவன். நம்பினேன். அவன் என்னை இரண்டு நாள் ஒரு ஹோட்டலில் வைத்து அனுபவித்து விட்டுப் போய் விட்டான்.

திரும்ப என்னால் வீட்டுக்குப் போக முடியவில்லை.. பாலியல் வர்த்தகத்தில் ஈடுபட்டுக் கிடைக்கும் காசில் படித்தேன். இன்று நான் ஒரு ஆராய்ச்சி மாணவியாய் வைவா முடித்த மூன்றாவது நாள்... யார் மீதும் எனக்குக் கோபமில்லை.

என்னிடம் வந்த - நன்றாகக் கவனியுங்கள் அக்கா... இனி நான் இந்தத் தொழிலில் இல்லை - ஆண்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதைகள். அவர்களைப் பார்த்தாலும் பாவம் என்று தான் தோன்றும்.

எந்தச் சரியான புரிதலுமில்லாத ஒரு சமூகத்தில் எங்களைப் போன்றோரின் வாழ்க்கை நிழலுலகில் நிகழ்கிறது. ஆனால் நம் அமைச்சர்களும் மந்திரிகளும் தொலைக்காட்சியில் பேசும் பேச்சுகள்... அப்பப்பா...

பின் குறிப்பு: என் அப்பாவும் இப்போது கவுன்சிலராக நிற்கத் திட்டமிட்டு இருக்கிறாராம்.

அன்புடன்

யாருக்கும் தெரியாத ஒருத்தி மற்றும் எல்லோருக்கும் தெரிந்த ஒருத்தி.

கட்டுரையாளர் குறிப்பு: எழுத்தாளர் தமயந்தி

ஒடுக்கப்பட்ட பெண்களின் சார்பில் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர். இவரது ‘அக்கக்கா குருவிகள்’, ‘சாம்பல் கிண்ணம்’ சிறுகதைத் தொகுப்புகள் வாசகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றவை. இவரது முக்கிய கட்டுரைத் தொகுப்பு ‘இந்த நதி நனைவதற்கல்ல’. திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். இயக்குநர் மீரா கதிரவனின் ‘விழித்திரு’ திரைப்படத்தில் வசனமும், பாடலும் எழுதியுள்ளார்.

வல்லமை தாராயோ - 1 - தமயந்தி

வல்லமை தாராயோ - 2 - தமயந்தி

வல்லமை தாராயோ - 3 - தமயந்தி

வல்லமை தாராயோ - 4 - தமயந்தி

வல்லமை தாராயோ - 5 - தமயந்தி

வல்லமை தாராயோ - 6 - தமயந்தி

வல்லமை தாராயோ - 7 - தமயந்தி

வல்லமை தாராயோ - 8 - தமயந்தி

புதன், 10 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon