மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 31 மே 2017

சிறப்புக் கட்டுரை : வல்லமை தாராயோ:11- தமயந்தி

சிறப்புக் கட்டுரை : வல்லமை தாராயோ:11- தமயந்தி

என்னவென்று அழைப்பீர்கள் உங்கள் பக்கத்து வீட்டுப் பெண்ணை? அவள் பவ்யமாக உடல் மறைக்கும் உடைகளை அதனதன் இடங்களில் அணிந்திருந்தால் , பவ்யமாகச் சத்தம் வராமல், சிரித்தால், பதில் சொன்னால்- கவனிக்கவும் கேள்வி கேட்க அல்ல. - பெண் என்று அழைப்பீர்கள். இல்லையேல் பாலியியல் தொழில் செய்பவராக வர்ணிப்பீர்கள் இல்லையா? சத்தமாகப் பேசும் பெண். நீங்கள் சொல்வதைத் தவறென மறுத்துப் பேசும் பெண். தைரியமாகப் பேசும் பெண். இவர்களை நீங்கள் ஆணாய் இருந்தால் பிடிக்காமல் போக வாய்ப்பு இருக்கிறது.

ஜே என் யூவில் முன்னாள் மாணவர் தலைவராக இருந்த ஷீலா ரஜீத்தை நோக்கி அவர் பிஜேபியை விமர்சித்து எழுதியதால், இந்தி திரையுலகப் பாடகர் அபஜீத் அவர் பாலியியல் வர்த்தகத்தில் இருந்ததாகச் செய்த ட்வீட் பதிவு இத்தகைய மனநிலையில் இருந்து வெளிப்பட்டதுதான். பின்னால், பிரச்னை பெரிதாகி அவரது ட்வீட் அழிக்கப்பட்ட போது அவருக்கு ஆதரவாக அவரே களமிறங்கி தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றிருக்கிறார். ஷீலாவுக்கு ஆதரவாகப் பதிவு செய்த பெண்ணின் விலாசம் கேட்டு அங்கு உடனடியாக வருகிறேன். விருப்பமான போசில் இருக்கலாம் என்று ட்வீட் செய்தவரின் கணக்கை ட்விட்டர் முடக்கியும் அவரின் கேவலமான குணம் மாறவில்லை.

அதேபோல் பிஜேபிக்காக, அதன் அற்புத கொள்கைகளுக்காக பிஜேபி ஆதரவாளரான நடிகர் பாவேஷ் அவரை ராணுவ ஜீப்பின் முன் கட்டி இழுக்கச் சொன்னார். சமீபத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா கட்சி ஆரம்பித்துப் படும் இன்னல்களைக் காட்டிலும் அவர் சமீபத்தில் ஒரு ப்ரஸ் மீட்டிங்கில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த விதம் மிகவும் முக்கியமானதாய்பட்டது. அவரது கணவர் பற்றிக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலாய் அந்தப் பத்திரிகையாளரிடம் உங்க மனைவி உங்க கூட தான் இருக்காங்களா என்னும் அர்த்தப்படும் விதமாகக் கேட்டார். அந்தப் பத்திரிகையாளர் அதை எதிர்பார்க்கவில்லை. ஆனால், அது தான் யதார்த்தம். ஒரு பெண் பொதுவெளியில் இயங்கினால் அவர்களை நோக்கிய தனிப்பட்ட விமர்சனங்களால் பல அறிவி ஜீவிகள் இந்தச் சமூகத்திற்கு தங்கள் அரித்த மனநிலைகளைப் புடம் போட்டுக் காட்டுகிறார்கள்.

கேரளாவில் சாமியாரின் ஆணுறுப்பை வெட்டிய பெண் பற்றிய செய்தி நம் தமிழ் ஊடகங்களின் தலைப்பு செய்தியாகவே சென்ற வாரம் அமைந்தது. முகநூலில் வெட்டியது சரியா தவறா என்றொரு பட்டிமன்றம். இன்னொரு பக்கம் சம்பவம் குறித்த நக்கலும் கிண்டலும். யாருமே அப்பெண்ணின் துயர் நிரம்பிய மனநிலைப் பற்றி கவலைப்பட்டதில்லை. ஒருமுறை அரசாங்க பேருந்தில் நான் சென்னையிலிருந்து திருநெல்வேலி சென்ற போது என் முன் உட்கார்ந்திருந்த நடத்துநர் நள்ளிரவில். என்னிடம் தவறாக நடந்து கொண்ட போது பின் இருக்கையில் இருந்த கல்லூரி மாணவனின் தோற்றத்தில் இருந்தவன், வெளிய இறங்கி கத்துங்க... தூங்க வேணாம் மனுஷர் என்று சொல்ல இருக்கையை விட்டு வெளியே இழுத்து அறைந்தேன். என்னை அணுகிய அந்த நடத்துநருக்கு நிகரான பாவத்தை தான் அவனும் செய்தான்...இப்படி தான் தன் வீட்டு முற்றத்தில்.பாலியியல் குற்றமோ தன் வீட்டுப் பெண்ணுக்கு வரும் வரை உலகில்.எது நடந்தால் என்ன என்று நினைப்பவர்களால் பெரும்பாலும் நிரம்பிய ஊர் இது.

இங்குத் தைரியமாக பேசும் பெண்கள் எச்சக்கைகள் என்று மிக அறிவு ஜீவித்தனமாய் பேசும் நண்பர் ஒருவர் ஒரு முறை சொன்னார். நான் அவர், மற்றவர்கள் பேசுவதை மேற்கோளிட்டு சொல்கிறார் என்று நினைத்தேன். ஆனால், என் தோழியொருத்தியை அவள் அப்படிப் பேசுகிறார் என்பது புரிந்த போது... சார்... அந்த எச்சக்கையோடா ப்ரெண்ட் நான். எச்சக்கை என்று சொல்ல அவசரமாக முகம் மாறி நகர்ந்தார். நிறைய இடங்களில், பெண்களை அவமானப்படுத்தப்படும் போது சகப்பெண்கள் அமைதியாக இருந்து விடுகிறார்கள். அது தவறானது என்பது அறியாதிருக்கிறார்கள் அவர்கள்.

ஒரு சராசரி குடும்பத்தில் ஆரம்பிக்கும் இந்த நடவடிக்கை இப்போதெல்லாம் சமூகவெளியில் நிரம்பி வழிகிறது. சக உயிருக்கான மதிப்பென்பது பெண்ணாயிருக்கும் பட்சம் சுத்தமாக இல்லாமலே ஆகிறது.

டீஸ்பூன் என்னும் இந்தி குறும்படம் ஒன்று பார்த்தேன். அதில், மருமகள் சுயதொழிலாய் மேக்கப் சாதனங்களை வீட்டிலிருந்தபடியே விற்கிறாள். கணவர் வேலைக்குப் போக, பக்கவாதத்தால் படுத்தபடுக்கையாகி இருக்கிறார் மாமனார். அவருக்குப் பேச்சு சரியாக வரவில்லை. கட்டிலின் முனையில் டீஸ்பூனால் தட்டுகிறார். அது அவர் மருமகளை வரச் சொல்லும் யுக்தி. அவள் அவரை கவனித்துக் கொள்கிறாள். ஒரு கட்டத்தில் தனக்கென எந்த வெளியும் இல்லையென உணர்கிறாள் அவள். உலகமெங்கும் கட்டிலை டீஸ்பூனால் தட்டும் ஒலியே பெருகுகிறது. கணவனிடம் தன் பிரச்னையை சொல்கிறாள். அவன் புரிந்து கொள்வானில்லை.

ஒரு உச்சக்கட்ட கோபத்தின் வெளிப்பாடாய் மாமனாரைத் தலையணையால் அழுத்துகிறாள். அவர் இறந்து போய் விட, பெருங்குரலெடுத்துப் பல நாட்கள் அழுகிறாள். இருந்த வரைக்கும் அவரைக் கரிச்சு கொட்டினாயே, இப்ப ஏன் அழுகிறாய் என்று கேட்கும் கணவனிடம் சொல்ல வாயெடுத்து பின் அமைதியாகிறாள். சமையலறையில் புழங்கும் போது அந்த டீஸ்பூன் சத்தம் கேட்கிறது. வீடெங்கும் பதட்டத்துடன் ஓடுகிறாள். வரவேற்பறையில் குடித்த தேநீர்க் குவளையில் டீஸ்பூனை தட்டினபடி இருக்கிறான் கணவன்.

இதைச் செய்த கொலையை மறைத்த பெண் என்னும் கோணத்திலும் பார்க்கலாம். அதே வேளை வீடு என்பது பெண்ணின் மேல் எத்தனை வன்முறையைப் புகுத்துகிறது என்பதாகவும் பார்க்கலாம். சென்ற வார நிவேதா கட்டுரையை வாசித்து ஒரு பெண் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்.

அக்கா,

உங்கள் கட்டுரைகளை வாசிக்கிறேன். நிவேதா பற்றி எழுதின கட்டுரையை நான் அழுதபடி தான் வாசித்தேன். பின்னே? என் வாழ்க்கைப் பற்றி அல்லவா எழுதி இருக்கிறீர்கள். நான் என்றால் நான் அல்ல. என் அம்மா.

என் அப்பா நான் பிறந்த இரண்டாவது வாரமே இன்னொரு பெண்ணுடன் சென்று விட்டார். அம்மா ஒரு சாப்பாட்டுக் கடை வீட்டுத் திண்ணையில் வைத்திருந்தாள். நல்ல பெயர் அந்தக் கடைக்கு. எங்கள் ஊரில் பெரிய ஹோட்டல் வைத்தவர் அம்மாவிடம் பலகார ஆர்டர்கள் கொடுக்க வருவார்.

வெகுகாலத்திற்குப் பிறகே அந்த ஆர்டர்களுக்கு கூலியாக என் அம்மாவை தன்னுடன் இருக்க வற்புறுத்தியது. தீராத அழுத்தங்களுடன் அம்மா நெஞ்சு வலியால் செத்துப் போனாள். பின் என்னை வேட்டையாட நினைத்தது அந்தப் புலி. நான் படித்து இன்று சென்னையில் நல்ல வேலையில் இருக்கிறேன்.

பாலியியல் தொல்லைகள் இங்கும் இருக்கிறன. எனினும் நான் மனம் தளர்ந்து போவதில்லை. இப்படியும் இருக்கிறார்கள் பெண்கள் என்று இந்தக் கடிதத்தின் மூலமாக வெளியே சொல்லுங்கள் அக்கா.

இப்படிக்கு

அன்புக்கரசி.

அன்பு, நீங்கள் பெண்ணரசி.

கட்டுரையாளர் குறிப்பு : எழுத்தாளர் தமயந்தி

ஒடுக்கப்பட்ட பெண்களின் சார்பில் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர். இவரது 'அக்கக்கா குருவிகள்', ' சாம்பல் கிண்ணம்' சிறுகதைத் தொகுப்புகள் வாசகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றவை. இவரது முக்கிய கட்டுரைத் தொகுப்பு 'இந்த நதி நனைவதற்கல்ல'. திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். இயக்குநர் மீரா கதிரவனின் 'விழித்திரு' திரைப்படத்தில் வசனமும், பாடலும் எழுதியுள்ளார்.

வல்லமை தாராயோ - 1 -தமயந்தி

வல்லமை தாராயோ - 2-தமயந்தி

வல்லமை தாராயோ - 3-தமயந்தி

வல்லமை தாராயோ - 4-தமயந்தி

வல்லமை தாராயோ - 5-தமயந்தி

வல்லமை தாராயோ - 6-தமயந்தி

வல்லமை தாராயோ - 7-தமயந்தி

வல்லமை தாராயோ - 8-தமயந்தி

வல்லமை தாராயோ - 9 - தமயந்தி

வல்லமை தாராயோ:10- தமயந்தி

புதன், 31 மே 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon