மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 7 ஜுன் 2017

சிறப்புக் கட்டுரை: வல்லமை தாராயோ - 12 - தமயந்தி

சிறப்புக் கட்டுரை: வல்லமை தாராயோ - 12 - தமயந்தி

மயில்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். மயில்களின் காதல் வாழ்க்கை குறித்து எனினும் எனக்குப் பெரிதாக எந்த விவரமும் தெரியாத நிலையில் ராஜஸ்தானி நீதிபதி மகேஷ் சந்திர ஷர்மாவின் விளக்கம் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. கண்ணீரின் வழி கர்ப்பம் தரிக்கும் உன்னதமான வழிமுறைகளை அவர் கூறுவதை ஏன் இந்த சமூகம் புரிந்து கொள்ளவில்லையென எனக்கு மிகவும் கிலேசமாக இருக்கிறது

கண்ணீரில் மயில் கர்ப்பமாகும் அந்தச் சூட்சமத்தை அறிந்துகொள்ள இந்திய அரசாங்கம் ஒரு மருத்துவ குழு நியமிக்க வேண்டும். அதை மட்டும் தெரிந்து கொள்வோமேயானால் சென்னையில் பெரிய கட்டடங்களில் கர்ப்பம் தரிக்க பெரும்தொகை வாங்கும் மருத்துவர்கள் எல்லோருமே கடை மூடிப் போக வேண்டிய நிலைமை ஏற்படும். கண்ணீரின் மகத்துவம் நாடெங்கும் புரிந்து கண்ணீர் சந்தைப்படுத்தப்படும்.

இப்படி மேற்சொன்ன எல்லாவற்றையும் எழுதினால் தமிழக பாஜக-வில் தமிழிசை செளந்தர்ராஜனுக்கு உதவியாய் எனக்கு ஏதும் பதவி தரலாம். ஆனால், அப்படி எழுதி ஒரு புராண கால பம்மாத்தை எவ்வாறு கட்டமைக்க முடியும்? மயில் பிரம்மச்சாரி. அதனால் அது தேசிய பறவை என்று சொல்வதன் பின்னிருக்கும் புனிதம் குறித்த மனோபாவம் மிக கேவலமானது மட்டுமல்ல... ஆபத்தானதும் கூட. பிரதமராயிருக்கும் நரேந்திர மோடிகூட தான் திருமணமானவரென்று அறிவித்ததில்லை. ஒரு பிரம்மச்சாரி பிம்பத்தை ஏன் ஒரு பிரதமர் கட்டமைக்க வேண்டும் என்ற கேள்வியிலிருந்து என்னால் விலக இயலவில்லை. மகேஷ் ஷர்மா பேசுவதெல்லாமே கூட அந்த பிம்பத்தின் தொடர்ச்சியாக தான் பார்க்க முடியும். பார்க்க வேண்டும்.

பிரம்மச்சாரியம் என்பது கிட்டத்தட்ட எல்லா மதங்களிலும் புனிதமாக கருதப்படும் ஒன்று. கன்னி மரியாள் இயேசு கிறிஸ்துவை பெற்றெடுத்தார் என்பதிலிருந்து கத்தோலிக்க பாதிரியார்கள் திருமணம் செய்யக்கூடாது, முதலிரவு நல்ல நேரம் பார்த்து நடக்க வேண்டும் என எல்லாமே மதநம்பிக்கைகளின் அடிப்படையிலான நம்பிக்கைகளும் உடல் பற்றிய அதன் புனிதமற்ற தன்மையை முன்வைக்கும் கருத்தியல்களே.

கற்பு என்று நீண்ட நாள் பேசிக் கொண்டிருக்கும் ஒன்று என்னது என்று இதுவரை யாரும் கண்ணால் பார்த்ததுமில்லை. முழுக்க இது தான் என்று மூச்சு விடாமல் பேசியதுமில்லை. யாரைத் திருமணம் செய்கிறோமோ அவர்களோடே வாழ்வது தான் கற்பு. ஒருவனுக்கு ஒருத்தியே கற்பு- எல்லாம் சரி. இந்த சமூகமும் மனித மனமும் இப்படிதான் இயங்குகிறதா என்ற கேள்வியை புனிதர்களாக நம்மை நாமே கருதிக்கொள்கிற நாம் நம்மையே கேட்டுக் கொண்டோமானால் இந்த பிரம்மச்சாரிய பிம்பங்கள் எல்லாமே பொய்யான மாயைகள் என்பதும் புனிதத்தின் அக்மார்க் உச்சம் என்பது முழுமையானதாக இருக்க இயலாத யதார்த்தமென்பதும் புலப்படும்.

எனக்கொரு பெண் சமீபத்தில் முகநூலில் வல்லமை தாராயோ தொடர் வாசித்து உள்டப்பியில் பேசினார். அவருக்கு ஏற்கனவே அவர் காதலரோடு கல்லூரி படிக்கும் போதே திருமணமாகி விட்டது. திருமணம் என்றால் பக்கத்திலிருக்கும் ஒரு கோவிலில் ஏற்கனவே போட்டிருந்த தங்க செயினை கழற்றி போட்டுக் கொண்டது தான். பிறகு சூழலால் இருவரும் பிரிந்து இருவருக்கும் வேறு வாழ்க்கை அமைந்து விட்டது. ஆனால் மனதில் இன்னும் தன் காதலரை அழிக்க முடியவில்லை என்பது விடவும் இப்போது வாழும் வாழ்க்கைக்கு தான் நேர்மையாக இல்லையோ என்ற பயமும் தான் காரணமாக இருக்கிறது. அவர் கேட்ட ஒரு கேள்வி மிக முக்கியமானது. நான் கறைப்பட்டவளா. இரண்டாவது கேள்வி..என் காதலருடன் நான் படுக்கையை பகிர்ந்ததில்லை. அவர் தோள் சாய்ந்த போது உதட்டில் சிறுமுத்தம் மட்டும் கொடுத்தார். ஆனால், இன்று என் மனநிலை நிம்மதி இழந்து மிக மோசமாக மனநல மருத்துவர்களை நாடிச் செல்லும் நிலையில் உள்ளது. மாத்திரைகள். மாத்திரைகள். கிட்டத்தட்ட எல்லா மருத்துவர்களும் என் தற்போதைய கணவரின் நண்பர்களாயிருப்பதாலும் இன்னும் சிலர் அப்படி இருக்கக் கூடுமோ என்ற என் சந்தேகத்தாலும் என்னால் யாரிடமும் நிஜத்தை சொல்ல முடியவில்லை என்று எழுதினார். மனதிலுள்ள பல அடுக்குகளை அவர் ஒரு.மாய முடிச்சைக் கொண்டு அவிழ்ப்பது போலெனக்கு இருந்தது.

மயில் பிரம்மச்சாரி, அதன் கண்ணீரால் ஆண்மயில் கர்ப்பம் தரிக்கிறது என்ற கருத்துள்ள தேசத்தில் இது போன்று தான் பெண்கள் சிந்திக்கவும் தங்களைத் தாங்களே வெளியே சொல்ல இயலாத இனம் புரியாத மனசித்திரவதைகளுக்கும் ஆளாகிக் கொள்ள முடியும். இதை மறைமுகமாக நம் அரசியல் மற்றும் மதம் தொடர்பான மனிதர்கள் தாம் புனித கருத்தியல்களாக உருவாக்கி கருத்துரையாடல்களாய் உலவ விடுகிறார்கள்.

மயில் உடலுறவு கொள்ளும் காட்சிகளாய் நிரம்பிக் கிடக்கிறது சமூக வலைத்தளம் இதன் தொடர்ச்சியாய். இப்படி தான் நம் சமூகம், நாம், நீங்களும் நானும் எல்லோருமே ஒரு விஷயத்தை அணுகுகிறோம். இவ்வுலகில் காமமுறாத உயிர் எது. தீபா தன்ராஜிம் ஆவணப்படமொன்றில் ஒரு பெண் இரவு தன் மேல் மூட்டை மாதிரி படுத்துக்கிடக்கும் தன் கணவனைப் பற்றி அவர் பேசும் போது ஒரு சிறகு உதிர்க்கும் பறவை போல. ஒட்டுமொத்த சமூகத்தின் மையமாய கண்களின் போலித்திரையைக் கிழித்து அவர் தன் நேர்மையான உணர்வை பதிவு செய்வார். அந்த குரல் இதை எழுதும் இந்த நொடி கூட இந்த வரியினூடே ஒலித்தபடியே இருக்கிறது. அந்த நேர்மை தான் புனிதம். ஒரு பெண்ணால் தன் முன்னாள் காதல்களையோ அதன் தற்கால அவஸ்தைகளையோ, அதே போல் ஒரு ஆணால் தன் மனஒட்டங்களை தங்கள் இணைகளிடம்.பேசிக் கொள்ளாத, கொள்ள முடியாத, பேசினாலும் அச்சமயம் அதைக் கடந்து பிறகு அந்த வடுவைக் கிழித்து காயப்படுத்தும் ஒரு சமூகமாகவே நாம் வாழ்கிறோம்.

ஒருவரால் ஒரு உறவில் எல்லா உணர்வுகளையும் தர இயலாதென பாலிபார்பஸ் என்னும் முறையில் வாழ்வது பற்றி ஒரு கட்டுரை சமீபத்தில் ஆங்கிலத்தில் படித்தேன். எப்படி ஒரே மனிதரால் ஒரு உறவில் நண்பராக, காதலராக, கணவர், மனைவியாக, குடும்ப நிர்வாகியாக இருக்க இயலும்..அது சிரமம் அல்லவா? என்பதால் இருவருக்கும் தெரிந்தே வேறு உறவுகளில் ஈடுபடுகிறார்கள். பாலிகாமஸ் எனப்படும் பலதிருமண உறவுக்கும் இதற்குமான உறவின் தளத்தில் வேறுபாடுகள் உண்டு. இவையெல்லாம், நம் சமூகத்தில் நமக்குத் தெரிந்த மனிதர்களிடம் இருக்கும் உறவுமுறைகளே.

இந்த வாரம் வந்த மின்னஞ்சலும் இதைப் போலொரு குரலையே சொல்கிறது.

அக்கா, உங்கள் பதிவு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது. போதனைகள் இல்லை என்பதாலேயே உங்களை உங்கள் எழுத்துக்கள் வாயிலாக பிடித்திருக்கிறது. ஆனால், நிஜவாழ்வில் எதிலுமே உண்மையாக இருக்க முடியவில்லை. நான் ஒரு பிரபல வழக்கறிஞரின் இரண்டாவது மனைவி. பலர் பாஷையில் வைப்பாட்டி. நல்ல மனிதர்தான். ஆனால், என்னை காயப்படுத்துவதெல்லாம் பொது வெளியில் அவர் என்னை நிராகரிக்கும் போது தான். அவரும் நானும் சேர்ந்து இரவில் தான் வெளியே போக முடியும். அதுவும் வெகுதூரம் போனால் தான் காரையே நிறுத்துவார். ஒருமுறை எனக்கு அவசரமாக சிறுநீர் கழிக்க காரை நிறுத்த சொன்னதற்கு தெரிந்த இடம்..கொஞ்சம் பொறுத்துக்க என்று தள்ளி போய் நிறுத்தினார். இதிலென்ன வலி..புரிந்து கொண்டு தானே இந்த உறவில் ஈடுபட்டாய் என்று கேட்கிறார்.

என்ன செய்வது..இந்த உறவிலிருந்து விலகி விடவா?

என்ன சொல்வது? உங்கள் வாழ்வு உங்கள் தேர்வு சகோதரி. நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் வலிகள் நிறைந்த உறவில் மகிழ்ச்சியிருக்க முடியாது. அதிகமாக அடகு வைக்கும் நேசம் தான் இறுதியில் மன அயர்ச்சிக்கு வழிவகுக்கும்.

தீர யோசித்து முடிவெடுங்கள். பிரிவதெனினும் நண்பர்களாகப் பிரியுங்கள். அல்லது, அவரை சமூகத்திற்கு உங்களை அறிமுகம் செய்யச் சொல்லுங்கள்.

வாழ்த்துக்கள். எதுவாக முடிவிருப்பினும்.

அடுத்தவாரம் மீண்டும் சந்திப்போம்..

உங்களுக்குப் பகிர இயலாத, தயக்கம் நிறைந்த பிரச்னைகள் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் என்னிடம் பகிரலாம் நீங்கள் மின்னஞ்சலில்.

[email protected]

உரையாடுவோம்...

கரையேறுவோம்...

கட்டுரையாளர் குறிப்பு: எழுத்தாளர் தமயந்தி

ஒடுக்கப்பட்ட பெண்களின் சார்பில் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர். இவரது 'அக்கக்கா குருவிகள்', ' சாம்பல் கிண்ணம்' சிறுகதைத் தொகுப்புகள் வாசகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றவை. இவரது முக்கிய கட்டுரைத் தொகுப்பு 'இந்த நதி நனைவதற்கல்ல'. திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். இயக்குநர் மீரா கதிரவனின் 'விழித்திரு' திரைப்படத்தில் வசனமும், பாடலும் எழுதியுள்ளார்.

வல்லமை தாராயோ - 1 - தமயந்தி

வல்லமை தாராயோ - 2 - தமயந்தி

வல்லமை தாராயோ - 3 - தமயந்தி

வல்லமை தாராயோ - 4 - தமயந்தி

வல்லமை தாராயோ - 5 - தமயந்தி

வல்லமை தாராயோ - 6 - தமயந்தி

வல்லமை தாராயோ - 7 - தமயந்தி

வல்லமை தாராயோ - 8 - தமயந்தி

வல்லமை தாராயோ - 9 - தமயந்தி

வல்லமை தாராயோ - 10 - தமயந்தி

வல்லமை தாராயோ - 11 - தமயந்தி

புதன், 7 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon