மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 ஜுன் 2017

சிறப்புக் கட்டுரை: வல்லமை தாராயோ - 13 - தமயந்தி

சிறப்புக் கட்டுரை: வல்லமை தாராயோ - 13 - தமயந்தி

ஒரு வாரம் என்பது ஏழு நாட்கள் என்றால் அந்த ஏழு நாட்களில் ஏழுக்கும் மேலான சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடைபெறுகிறது . ஆனாலும் இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். மோடி அரசின் சிறப்புகளில் ஒன்று ஒடுக்கப்பட்டோரின் வலிகளையும் பிரச்னைகளையும் புறம் தள்ளுவதென ஆகிவிட்டது.

சேலத்தில் பேருந்தில் நடைபெற்ற பாலியல் வன்முறையின் உச்சகட்ட கொடுமையே அது மூவரால் திட்டமிடப்பட்டு ஒரு சிறுமியின் மேல் நிகழ்த்தப்பட்டதுதான். அப்பெண் வீட்டை விட்டு ‘ஓடி’ வந்து விட்டாள். அப்படிப்பட்டவருக்கு என்ன மாதிரியான விஷயம் நடக்கும். இப்படி தான் செய்வாங்க. ஓடிப் போனதுக்கு இதுதான்அனுபவிக்கணும் என்று அடுத்த நாள் தேநீர்க் கடையில் செய்தித்தாள் வாசித்து ஒரு பெரியவர் - வயதில் மட்டும் - பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். பிரபஞ்சனின் ஒரு சிறுகதையில் ஓடிப் போனாளா... இல்லையே... நடந்துதானே போனாள் என்று அவர் கிண்டலாகக் குறிப்பிடுவது ஞாபகம் வந்தது.

ஏழு மணி நேரம் ஓமலூருக்கும் சேலத்திற்குமான பேருந்தில் அங்கும் இங்கும் ஒரு பெண் போகிறாள் என்றால் என்ன அர்த்தம்? அவள் இரண்டாவது முறை அப்படி செய்யும்போது ஓட்டுநரும் நடத்துநரும் அதை அறியாமல் இருக்க மாட்டார்கள். ஆனால் நடந்ததை வைத்துப் பார்க்கும்போது அவர்கள் அப்போதே இத்தகைய ஒரு வன்முறைக்குத் திட்டமிட்டிருக்க வேண்டும். அப்பேருந்தில் பயணித்த யாருமே ஏழு மணி நேரம் ஒரு பெண்ணின் தனிமையை, துக்கத்தை அறிந்தோ புரிந்தோ கொள்ள முயற்சிக்காதது தான் இன்றைய நவீன் காலத்தின் பெருஞ்சிக்கலாய் இருக்கிறது.

ஒரு பெண் வீட்டைவிட்டு அந்த வயதில் ஏன் வெளியேற வேண்டும். கல்வியும் வறுமையும் மிகப் பெரிய அழுத்தங்களாகின்றன. இன்னொன்று காதல். காதலும் காமமும் சாதாரண விஷயங்களாக கருதப்படும் நாள்வரை அவை பற்றிய மாய பிம்பங்களில் சிக்கி வாழ்வை பல இளம்பருவ இளைஞர்கள் இழந்து கொண்டிருக்கிறார்கள்.

இரண்டு பேருந்து ஓட்டுநர்களும் நடத்துநரும் இதை நிகழ்த்தியிருக்கிறார்கள். அவர்கள் வெகுவிரைவில் ஜாமீனில் வந்தும் விடுவார்கள். தலைநகரில் இது நிகழ்ந்திருந்தால் இதற்குள் அரசியல் கட்சி அறிக்கைகள் பறந்திருக்கும். ஆனால் இங்கு அரசியல் கட்சிகள் மவுனம் காக்கின்றன. எடப்பாடிக்கும் ஓபிஎஸ்ஸுக்குமான இடைவெளியை குழி தோண்டவே மோடிக்கு நேரம் சரியாகி விடும்போது சேலம் சிறுமிக்கு நடந்த உச்சபட்சக் கொடுமையை எப்படி அரசியல் கட்சிகள் கவனத்தில் கொள்ளும். அப்படி கொள்ள வேண்டும் என்று நாம் கேட்பது எத்தனை பெரிய அயோக்கியத்தனம். பேருந்தில் காமவேட்டையாடிய மூவருக்கும் அரசியல் காமத்தில் சமூக அவலங்களைக் கண்டுகொள்ளாதவர்களுக்கும் பெரும் வித்தியாசமில்லை.

அதே போல நாகர்கோவிலில் ஒரு பெண் தன் இரண்டு பெண் குழந்தைகளைக் கொன்ற சேதி வெகுசாதாரணமாய் ஒரு தொலைக்காட்சியில் உச்சரிக்கப்படுவதைப் பார்க்கிறேன். உலகமே ஒரு கணம் சுற்றுகிறது. இரண்டு பெண்களா, இரண்டு உயிர்களா என்றால் இரண்டு பெண்கள் என்று தான் அவருக்கு தன் குழந்தைகள் பற்றியே தோன்றுகிறது. தாய்ப்பாசம் பற்றிய அரூபங்கள் எல்லாமே மாயைதான். ஆனாலும் சின்னஞ்சிறு சிசுக்களை மூச்சழுத்தி செய்யும் கொலையை எப்படி சாதாரணமாக கடந்து விட முடியும். கல்வியில் சிறந்த கன்னியாகுமரி என்று சொன்னாலும் நாகர்கோவில் எல்லைக்குள்ளேயே தமிழ்நாட்டில் வேறெங்கும் மாப்பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படாத அளவிற்கான வரதட்சணைப் பணமும் கிலோ கணக்கில் நகையும் கொடுக்கப்படுகிறது – ‘போடப்படுகிறது’ என்பதே அந்த ஊரின் பேச்சு மொழி. எங்கள் ஊரான திருநெல்வேலி பக்கம் நாகர்கோவிலில் பெண் எடுத்தால் பணம் கிடைக்கும். ஆனால் பையனை பிறகாய் மறந்துவிட வேண்டும் என்ற பேச்சு வழக்கில் உண்டு.

மராத்தியில் ஒரு குறுந்திரைப்படம் பார்த்த ஞாபகம் வருகிறது - மேன்லியஸ்ட் ஆஃப் த மேன். ஆண்களின் ஆணானவன் என்று பொருள்படும். ஒரு சிறு மராட்டிய கிராமம். அங்கு பெண் குழந்தை பிறந்தால் ஒரு வயதான பெண் நதியில் மந்திரம் சொல்லி மூழ்கடித்து விடுவார். அது மட்டுமல்ல, அக்குழந்தையின் தந்தை ஆண்மையற்றவன் என்று பஞ்சாயத்தில் முத்திரை குத்தப்பட்டு ஆண் குழந்தை ஏற்கெனவே பெற்றெடுத்த ஒருவரை அவர் மனைவியுடன் உடலுறவு கொள்ள பஞ்சாயத்து அனுமதிக்கும்.

குழந்தையின் அப்பா மிகுந்த அவமானமடைகிறார். தன் குடிசைக்குள் ஏற்கெனவே ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்த கிராம மருத்துவர் நுழைவதைப் பார்த்து போதை ஏற்றிக்கொண்டு கிராம தலைவரிடம் போய் உட்கார்ந்து ஒரு கேள்வி கேட்கிறான் - உங்கள் குழந்தையின் சடலத்துக்கான சவக்குழியை நீங்களே வெட்டியிருக்கிறீர்களா என்று. அவர் ஒருகட்டத்தில் ஏதும் பேச அற்றுப் போக மீண்டும் வீட்டுக்கு வந்து மனைவியுடன் உடலுறவில்.இருக்கும் கிராம மருத்துவரை கல்லைத் தலையில் போட்டு கொலை செய்து விடுகிறான்.

பெண் என்றால் செலவு. இந்த மூன்று வார்த்தைகள் கொண்ட ஒற்றை வரிதான் பெண் சிசுக் கொலைக்கான முழுமுதல் காரணம். வரதட்சணை வாங்குவதைப் பார்த்து இந்த அரசாங்கம் சாட்சியாய் இருக்கும்வரை இந்நிலைதான் நிகழும். இதுவரை சட்டங்களாய் , தீவிர செயல்படுத்துலுக்கு ஆளாகாத விஷயங்கள் இத்தகைய கொடூர செயல்களுக்குத்தான் வழி வகுக்கும். சிசுக்கொலை மற்றும் வரதட்சணை கொடுமை நிகழும் இடங்களில் அந்த ஊர் எம்.எல்.ஏ-க்கும் வி.ஏ.ஓ-வுக்கும் சேர்த்து தண்டனை கொடுத்தால் தான் சில குற்றங்களைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். அப்படியொரு நிலை வந்தால் எம்.எல்.ஏ. தேர்தலுக்கு எத்தனை பேர் நிற்பார்கள் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி தான்.

அன்புள்ள தமயந்தி அக்கா

உங்கள் கட்டுரைகளை நான் படிக்கிறேன். எல்லாம் வாசிக்க நன்றாக உள்ளது. ஆனால், செயல்படுத்துவதில் சிரமம்தான். குறிப்பாக காமம் பற்றி நீங்கள் எழுவது. காலை அகட்டி உட்காராதே இல்லை என்று ஆரம்பிக்கும் மறைமுக எச்சரிக்கைதான் அது. கால்களிடையில்தான் என் ஒட்டுமொத்த புனிதமும் இருக்கிறது என்று நான் அறிந்ததே என் முதலிரவன்று. பார்த்த உடனே ஒரு ஆணிடம் என் நிர்வாண உடலைக் காட்டுவதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ஆனால், இன்று வரை, ஐந்து வருடமாகியும் அதே வாழ்க்கை தான். குழந்தையுமில்லை என்பதால் ஏதோ எனக்கு கடாட்சம் செய்யும் மனநிலையில் உடலுறவு கொள்பவரை என்ன சொல்ல முடியும்? அருவருப்பின் செதில்களில் வாழ்கிறேன். உங்கள் எழுத்தில் ஆறுதலின் போதை இருக்கிறது. நான் சல்மா கவிதைகளின் ரசிகை. என்றாவது சிறைகள் உடைபடும் . வாழ்க்கை சிறகாகும் என்று நம்புகிறேன். உடனிருங்கள் உங்கள் எழுத்தால்

ஸ்ரிநிதி.

நன்றி ஸ்ரிநிதி..நாமெல்லோரும் உடனிருத்தல் மூலமாய் சிறகுகள் வளர்ப்போம்.

அடுத்தவாரம் மீண்டும் சந்திப்போம்..

உங்களுக்குப் பகிர இயலாத, தயக்கம் நிறைந்த பிரச்னைகள் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் என்னிடம் பகிரலாம் நீங்கள் மின்னஞ்சலில்.

[email protected]

உரையாடுவோம்...

கரையேறுவோம்...

கட்டுரையாளர் குறிப்பு: எழுத்தாளர் தமயந்தி

ஒடுக்கப்பட்ட பெண்களின் சார்பில் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர். இவரது 'அக்கக்கா குருவிகள்', ' சாம்பல் கிண்ணம்' சிறுகதைத் தொகுப்புகள் வாசகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றவை. இவரது முக்கிய கட்டுரைத் தொகுப்பு 'இந்த நதி நனைவதற்கல்ல'. திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். இயக்குநர் மீரா கதிரவனின் 'விழித்திரு' திரைப்படத்தில் வசனமும், பாடலும் எழுதியுள்ளார்.

வல்லமை தாராயோ - 1 -தமயந்தி

வல்லமை தாராயோ - 2-தமயந்தி

வல்லமை தாராயோ - 3-தமயந்தி

வல்லமை தாராயோ - 4-தமயந்தி

வல்லமை தாராயோ - 5-தமயந்தி

வல்லமை தாராயோ - 6-தமயந்தி

வல்லமை தாராயோ - 7-தமயந்தி

வல்லமை தாராயோ - 8 - தமயந்தி

வல்லமை தாராயோ - 9 - தமயந்தி

வல்லமை தாராயோ - 10 - தமயந்தி

வல்லமை தாராயோ - 11 - தமயந்தி

வல்லமை தாராயோ - 12 - தமயந்தி

புதன், 14 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon