மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

சட்டக்கல்லூரி மாணவியைச் சீரழித்த 12 மிருகங்கள்...!

சட்டக்கல்லூரி மாணவியைச் சீரழித்த 12 மிருகங்கள்...!

பெண்கள் மீது,எப்போதும் பாலியல் துன்புறுத்தல்களும் காமவெறித் தாக்குதல்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பொதுவாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் சைக்கிளில் சென்றாலும், பேருந்தில் சென்றாலும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் தான் ஏற்பட்டுள்ளது, தமிழகத்தில்.

சமீபத்தில் தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை அருகில் உள்ள வடகத்தூர் கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவியை வனப்பகுதியில் சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை ஜூன் 9ஆம் தேதி மதியம் 1 ½ மணியளவில், சட்டக் கல்லூரி மாணவி, வீட்டு வேலையாக உறவுக்காரர் ரஞ்சித்டன், பைக்கில் சென்றார். அப்போது வீட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் பதிக்கால் பள்ளம் வனப்பகுதி அருகில் சென்ற போது, வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கவே, அருகிலிருந்த நிழல்பாங்கான பகுதியில் நின்றிருக்கிறார்கள்.

அப்போது, அந்தப்பகுதியில் ஏற்கெனவே குடித்துக்கொண்டிருந்த 12 காமமிருகங்கள் பார்வையில் எதேச்சையாகப் பட்டுவிட்டார், அந்த சட்டக்கல்லூரி மாணவி. பின், அவரை நோக்கி ஒருவர் பின் ஒருவராக 12 பேரும் வருவதைப் பார்த்த உறவுக்காரர் ரஞ்சித், ஏதோவிபரீதம் நடக்கப்போகிறது என உணர்ந்து, மாணவியுடன் சாலையை நோக்கி நகர்ந்தார். அப்போது அவர்களை, சுற்றிவளைத்த அந்த காமவெறிகும்பல் ரஞ்சித்தை அடித்து மயக்க நிலைக்கு ஆளாக்கியுள்ளனர். பின், சிறிது நேரத்தில் 12 காமமிருகங்களும், அப்பெண்ணை பாலியல் சித்ரவதைக்கு ஆளாக்கியிருக்கிறது. இதில் அக்கும்பலில் இருந்த மணிகண்டன் எதிர்த்து கேட்டதால், அவனையும் சக நண்பன் என்றும் பாராமல் அடித்துக் கொலைசெய்து, அதியமான்கோட்டை காவல் நிலையம் அருகில் தூக்கி வீசிட்டு சென்றதாக, சந்தேகம் தெரிவிக்கின்றனர், அப்பகுதி மக்கள்.

பின்னர், சிலமணிநேரங்களுக்குப்பின் அப்பகுதிக்கு வந்த சில கிராமத்து மக்கள், அப்பெண்ணை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து கடந்த 8 நாட்களாக அறிந்தும், போலீஸார் பெரியளவில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் கமுக்கமாக வைத்துள்ளனர். ஏனெனில், சட்டமன்றக்கூட்டத்தொடர் நிகழ்வதால், பெண்ணை 12 பேர் சேர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் பெரியளவில் வெடிக்கும் என்பதுவே, அதற்கான முக்கியக் காரணம். அதேபோல் அந்தக்காமவெறிகும்பலுடன் இருந்த மணிகண்டன் கொலைசெய்யப்பட்ட வழக்கையும், இ.பி.கோ 174 பிரிவின்படி சந்தேக மரணம் என எழுதி ஃபைலை முடித்துள்ளனர்.

இச்செய்தி ஊடகவாசிகளுக்கு மெல்ல கசியத்தொடங்கியதும், அப்பெண்ணை சீரழித்தவர்கள் என குற்றம் சாட்டி சூரி, சூரியா, பார்த்திபன், ஆனந்த், வேளாங்கன்னி ஆகியோரைக் கைது செய்துள்ளது, தர்மபுரி பி-1 காவல்நிலைய போலீஸார். மேலும் விமல் என்பவனை போலீஸ் தேடிவருகிறது.

இந்தக்கூட்டு பாலியல் துன்புறுத்தல் கும்பலில் தர்மபுரி மாவட்டத்தில் பெரும்பான்மையாக இருக்கும் வன்னியர், வெள்ளாள கவுண்டர், தலித், சமத்துவகும்பல் ஆகிய பல சாதியினர் கலந்துஇருக்கின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவி, வன்னியர் என்பதால் தர்மபுரியில் பதட்டம் காணப்படுகிறது என்றார் ஒரு போலீஸார்.

இதுகுறித்து மாவட்ட எஸ்.பி. பண்டித் கங்காதரர் கூறிய போது, 'அந்த மாணவியும், அவரது நண்பரும் அந்த ஃபாரஸ்ட் பகுதிக்குப் போனபோது, அந்தப்பகுதியில் போதையிலிருந்த கும்பல், அப்பெண்ணிடம் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்கள். அப்போது அந்தப்பகுதி மக்கள் பார்த்து விரட்டும்போதுதான், ஒருவன் பயந்து ஓடி விழுந்து இறந்துவிடுகிறான். அவ்வளவுதான் மற்றபடி, ரேப் எதுவும் நடக்கவில்லை. இருந்தாலும், இந்த வழக்கைத் தீவிரமாக விசாரித்து வருகிறோம்' என்றார்.

தற்போது அந்த அபலைப்பெண், தர்மபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதையறிந்து, அவரைச் சந்தித்து ஆறுதல் கூறுவதுபோல் பேசி அரசியல் ஆதாயத்தைப் பெறத்துடிக்கின்றன சில கரை வேட்டிகளும், பெண் பாதுகாவலர்களும்.

- காசி

வெள்ளி, 16 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon