மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 21 ஜுன் 2017

சிறப்புக் கட்டுரை: வல்லமை தாராயோ - 14 - தமயந்தி

சிறப்புக் கட்டுரை: வல்லமை தாராயோ - 14 - தமயந்தி

இன்றைய நவீன உலகில் பெண்கள்முன் பல சவால்கள் உள்ளன. பல துறைகளில் அவர்கள் பங்குகொள்கிறார்கள் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், பெண்களுக்கான சுயமரியாதை எல்லா இடங்களிலும் கிடைக்கிறதா என்றால் மிகப் பெரிய மவுனமே பதிலாய் கிடைக்கிறது.

நிறம் பெண்களின் வாழ்வில் ஒரு முக்கியப் பங்கை ஆற்றுகிறது. நான் கல்லூரியில் படிக்கும்போது ‘நல்ல’ நிறமுடையவளாய் அறியப்படுவேன். ஆனால், அதன்பின் என் வாழ்வில் சந்தித்த இடர்களும் அதுதொடர்பான மனச்சிக்கல்களும் மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தியதோடு மன அயர்ச்சிக்காகச் சாப்பிட்ட மாத்திரைகளின் பக்கவிளைவாய் தோலின் நிறமும் மாறிவிட்டது. முன்பு பார்த்தவர்களை சந்திக்கும்போதெல்லாம் பல்வேறு சமயங்களில் நான் எதிர்கொள்ளும் கேள்வி, ‘என்ன இப்படி கறுத்திட்ட?’

கறுப்பு என்பது எப்போதுமே நல்லதுக்கு எதிரான, நல் விழுமியங்களுக்கு மாற்றான ஒரு விஷயமாகவே மொழி அரசியலிருந்து சமூக அடையாளங்கள் வரை அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது. கறுப்பான பெண்களின் விலை திருமண வரதட்சணைச் சந்தையில் அதிகமாகவே உள்ளது. எப்போதும் இருக்கும் நிலவரம் அப்படிதான். வெள்ளை நிற தோலுடைய மாப்பிள்ளைகள் கறுப்பு நிற தோலுடைய பெண்ணைத் திருமணம் செய்துகொண்டால் பொதுசமூகம், ‘நிறைய வரதட்சணை வாங்கிட்டு கட்டிருப்பான்’.

நிறைய பணத்துக்காக மட்டுமே கறுப்பான நிறப் பெண்களை ஓர் ஆண் கல்யாணம் செய்யும் மனநிலையைப் பெற்றிருக்க முடியுமென இந்தச் சமூகம் நம்புகிறது. வெள்ளைக்காரர்கள் நம்மை ஆண்ட அடிமைத்தன மனநிலை நம்மை இப்படியான நிறபேத மனநிலைக்குள் சிக்கவைத்திருக்கலாம்.

பலவிதமான சிக்கலான மனக் கட்டமைப்பிலிருந்து நம்மை நம் அரசோ அல்லது சமூக நீதியோ விடுவிக்கவில்லை. ஆனால், மாற்றாக இன்னும் பல சிக்கல்களுக்குள்ளாகவே நம்மை அது சிறைப்படுத்துகிறது. ராஜஸ்தானில் நடைப்பெற்ற ஒரு சம்பவம் அதையே காட்டுகிறது. தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் ராஜஸ்தானில் அரசு அதிகாரிகள் சிலர் கிராமங்களில் கழிவறை குறித்து புகைப்படங்கள் எடுக்க வந்திருக்கிறார்கள். அங்கு சில பெண்கள் பொதுவெளியில் மறைவிடங்களுக்குப் பின் மலம் கழிக்க சென்றபோது புகைப்படங்கள் எடுக்க முயற்சித்திருக்கிறார்கள். அதைத் தட்டிக்கேட்ட உறவினரை அடித்திருக்கிறார்கள். அவர் இறந்திருக்கிறார்.

செய்தி போல் இதை வாசிக்கும்போதும்கூட அடுத்தச் செய்தியை கண்ணும் மனமும் தேடுவதற்கு முன் சிறு ஆசுவாசம் தேவைப்படுகிறது. ஆனால், இப்போதும் தங்களை அரசுப் பணி செய்வதைத் தான் சம்பந்தப்பட்ட நபர் தடுத்ததாக அந்த அரசு அதிகாரிகள் சொல்கிறார்கள். எது அரசு பணி? பெண்கள் மறைவிடங்களில் மலம், சிறுநீர் கழிப்பதை புகைப்படம் எடுப்பதா?

பெண்களின் சுயமரியாதையைக் கொல்வதே அரசின் முக்கியக் கொள்கையாகிவிட்டது. தீபாவின் போயஸ் கார்டன் வருகையை ஒட்டி ஒரு தமிழ் ஊடகம் வெளியிட்ட தலைப்பு செய்தி அத்தனை கொச்சையானதாக இருந்தது. ‘சொப்னசுந்தரியை யார் வைச்சிருக்காங்க?’ என்ற கேள்வியை முன்வைத்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பின் கொச்சையான கேவலமான மனநிலை ஈ போல சுற்றுகிறது.

எல்லா தளங்களிலும் பெண்கள் சந்திக்கும் மனரீதியான நுட்பமான அதிகார அடுக்குமுறைகளுக்கு இங்கு நீதியே கிடையாது. ஏன், அது குறித்த புகார்கூட பெரும்பாலும் கிடையாது.

கறுப்பு நிறப் பெண்களுக்கான ஊக்கமாக இருக்கட்டும் அல்லது பொதுதளத்தில் அவர்களின் உடலரசியல் மீது செலுத்தப்படும் அதிகார அடக்குமுறைகளாகட்டும், இவைகளுக்கு எதிராக போராடும் குரல்கள் மிக வலுவற்றுதான் இருக்கின்றன. இந்த வாரம் வரலட்சுமி சரத்குமார் அரசுக்கு தன் ‘சேவ் ஷக்தி’ இயக்கம் மூலம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும் பாலியியல் புகார்கள் குறித்துமான வழக்குகள் விரைந்து முடிப்பதற்கு அதிகமான நீதிமன்றங்கள் அரசால் நிறுவப்பட வேண்டும் என்று அரசாங்கத்துக்குக் கொடுத்த மனு மிக முக்கியமான ஒன்று. ஆனால், இதுபோன்ற செய்திகள் நம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்படுவதில்லை. அதற்கான காரணம், முக்கியமாக பெண்களின் பிரச்னைகளை ‘சகஜமப்பா சாமி’ கணக்கில் சேர்க்கும் மனநிலைதான். குடும்ப வன்முறைகள் சகஜமானது என்று சொல்லி திருமண வாழ்வில் ஈடுபட வைக்கப்பட்டவள் நான். இந்த சகஜமப்பா மனநிலை தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் செயற்பாடுகளும் சகஜம் என்று ஒப்புக்கொண்டு ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்குக் கொண்டு சேர்க்கிறது.

அந்தியூர் விஜயா தனக்கு நீதி தாமதமானபோது நேர்ந்த விஷயங்கள் எல்லாமே என்னிடம் ஒரு தனி உரையாடலில் சொன்னார். எங்கு தொட்டான் என்று தன்னிடம் கேட்கப்பட்ட எண்ணிக்கை மிக அதிகம் என்று சொன்ன அவரின் கண்களில் வெறுமைதான் இருந்தது.

இங்கு பாலியல் வன்புணர்வுக்குச் சாதி கிடையாது. நியாயமும் கிடையாது. பெண்களுக்கான எந்தவிதமான பாதுகாப்பும் தராத அரசு நியாயத்துக்காக என்ன செய்யும்? வரலட்சுமியின் மனுவுக்கு எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்காடு மன்றங்கள் பெண்களின் வழக்குகளுக்காக அதிகரிக்கப்படுவதென்பது வழக்குகள் துரிதமாக நடைபெற உதவும்.

இந்த வாரம் பல மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன. அதில் பெரும்பாலும் ஆண்கள் எழுதியிருந்தது கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது.

அன்புள்ள தமயந்தி,

வல்லமை தாராயோ முதலில் பெண்களுக்கான தொடரோ என்று தோன்றிற்று. ஆனால், தொடர் வாசிப்பின் மூலம் அது எல்லோருக்குமானது என்று புரிப்பட்டு விட்டது.

நானும் பெரும் குடிகாரனாக என் காதலியை அடித்திருக்கிறேன். சதா அவள் மற்றவரோடு தொடர்புவைத்திருக்கிறாள் என்று அடித்திருக்கிறேன். அவள் என்னை, அதையும் மீறி அன்பு செலுத்தினாள். நான் அவளை உதாசீனப்படுத்தினேன்.

அவளுக்கு இன்னொரு திருமண ஏற்பாடு நடக்க நான் தடுக்கவில்லை. அவள் தற்கொலை செய்து கொண்டாள். அதையே நான் நம்ப பல நாள்கள் ஆனது. ஆனால், அவளின் நேசம் மூலமாக அவள் என்னை எத்தனை அற்புதமான உலகத்தில் வாழ வைத்திருக்கிறாள் என்பது புலப்பட்டது.

அவள் இல்லாத உலகம் எனக்குப் பெண்களை மதிக்கக் கற்றுக் கொடுத்திருக்கிறது. ஆனால், அதை நான் உணர அவள் இறந்திருக்க வேண்டுமா? சாகடிக்க வேண்டுமா?

பல நேரங்களில் நான் ஒரு கொலைகாரனாக என்னையே உணர்கிறேன். ஆனால், வெளிப்படையாக என்னை இந்தச் சட்டம் தண்டிக்காது. குடியை விட்டுவிட்டேன். ஆனால், அவளின் அன்பு திரும்பக் கிடைக்காது. சில நேரம் அவள் போல் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று தோன்றினதுண்டு.

ஆனால் வாழ்தல் தான் எனக்கான தண்டனை.

இதை உங்கள் கட்டுரையில் வெளியிடுவீர்களா என்று தெரியவில்லை. வெளியிட்டால் நான் உங்கள் சகோதரன்.

நன்றி.

கட்டுரையாளர் குறிப்பு: எழுத்தாளர் தமயந்தி

ஒடுக்கப்பட்ட பெண்களின் சார்பில் தொடர்ந்து எழுதிவரும் எழுத்தாளர். இவரது ‘அக்கக்கா குருவிகள்’, ‘சாம்பல் கிண்ணம்’ சிறுகதைத் தொகுப்புகள் வாசகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றவை. இவரது முக்கிய கட்டுரைத் தொகுப்பு ‘இந்த நதி நனைவதற்கல்ல’. திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். இயக்குநர் மீரா கதிரவனின் ‘விழித்திரு’ திரைப்படத்தில் வசனமும் பாடலும் எழுதியுள்ளார்.

வல்லமை தாராயோ - 1 - தமயந்தி

வல்லமை தாராயோ - 2 - தமயந்தி

வல்லமை தாராயோ - 3 - தமயந்தி

வல்லமை தாராயோ - 4 - தமயந்தி

வல்லமை தாராயோ - 5 - தமயந்தி

வல்லமை தாராயோ - 6 - தமயந்தி

வல்லமை தாராயோ - 7 - தமயந்தி

வல்லமை தாராயோ - 8 - தமயந்தி

வல்லமை தாராயோ - 9 - தமயந்தி

வல்லமை தாராயோ - 10 - தமயந்தி

வல்லமை தாராயோ - 11 - தமயந்தி

வல்லமை தாராயோ - 12 - தமயந்தி

வல்லமை தாராயோ - 13 - தமயந்தி

புதன், 21 ஜுன் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon