மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 5 ஜூலை 2017

சிறப்புக் கட்டுரை: வல்லமை தாராயோ - 15 - தமயந்தி

சிறப்புக் கட்டுரை: வல்லமை தாராயோ - 15 - தமயந்தி

சமீபத்தில் மிக முக்கியமான ஓர் அலுவலுக்குப் பணம் எடுத்துகொண்டு நான் கோடம்பாக்கம் சிக்னலைக் கடக்கும்போது மூன்று திருநங்கை சகோதரிகள் காசு கேட்டார்கள். நான் பர்ஸிலிருந்து நாற்பது ரூபாய் எடுத்துக் கொடுத்தப் பிறகு அவர்கள் சட்டென என் பர்ஸைப் பறித்தார்கள். நான் பதற, அவர்கள் நாங்க உன் பணத்தை வாழ்த்தி தரோம் என்று சொல்லி வாங்கி அவர்கள் வாயில் பணத்தை வைத்துக் கவ்வி பின் அதை அவர்களின் அந்தரங்கப் பகுதிக்குள் கொண்டுசென்று பின் சடாரென விலகி ஓடினார்கள்.

அது என் அப்பாவின் கல்லறை கட்டுவதற்காக நான் வைத்திருக்கும் பணம். உண்மை உறைக்க நான் பதைப்பதைத்து, ‘க்கா... அது எங்க அப்பாவுக்குக் கல்லறை கட்ட...’ என்று ஆரம்பிக்க அதில் இருவர் தங்கள் சேலையைத் தூக்கிக் காட்ட ஒருவர் பணத்தை எடுத்துக் கொண்டு என் பர்ஸை மட்டும் எறிந்தார்கள்.

ஒரு நிமிடம் என் கால்களுக்குக் கீழ் உலகம் கழன்று சுழன்று விழுந்தது. தாங்கவொண்ணா ஏமாற்றமும் அது தந்த வலியும் என்னை ஆக்கிரமிக்க நான் அவர்கள் தூரத்தில் நடந்து போக பார்த்தபடி இருந்தேன்.

எப்போதுமே மாற்றுப் பாலின உரிமைகளைச் செயல்படுத்தப்பட வேண்டும் என்று விரும்புவளான எனக்கு அவர்களின் செயல் பெரும் வேதனையைத் தரவே செய்தது. ஒருபக்கம் தங்கள் வாழ்வுக்காக அவர்கள் கல்வி முதற்கொண்டு அரசு தொழில்களை செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள். எத்தனை போராட்டங்களுக்கு மத்தியில் தங்கள் சுயத்தை அவர்கள் நிலைநாட்ட பாடுபடுகிறார்கள். ஆனால், அவையெல்லாவற்றையுமே புறந்தள்ளும் ஒரு சிலரின் செய்கையால் ஒட்டுமொத்த சமூகத்தின் மேலும் பெருங்கறையாவதை அவர்கள் எப்படி அறிவார்கள்? நான் அதை முகநூலில் சற்று வேதனையோடு பதிவிட்டபோது அதற்கு பதில் பதிவாய் பல்வேறு நபர்கள் தாங்கள் அப்படி பணம் பறிக்கப்பட்டதாய் எழுதியிருந்தார்கள். அவர்களில் சிலருக்கு திருநங்கைகள் என்னும் வார்த்தையே பெரும் ஒவ்வாமையாக இருந்தது. அதில் பதிவிட்ட சில முக்கியமான விஷயங்கள் குறித்து திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள்.

பல சமயங்களில் வள்ளுவர் கோட்டத்தில் அவர்கள் இரவு நேரங்களில் நிற்பதைப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் பாலியியல் வர்த்தகத்தின் பொருட்டே அவர்கள் நின்றிருப்பார்கள். அவர்களில் சிலரிடம் பேசும்போது தங்களை ஏற்றுக்கொள்ளாத தங்கள் குடும்பத்தின் தம்பியையோ, தங்கையையோ அவர்கள் படிக்க வைத்திருப்பது தெரியவந்தது.

மாற்றுப்பாலினத்தினரின் அத்தனை சிக்கல்களும் மனரீதியாக சந்திக்க நிறைய மனதிடம் வேண்டும். மற்ற பாலினம் செய்யும் வழிப்பறிகளோ, திருட்டுகளோ பாலினம் சார்ந்து விவாதிக்கப்படாதபோது ஏன் இவர்களின் இத்தகைய செயல் விமர்சிக்கப்படுகிறது? ஒருகணம் ஒரு ஆணோ, பெண்ணோ என் பணத்தை பறித்திருந்தால் எப்படி இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கியிருப்பேன் என்று யோசிக்கிறேன். சிக்னலில் சில ஆண்கள் அல்லது பெண்கள் என்றே எழுதியிருப்பேன். திருநங்கைகள் மேலான ஒட்டுமொத்த சமூக வெறுப்பும் இம்மாதிரி செயல்களால் பரவலாகிறதோ என்று ஆனாலும் முகநூலில் என் பதிவுக்குக் கீழ் பின்னூட்டமிருந்த பலரின் மன ஓட்டத்திலிருந்து அவர்களுக்கு எதிரான ஒரு மனநிலை உருவாகியிருக்கிறது. இவர்களுக்கான வாழ்வாதாரத்தை அரசு ஏற்படுத்தத் தவறும் சூழலில் இவர்கள் இப்படி செய்வதன்மூலம் பொருளாதார தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு சமூகத்தின் மீதான ஒட்டுமொத்தமான கோபத்தையும் காட்டுகிறார்களோ என்று தோன்றுகிறது. ஆனால், இத்தனை அராஜகத்தோடு அவர்களை அன்போடு அணுகுபவர்களை ஏமாற்றும்போது இழப்பென்பது அவர்களுக்குத்தான் என்பதை அறியாமல் இருக்கிறார்களா என்ன?

எது இவர்களை இத்தகைய மனநிலையிலிருந்து மீட்டெடுக்கும்? ஏன் இன்னும் இதிலேயே இவர்கள் சிக்கியிருக்கிறார்கள்? கல்வி, நாடகம் என்று பல திசைகளில் கோலூச்சும் திருநங்கைகளை அவர்கள் ஏன் முன்னுதாரணமாக கருதுவதில்லை?

இது எல்.ஜி.பி.டி. மாதம். மாலினி ஜீவரத்தினம் இயக்கிய ‘லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன்’ ஆவணப்படம் பார்க்கும்போது அவர்களின் மனச்சிக்கலும் உடலியியல் புரிதலும் நம் ஒவ்வொருவரின் முன் அப்பட்டமாக வைக்கப்படுகிறது. ஆனால், வீடு வாடகைக்கு எடுப்பதிலிருந்து ஆயிரம் பிரச்னைகள் அவர்களின் பாலின அடையாளத்தை வெளிக்காட்டும்போது சந்திக்க வேண்டியிருக்கிறது.

சமீபத்தில் தோழர் அமுதன், நகரத்தில் சாதீய தாக்கம் பற்றி ஒரு ஆவணப்படத்துக்காகச் சந்தித்தார். சாதி, மாற்று பாலின அடையாளம் போன்றவற்றை வெளிப்படையாக அல்லாது மறைமுகமாக நகரம் தன் உள்ளடுக்குகளில் அடுக்கிவைத்து சிக்கிக் சிக்கலாக்கி இருப்பதை அவருடனான உரையாடல் வெளிப்படுத்தியது. இந்த பெருநகரம் ஒரு காயசண்டிகையாய் தன் இருகை விரித்துப் பலருக்கு அடைக்கலம் கொடுத்திருப்பதைப் பார்க்கிலும் அவர்களின் வாழ்வியியல் சிக்கல்களை நிழலுலகில் உலவ விட்டிருப்பதாகவே தோன்றுகிறது.

சமீபத்தில் ‘ரோசி’ என்னும் திருநங்கையைச் சந்தித்தேன். வீட்டிலிருந்தபடியே பக்கத்திலிருக்கும் வேலைப் பார்க்கும் நபர்களுக்கு உணவு சமைத்துக் கொடுக்கிறார்.

‘பிச்சை எடுக்குறாங்கக்கா... அவங்களுக்கு மாற்று வேலை கொடுங்க... பணம் தட்டிப் பறிக்காங்கன்னு சொல்றீங்க... நுங்கம்பாக்கம்ல ராத்திரி பத்து மணிக்கு மேல அவங்களை ஏத்திக்க வர்ற பென்ஸ் கார், ஆடி கார் எல்லாம் அவங்களுக்கு என்ன மாற்றா தருது?’ என்று கேட்டார்.

மாற்றாய் தருவதென்பது ஒரு பிரச்னையைத் தீர்ப்பதற்கு மிக முக்கியமாக தேவை. ஆனால், அதை நம் அரசாங்கம் செய்யத் தவறுவதாலேயே இவர்களின் துயர் அராஜகமாக மாறி விடுகிறது. மாற்றின் வேர்கள் நம் சமூகத்தில் வேரூன்றவில்லை. ஓசி பரோட்டாவும் லெக் பீஸ் சாப்பிடும் காவல்துறை அதிகாரிகள் எப்படி இதையெல்லாம் கட்டுப்படுத்துவார்கள்?

இந்த வாரம் ஆச்சர்யமாக ஓர் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்.

அன்புள்ள தமயந்தி

நான் ஆந்திரா பார்டர் ஒன்றில் பாலியியல் தொழில் செழித்து வாழ்ந்த ஒரு பகுதியில் இன்ஸ்பெக்டராக சேர்ந்தேன். அந்தப் பகுதியில் பாலியியல் தொழிலை அழித்துவிடும் மனநிலையில் நான் மிக தீவிரமாக லாட்ஜுகளில் ரெயிட் நடத்தினேன். ஆனால் என்ன ஆனது என்றால் பிடிப்பட்ட பெண்களை அதீத தண்டனை கொடுத்தால் மட்டுமே மறுபடி அத்தொழிலில் ஈடுபட மாட்டார்களென எண்ணி அவர்களை நான் தெருவில் நடக்க வைத்து அடிப்பேன். அவர்களின் கைகள் பிய்ந்து தொங்கும் வரை கூட அடித்திருக்கிறேன்.

என் ஒரே பெண் திருமணமாகி ஒரே மாதத்தில் ஒரு விபத்தில் மாண்டு அவளது சடலத்துடன் நான் ஆம்புலன்ஸில் வரும்போது அப்பெண்களின் முகம் துல்லியமாக நினைவுக்கு வந்தது.

நான் என்ன செய்வேன் ?

இந்தக் கேள்வி அரசு தன்னைத்தானே பார்த்துக் கேட்டுக்கொள்ள வேண்டியது. துரதிஷ்டவசமாக அதை நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கேட்டுக்கொள்கிறோம்.

சமீபத்தில் நண்பர் பாஸ்கர் சக்தி தன் முகநூலில் ஏதோ ஒரு ஹோட்டலில் தன்னை சந்திக்க வந்த ஒரு பெண் தோழியை ஒரு ஆண் நண்பரின் அறைக்கு அனுப்ப முடியாதென ரிசப்ஷனில் சொல்லி விட்டார்களாம்.

ஜெய் ஹோ... நமக்கெல்லாம் மாட்டிறைச்சியும் கோமிய வாசனையும் தானே முக்கியம்.

கட்டுரையாளர் குறிப்பு: எழுத்தாளர் தமயந்தி

ஒடுக்கப்பட்ட பெண்களின் சார்பில் தொடர்ந்து எழுதிவரும் எழுத்தாளர். இவரது ‘அக்கக்கா குருவிகள்’, ‘சாம்பல் கிண்ணம்’ சிறுகதைத் தொகுப்புகள் வாசகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றவை. இவரது முக்கிய கட்டுரைத் தொகுப்பு ‘இந்த நதி நனைவதற்கல்ல’. திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். இயக்குநர் மீரா கதிரவனின் ‘விழித்திரு’ திரைப்படத்தில் வசனமும், பாடலும் எழுதியுள்ளார்.

வல்லமை தாராயோ - 1 - தமயந்தி

வல்லமை தாராயோ - 2 - தமயந்தி

வல்லமை தாராயோ - 3 - தமயந்தி

வல்லமை தாராயோ - 4 - தமயந்தி

வல்லமை தாராயோ - 5 - தமயந்தி

வல்லமை தாராயோ - 6 - தமயந்தி

வல்லமை தாராயோ - 7 - தமயந்தி

வல்லமை தாராயோ - 8 - தமயந்தி

வல்லமை தாராயோ - 9 - தமயந்தி

வல்லமை தாராயோ - 10 - தமயந்தி

வல்லமை தாராயோ - 11 - தமயந்தி

வல்லமை தாராயோ - 12 - தமயந்தி

வல்லமை தாராயோ - 13 - தமயந்தி

வல்லமை தாராயோ - 14 - தமயந்தி

புதன், 5 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon