மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 26 ஜூலை 2017

சிறப்புக் கட்டுரை: வல்லமை தாராயோ - 18 - தமயந்தி

சிறப்புக் கட்டுரை: வல்லமை தாராயோ - 18 - தமயந்தி

சமீபத்தில் சென்னை கோபாலபுரத்திலிருக்கும் ‘ரைட்டர்ஸ் கஃபே’க்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ‘காபி ஷாப்’ என்பது போகவும் அங்கு வெகு முக்கியமான ஒரு விஷயம் உள்ளது. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களே அங்கு பணியில் இருந்தனர். அது ஒரு சாதாரணமான விஷயமாக எடுத்துக்கொண்டு கடந்துவிட முடியாது. அது நியாயமுமில்லை.

ஆசிட் வீசப்பட்ட பெண்களின் வாழ்க்கை பல வகையான காயங்களுக்கும் ரணங்களுக்கும் அவமானங்களுக்கிடையில் சிக்கிக் கிடப்பது. அத்தகைய பெண்களுக்கு ஆசிட் வீச்சு என்பது ஒரு நொடியில் வாழ்க்கையைத் திருப்பிப் போட்ட சம்பவமாகும். பெரும்பாலான பெண்களுக்குக் காதலன், கணவனால் ஏற்பட்டப் பிறகு ஏற்படுகிறது.

எப்படி, இப்படி ஒரு மனநிலை ஏற்படுகிறது என்று சில மனோதத்துவ நிபுணர்களிடம் விவாதித்தபோது அவர்கள் இத்தகைய தாக்குதல்களுக்கு முக்கியமான காரணம், அவர்களின் புற அழகை சிதைப்பதன் மூலம் அவர்களின் வாழ்வை சிதைப்பதே. அதிலிருந்து பல பெண்கள் மீண்டு வந்திருக்கிறார்கள். அதில் லெஷ்மி மிகப் பெரிய உதாரணம். வாழ்க்கையை நாம் எப்படி பார்க்கிறோமோ அதுவாகவே மாறுகிறது அது.

ஒற்றை வரியில் ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு வேண்டுமென சொல்லி விடலாம். ஆனால், அது அத்தனை எளிதான விஷயமில்லை. ஒரே நாளிலோ ஒரு வாரத்திலோ நிகழும் விஷயமுமில்லை. ஆக, இது சமூகத்தின் பக்கமிருந்து ஒருபக்கம் நிகழ வேண்டும். மறுபுறம் பாதிக்கப்பட்ட பெண்கள் மீண்டு எழ வேண்டும்.

2011இல் 83 ஆக இருந்த இத்தகைய அமில வீச்சுக்கள் இந்திய குற்றவியல் புள்ளிவிவரப்படி 2015இல் 349 ஆக அதிகரித்திருக்கிறது. இதுகுறித்து மேகா மிஸ்ரா, அகில இந்திய ஆசிட் வீச்சால் பாதிப்படைந்தோர் சங்கத் தலைவர் சொல்வது மிக அதிர்ச்சிக்குள்ளான ஒன்று. அதாவது இப்படி ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டப் பெண்களில் பெரும்பாலானோர் யார் வீசினார்களோ அவர்களுடனே வாழ்கிறார்கள் என்பதே அந்த அதிர்ச்சியூட்டும் தகவல். மிக முக்கியமான காரணம் வீசியது கணவராக இருக்கும்பட்சம் அவரைப் பிரிந்து வருவதென்பது பொருளாதார சார்பின்மை இல்லை என்னும்போது சாத்தியமில்லாததாக ஆகி விடுகிறது.

பங்களாதேஷ் தான் இத்தகைய ஆசிட் வீச்சு அதிகமாக நடைபெற்ற நாடாக முன்பு இருந்தது. தற்போது அதன் சதவிகிதம் குறைந்திருக்கிறது. எப்படியென பார்க்கும்போது அங்கு இத்தகைய வழக்குகள் முப்பது நாள்களுக்குள் விசாரணை முடிந்து தீர்ப்பு கொடுக்கப்பட்டதுதான் குற்றம் குறைவதற்கான காரணமாக தெரிகிறது. 2002இல் 500 ஆக இருந்த ஆசிட் வீச்சுக்கள் 2012இல் 71 ஆக அங்கு குறைந்திருக்கிறது.

நான் இந்தக் கட்டுரைக்காக சந்தித்த சாந்தி என்னும் பெண் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) முப்பது வயதானவர். பெரும்பாலான பாதிப்புக்குள்ளாவோர் 18 முதல் 35 வயதினரே இத்தகைய தாக்குதல்களுக்குப் பெரும்பாலும் ஆளாகிறார்கள். சாந்தி அவரது கணவரால் பாதிப்புக்குள்ளானவர்.

‘எம் மேல சந்தேகம்க்கா... அவரு குடிப்பார்... சரியா வேலைக்கு போக மாட்டார். அதுக்காக நான் போனேன். ஆனா, அவருக்கு நான் யார் கூடயோ தொடர்பு வச்சிருக்கறதா ஓர் எண்ணம். அவர் கொஞ்சம் கறுப்பு. நான் நல்ல சிவப்பு. அவர் அத சொல்லி சொல்லி காட்டுவார். ஒருநாள் நான் வேலைலருந்து வந்து சோறு வடிச்சிட்டு இருந்தேன். நான் வர்றப்ப அவரு தூங்கிட்டு இருந்தார். ஆனா எப்ப அவர் எந்திரிச்சார்... பக்கத்துல வந்தார்னு தெரியல்லை... அவர் வீசினப்ப முகத்தைத் திருப்பிட்டேன். கழுத்துல வடிஞ்சு, மாருல, வயித்துல ஓடிச்சு. சாவு கூட அவ்ளோ வலியா இருக்காது’.

சாந்தியின் குரல் மிகத் தெளிவாக இருந்தது, அவள் கண்களைப் போல. நான் அதிர்ந்துப் போனேன். என் விரல்கள் நடுங்கினபடி இருந்தன. அந்த நொடியில் என்னைப் பொருத்திப் பார்க்கையில் என் உடலே பதற்றமானது.

அவருக்கு அரசின் மூன்று லட்ச ரூபாய் கிடைத்திருக்கிறது. ஆனால் வடுக்களை ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்ய வேண்டுமெனில் முப்பது லட்சம் தேவைப்படுகிறது. அது ஓர் அறுவைசிகிச்சைக்கு மட்டும். அதுபோல நாற்பது சிகிச்சைகளாவது சாந்திக்கு செய்ய வேண்டும். ஆனால், பொருளாதாரம் இடம்கொடுக்காததால் அறுவைசிகிச்சை எதுவும் அவர் செய்து கொள்ளவில்லை.

நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே அவர் கணவர் உள்ளே வந்து ‘என்னத்துக்கு தேவையில்லாத பேச்சு. போதும் போதும்’ என்றபடி கடக்க சாந்தி என்னை தர்மசங்கடமாகப் பார்த்தார். நான் கிளம்பினேன்.

அன்றிரவு முழுக்க என்னால் தூங்க முடியவில்லை. மிக மிக மோசமான மனநிலைக்கு ஆளாகியிருந்தேன். இந்த நாட்டில் எத்தனை சாந்திகள் வாழ்கிறார்கள். அவர்கள் எல்லோருக்குமே ரைட்டர்ஸ் கஃபே மாதிரியான கடைகளில் வேலை வாய்ப்புகள் கிடைத்திருக்கின்றனவா... அப்படியெனில் அவர்களின் வாழ்வாதாரம் எதுவாக இருக்கிறது. அவர்களின் சுயமரியாதையை அவர்களால் காப்பாற்ற முடிகிறதா?

ஒருமுறை பேருந்தில் இது போல அமில வீச்சுக்கு ஆளான பெண் ஒருவர் வந்து உட்கார்ந்ததும் அருகிலிருக்கும் பெண் சட்டென எழுந்து போனார். அமில வடுக்கள் நிறைந்த பெண்ணோ அந்த நிராகரிப்பை கண்ணில் ஈரத்துடன் ஏற்றுக்கொண்டார். இந்த நிராகரிப்பு நாம் மனதில் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

அன்புள்ள அக்கா

என்னலாமோ பற்றி எழுதுகிறீர்கள். ஆனால், கறுப்பு நிற பெண்கள் சமூகத்தில் படும் பாடுகளைப் பற்றி எழுதுவீர்கள் என்று நான் காத்திருக்கிறேன்.

நான் ஒரு பேரழகி தான். ஆனால் கறுப்பு நிறம். வாழ்க்கையில் எல்லா புள்ளிகளிலும் நான் நிராகரிக்கப்பட்டது ஆரம்பத்தலிருந்தே தான். நான் நன்றாக நடனமாடுவேன். பள்ளியிலேயே நடனம் நன்றாக ஆடியும் கறுப்பாக இருப்பதால் ஓரமாக கடைசியாக தான் ஆட விடுவார்கள்.

இப்படி பல சம்பவங்கள். வேலை கிடைப்பதிலிருந்து கல்யாணம் வரை. காதல் கடிதம் கொடுத்தவன்கூட இரண்டாவது வரியிலேயே நீ நிறமாய் இருந்திருந்தால் இன்னும் அழகாய் இருப்பாய் என்று தான் எழுதி இருந்தான்.

நீங்கள் எனது மெயிலை பிரசுரிப்பீர்களா என்று எனக்குத் தெரியவில்லை. என் அக்கா நிறம் தான். ஆனால், அவளின் கணவனே அவள் மேல் ஆசிட் ஊற்றியதில் இப்போது நான்தான் அவளைப் பார்க்கிறேன் அக்கா.

இதென்ன வாழ்க்கை? நிறம் மற்றும் தோற்றத்தை வைத்துதான் மதிக்கப்படுகிறோமா... முடிந்தால் ஆசிட் வீசப்பட்ட பெண்களைப் பற்றியும் எழுதுங்கள். அக்கா சந்தோஷப்படுவார்

அன்புடன்

உண்ணாமலை

சகோதரி, சத்தியமாகப் புரியவில்லை... ரைட்டர்ஸ் கஃபேயிலிருக்கும் நொடியில் உங்கள் மின்னஞ்சல் என் மின்னஞ்சல் பெட்டியை வந்து அமர்ந்ததென... வாழ்க்கை ஒன்றோடு ஒன்று இணையும் பேரதிசயமான ஒரு கணத்தில் உயிர் பெறுகிறது.

கட்டுரையாளர் குறிப்பு: எழுத்தாளர் தமயந்தி

ஒடுக்கப்பட்ட பெண்களின் சார்பில் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர். இவரது ‘அக்கக்கா குருவிகள்’, ‘சாம்பல் கிண்ணம்’ சிறுகதைத் தொகுப்புகள் வாசகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றவை. இவரது முக்கிய கட்டுரைத் தொகுப்பு ‘இந்த நதி நனைவதற்கல்ல’. திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். இயக்குநர் மீரா கதிரவனின் ‘விழித்திரு’ திரைப்படத்தில் வசனமும், பாடலும் எழுதியுள்ளார்.

வல்லமை தாராயோ - 1 -தமயந்தி

வல்லமை தாராயோ - 2 - தமயந்தி

வல்லமை தாராயோ - 3 - தமயந்தி

வல்லமை தாராயோ - 4 - தமயந்தி

வல்லமை தாராயோ - 5 - தமயந்தி

வல்லமை தாராயோ - 6 - தமயந்தி

வல்லமை தாராயோ - 7 - தமயந்தி

வல்லமை தாராயோ - 8 - தமயந்தி

வல்லமை தாராயோ - 9 - தமயந்தி

வல்லமை தாராயோ - 10 - தமயந்தி

வல்லமை தாராயோ - 11 - தமயந்தி

வல்லமை தாராயோ - 12 - தமயந்தி

வல்லமை தாராயோ - 13 - தமயந்தி

வல்லமை தாராயோ - 14 - தமயந்தி

வல்லமை தாராயோ - 15 - தமயந்தி

வல்லமை தாராயோ - 16 - தமயந்தி

வல்லமை தாராயோ - 17 - தமயந்தி

புதன், 26 ஜூலை 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon