மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 11 ஆக 2017

தேவைப்பட்டால் நம்பிக்கையில்லா தீர்மானம் : ஸ்டாலின்

தேவைப்பட்டால் நம்பிக்கையில்லா தீர்மானம் : ஸ்டாலின்

தேவைப்பட்டால் தமிழக அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என்று, திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தற்போது அதிமுக-வில் ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. கடந்த 4ஆம் தேதி தினகரன் புதிய நிர்வாகிகளை அறிவித்த நிலையில், நேற்று( ஆகஸ்ட்-10) தினகரனை கட்சியிலிருந்து நீக்குவதாக முதல்வர் பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை கழகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பதிலளித்த தினகரன்,' தீர்மானமே தவறாக உள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் யாராவது புகார் அளித்தால், முதல்வர் பழனிசாமி உள்பட அமைச்சர்கள் பதவியிழக்க நேரிடும்' என்று தெரிவித்தார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று (ஆகஸ்ட்-11) திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவர் ஸ்டாலின்,' எப்போது அதிமுக தினகரன் அணி, எடப்பாடி பழனிசாமி அணி, பன்னீர்செல்வம் அணி என மூன்றாக பிரிந்ததோ அப்போதிலிருந்தே தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவ ஆரம்பித்துவிட்டது. இந்த நிலையில் தமிழக மக்கள் தொடர்ந்து துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் நிச்சயம் ஒரு நல்ல தீர்வு வரவேண்டுமானால், ஒரு முடிவு வரவேண்டும்' என்று தெரிவித்தார்.

தமிழக அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு,'தேவைப்பட்டால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 11 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon