மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 16 ஆக 2017

சிறப்புக் கட்டுரை: வல்லமை தாராயோ - 21 - தமயந்தி

சிறப்புக் கட்டுரை: வல்லமை தாராயோ - 21 - தமயந்தி

சமீபத்தில் இணையத்தில் பெண்கள் மீது, குறிப்பாக பொதுத்தளத்தில் இயங்குபவர்கள் மீது கடுமையான தாக்குதல் நிகழ்கிறது. த நியூஸ் மினிட் என்னும் இணையதளத்தின் முதன்மை நிர்வாகியான தன்யா ராஜேந்திரன் மீது நடைபெறும் தாக்குதல்கள் மிக மோசமானவை. விஜய்யின் சுறா படத்தை இடைவேளை வரை தான் பார்க்க தன்னால் முடிந்தது என்று ட்வீட் செய்த ஒரே காரணத்திற்காக அத்தனை கேவலமான சொற்களை விஜய் ரசிகர்களாக இணையத்தில் உலா வருபவர்கள் தன்யா மேல் இறைத்தார்கள்.

மிக மிக அருவெறுப்பான வார்த்தைகளால் பாலியியல் சார்ந்து வெளிப்பட்ட வார்த்தை தொடர்ந்து அவர் மேல் ஏவப்பட்ட அம்புகளாய் நிறைந்தன. ஷாருக்கின் படத்தை இடைவேளை வரை சுறா படம் பார்த்தது போல் பார்க்க கூட முடியவில்லை என்று அவர் தன் கருத்தை வெளியிட்டதில் என்ன தவறு இருக்க முடியும்? அப்படி சுறா படத்தின் அதி நுட்பத்தை இதுவரை யாருமே இணையத்தில் பேசவே இல்லையா? ஆனால் பேசியதில் யாருமே பெண்ணாய், அதுவும் பொதுத்தளத்தில் இயங்கும் பெண்ணாய் இல்லாமல் இருக்க வேண்டும் இவர்களுக்கு.

விஜய் படங்கள் தன்யாவுக்குப் பிடிக்காமல் போகலாம். தன்யாவின் கட்டுரைகள் விஜய்க்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் அதை வெளிப்படுத்தும் போது இத்தனை வன்மத்தை ஒருவர் மீது அவர் ரசனையின் நிமித்தமும் அதே சமயம் அவர் விமர்சிக்கும் இன்னொருவர் மேலான அதீதமான பாசத்தின் பொருட்டும் வீசுவது கண்டனத்திற்குரியது.

நான் பள்ளி படிக்கும் சமயங்களில் எங்களுள் கமல், ரஜினி சண்டை வரும். ஒருமுறை இளமை ஊஞ்சலாடுகிறது படம் பார்த்து விட்டு செண்பகா, வள்ளிக்கா, நான் மூவரும் சண்டை போட்டோம். பிறகு மூவரும் அன்பால் இணைவோம். அப்படியான உறவுகள் இப்போதெல்லாம் எங்கு தொலைந்தது என்று யோசிக்கும் போது மிக அற்புதமான பதிலும் கிடைத்து விடுகிறது. இன்று அபிமானம் என்பதே வர்த்தகம் தான். காதலே இன்று சாதி அடையாளங்களோடான ஒரு உணர்வாக மாறும் போது உணர்வுகள் வர்த்தகமயமாவது ஆச்சர்யம் அல்ல தானே.

ஒரு புது உடை அணிந்து விட்டு இவ்வுடை யாருக்கெல்லாம் பிடித்திருக்கிறதென தெருவெங்கும் கேட்டு போக மாட்டோம் அல்லவா? ஆனால் இன்று முகநூல் பக்கத்தில் ரசனையும் அங்கீகாரமும் கூட வர்த்தகம் ஆகி விட்டது.

திவ்யபாரதி கக்கூஸ் என்னும் ஆவணப்படத்தை இயக்கினார். அவரின் படத்தில் ஒரு சாரார் மலம் அள்ளுகிறார்கள் என்ற ஒரு பதிவு அவரது ஆவணப்படத்தில் இருந்ததால் இப்படியே பாலியல்ரீதியாக தாக்கப்பட்டார். அவரது அலைபேசிக்குப் பல ஆபாச அழைப்புகள். பெண்ணுறுப்புகளைப் பற்றி கொச்சையான வார்த்தைகள். ஆனால் தமிழ்நாடு அதைப் பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கோ தினகரன் திரும்பி வந்தால் பதவிக்கு ஆபத்தோ என்றொரு அச்சம். அவரவர் பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு அரசு நடைபெறுமாயின் அது கலைக்கப்படுதல் நலம். ஆனால் யார் கலைப்பார்கள்? மத்தியிலும் அப்படியொரு ஆட்சி பேருக்கு நடைபெற்று எங்கும் மதக்கலவரங்களையும் மனித இணக்கமற்ற சூழலையும் உலா வரச் செய்யும் போது என்ன செய்ய முடியும்?

பெண்கள் மீதான இணைய தாக்குதலுக்கும் அரசிற்கும் என்ன சம்பந்தம் என்று இதை வாசிக்கும் யாரும் கேட்காமல் இருப்பது நலம். தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் உலகினை அழிப்போம் என்று பாடிய பாரதியின் நாட்டிலேயே நாம் வாழ்கிறோம்.

நவீனக் கால மனநிலை இப்படி யாருக்காவது நடந்தால் நமக்கென்ன என்னும் மனப்பான்மையைக் கொண்டிருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் இணையம் தான். யாரும் பார்க்காத போது மற்றவர் வீட்டுக்குள் நோட்டமிடும் குணத்தை மறைமுகமாக இணையம் வளர்க்கிறது.

தன்யாவுக்கு ஆதரவாய் பெண் கள் குழுக்கள் ஒன்றிணைந்து காவல்துறையிடம் புகார் கொடுக்க உள்ளார்கள். ஆனால் கேள்வி என்னவெனில் கொச்சையாக பெண்களைப் பார்க்கும் மனநிலை குறித்து இச்சமூகத்தில் யாருமே கவலை கொள்ளாதது தான். சாலையில் சென்று கொண்டிருக்கும் போது நம்மைப் பார்த்து யாராவது கெட்ட வார்த்தை பேசினால் நமக்கு கோபம் வருகிறது. திரும்ப நாம் அவரைத் திட்டலாம். அல்லது வேறு வகையிலான வன்முறையை சம்பந்தப்பட்டவர் மேல் நிகழ்த்தலாம். அவையேதும் இல்லாமல் எவ்வளவு அசிங்கமாகப் பேசினாலும் அதுவும் குறிப்பாக பெண்களுக்கு எதிராகப் பேசினாலும் சட்டை செய்யாமல் இருப்பதே இன்றைய அரசாங்கத்திற்கும் சமூகத்திற்கான சவால்.

சமீபத்தில் கேரளா செங்கணூரில் நடைபெற்ற ’சிவே’ இலக்கிய விழாவில் மலையாள எழுத்தாளர் சசி நாயர் என்பவர் தமிழக எழுத்தாளர்களில் பெண்கள் பேசுவதெல்லாம் மாதவிக்குட்டி இருபது வருடங்களுக்கு முன்னமே பேசி விட்டாரென சொன்னார். அப்படியொரு வாழ்க்கை மாதவிக்குட்டிக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி என்னும் போதிலே அது எங்களுக்கு விரைவில் கிட்ட வேண்டும் என்றும் பேசினேன். பெண்கள் தங்கள் வாழ்வை இப்படி தான் பேச வேண்டும் என்ற ஒரு தீர்மானம் பலருக்கு உண்டு. அந்த மலையாள எழுத்தாளரைப் போல.

கெட்ட வார்த்தைகளின் பிறப்பிடம் எல்லாமே மனிதர்களின் பிறப்பிடமாய் இருப்பது துரதிஷ்டவசமானது. வார்த்தைகளின் இடுக்குகளில் கசியும் ஆண் ஆதிக்கத்தின் கவிச்சி வாடை சமூகத்தின் எல்லா முனைகளிலும் படர்ந்து கிடக்கின்றன. பெருத்த பொதுவுடைமை கருத்துக்களையும் மார்க்சிய கருத்துக்களையும் பேசும் “ தோழர்களில்’ பலருக்கு இந்த ஆணாதிக்க மனோபாவம் உண்டு.

இதற்கு அந்த ஆண் அல்ல காரணம். ஒரு பெண்ணை இத்தகைய பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்குவதன் மூலம் அவளை வேரறுந்து செய்யக் கூடும் என்ற திமிரான நம்பிக்கையை நம் சமூகம் அல்லவா விதைக்கிறது? இந்த வார மின்னஞ்சலாக நான் பகிரும் உமா வின் வார்த்தைகளிலும் இதுவே ஒலிக்கிறது.

அன்புள்ள அக்கா

என் அப்பா ஒரு குடிகாரர். நான் எப்படியோ படித்து பி. ஈ முடித்து விட்டேன். என்னால் மறக்க முடியாதது என் அப்பா என் அம்மாவையும் என்னையும் பேசும் கெட்ட வார்த்தைகள் தான். அவை என் நெஞ்சை அறுத்து கூச செய்கிறது. பல முறை அப்படி பேசாதீங்கப்பா என்று சொல்லியும் என் அம்மாவின் பெயர் தேவடியா தான்.

எதையாவது குடித்து விட்டு சாகலாம் போல தோன்றுகிறது. ஆனால் அப்படி செய்தாலும் என் அப்பா திருந்த போகிறாரா? திருந்தாத ஒருத்தருக்காக நான் ஏன் சாக வேண்டும். ஆனால் உங்கள் கட்டுரையில் நிறைய பெண்கள் சம்பந்தமாக நீங்கள் எழுதுவதாக என் பக்கத்து வீட்டு சாந்தியக்கா ( அவர் மொபைலிலிருந்து தான் இதை டைப் செய்கிறென்க்கா)சொல்வார். அதனால் தான் இந்தக் கடிதம். தயவு செய்து எல்லோருக்கும் வேண்டுகோள்: கெட்ட வார்த்தை பேசாதீர்கள். அதுவும் பெற்ற குழந்தைகளிடம்

ஆமாம் உமா. ஒரு தலைமுறை மீறி விஷத்தைத் தூவுவதை உன்னால் இவர்கள் நிறுத்துவார்களா?

கட்டுரையாளர் குறிப்பு : எழுத்தாளர் தமயந்தி

ஒடுக்கப்பட்ட பெண்களின் சார்பில் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர். இவரது 'அக்கக்கா குருவிகள்', ' சாம்பல் கிண்ணம்' சிறுகதைத் தொகுப்புகள் வாசகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றவை. இவரது முக்கிய கட்டுரைத் தொகுப்பு 'இந்த நதி நனைவதற்கல்ல'. திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். இயக்குநர் மீரா கதிரவனின் 'விழித்திரு' திரைப்படத்தில் வசனமும், பாடலும் எழுதியுள்ளார்.

வல்லமை தாராயோ - 1 -தமயந்தி

வல்லமை தாராயோ - 2-தமயந்தி

வல்லமை தாராயோ - 3-தமயந்தி

வல்லமை தாராயோ - 4-தமயந்தி

வல்லமை தாராயோ - 5-தமயந்தி

வல்லமை தாராயோ - 6-தமயந்தி

வல்லமை தாராயோ - 7-தமயந்தி

வல்லமை தாராயோ - 8 - தமயந்தி

வல்லமை தாராயோ - 9 - தமயந்தி

வல்லமை தாராயோ - 10 - தமயந்தி

வல்லமை தாராயோ - 11 - தமயந்தி

வல்லமை தாராயோ - 12 - தமயந்தி

வல்லமை தாராயோ - 13 - தமயந்தி

வல்லமை தாராயோ - 14 - தமயந்தி

வல்லமை தாராயோ - 15 - தமயந்தி

வல்லமை தாராயோ - 16 - தமயந்தி

வல்லமை தாராயோ - 17 - தமயந்தி

வல்லமை தாராயோ - 18 - தமயந்தி

வல்லமை தாராயோ - 19 - தமயந்தி

வல்லமை தாராயோ - 20 - தமயந்தி

புதன், 16 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon