மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 23 ஆக 2017

சிறப்புக் கட்டுரை: வல்லமை தாராயோ - 22 - தமயந்தி

சிறப்புக் கட்டுரை: வல்லமை தாராயோ - 22 - தமயந்தி

சமீபத்தில் ஹரித்வார் போயிருந்தேன். அங்கு எல்லாத் தெருக்களுமே சிறு சிறு வளைவுகளுடன் உள்ளன. குறுகலான தெருக்கள் வேறு. அதில் கங்கை தீபாராதனையோடு பல கோடி மனிதர்கள் ஒன்று கூடுகிறார்கள். கடுகு போட்டால் தெரியாத கூட்டம என்பார்களே.அது போல தான்அங்கு கூடும் கூட்டமும்

கங்கை பெரும் ஆக்ரோஷமாய் ஓடுகிறது. கொஞ்சம் மெல்ல ஓடினாலும் மனிதர்கள் தங்கள் நம்பிக்கைக்குத் தக்க தங்கள் பாவங்களைத் தன்னில் அமிழ்த்திவிடுவார்களோ என்ற அச்சம் அதிகரித்து அது வேகத்தைக் கூட்டிக்கொண்டது போல் தோன்றியது எனக்கு. கங்கைக் கரையில் மனிதர்கள் கொத்துக் கொத்தாகத் தூங்குகிறார்கள். பெண்கள் ஒரு மெல்லிய திரை போன்ற துணியால் மறைத்து ஆடை மாற்றுகிறார்கள். இரவில் நடமாடுகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் வெளியூரிலிருந்து வந்த பெண்களாக இருக்கிறார்கள்.

அங்குள்ள ஒரு ஆசிரமம் ஒன்றிற்குச் சென்றிருந்தேன். மோடியின் திட்டத்தில் டாய்லெட் காலேஜ் என்று ஒன்று கட்டப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஊர்ப் பெண்கள் இன்னும் அவர்கள் வீட்டின் பின்புறத்தில் இருக்கும் திறந்த வெளிகளில் தான் மலம் கழிக்கிறார்கள்.

எனக்கு வாழ்வின் ஆகச் சிறந்த அதிர்ச்சி கழிவறைகள் குறித்த ஆவணப்படமொன்றை இயக்கியபோது நிகழ்ந்தது. பூட்டிக் கிடந்த கழிவறைக்குப் பக்கத்தில் இருந்த பெண் சொன்னது இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது. " நான் காலைல சாப்டுறதில்லங்க. சாப்டா பாத்ரூம் போகணும்னு தோணும். அதனாலயே சாயங்காலமா சாப்டுவோம். இருட்டினா உடன் பின்னால ஒதுங்கலாம்தான..." இந்த ஒற்றை வரி போதும் ஒரு தேசிய, மாநில அரசை தலைக்குனிய.. தடை செய்ய... கலைத்துப் போட.

ஒரு அடிப்படைத் தேவையைக்கூட சுயமரியாதையுடன் பூர்த்தி செய்துகொள்வத்தைச் சாத்தியமாக்க இயலாத அரசாங்கம் வெற்றுத் திட்டங்களால் என்ன சாதித்தது? ரிஷிகேஷில் தில் சே பாடல் எடுத்த பாலமென காட்டப்பட்டக் பாலத்தின் பக்கம் ஒரு ஐம்பது வயதுப் பெண் தனது சுரிதாரைக் கூட்டத்தினுள் கழற்றி நின்ற வாக்கிலே சிறுநீர் கழித்தார். அவருக்கு அதில் எந்த லஞ்சையும் இல்லை. கடந்து போனவர்களுக்கும்.

சிறு வயதில் ஆண்கள் சிறுநீர் கழிப்பதை பார்த்து எரிச்சலடைந்து, நான் ஒரு நாள் முதல்வர் ஆனால் வெளியில் சிறுநீர் கழிக்கும் ஆண்களைச் சுட்டுத் தள்ளுவேன் என்று நான் சொல்லியதுண்டு. உடல் குறித்த பிரக்ஞையை ஆண்கள் அதிகாரமாகக் கருதுவதால் ஆண்களால் பொதுவெளியில் தங்கள் உடலை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளத் தடைகள் பெரும்பாலும் இருப்பதில்லை. மர்மங்களுடனும் மாயங்களுடனும் பெண்கள் இயங்குவதை நம் சமூகம் எதிர்பார்ப்பதால், அங்கீகரிப்பதால் மறைவிடங்களில் " ஒதுங்க" வேண்டியிருக்கிறது.

ஆண்களைப் போல பெண்கள் வெளியில் சிறுநீர் கழித்தால் இந்த சமூகம் பதற்றமாகிப்போகும். ஆணுக்கும் பெண்ணுக்குமான வித்தியாசத்தை மேல் சட்டையைக் கழற்றுவதன் மூலம் ‘பூமாலை ஒரு பாவை ஆனதே’ பாடலிலும் சிறுநீர் கழிப்பதைப் பற்றி விக்ரம் திரைப்பட வசனத்திலும் பார்த்த, கேட்ட ஞாபகம்.

என் தோழி ஒருத்திக்குப் பிரசவத்திற்குப் பிறகு சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற நினைப்பு வந்ததுமே சிறுநீர் கசிய ஆரம்பித்துவிடும். தன் உடையின் பின்புறம் ஈரம் படர்வதை அவள் மறைக்க முற்படுவது வலி நிறைந்தது. அதன் பிறகு அவள் எங்கேயுமே வெளியே வருவதில்லை. தன் மேல் வீசும் சிறுநீர் வாடையால் தன் கண்வர் உடலுறவு வைத்துக்கொள்வதில்லை என்றாள்.

"பேசாம தற்கொலை செஞ்சிக்கலாமான்னு இருக்கு"...என்று ஒரு முறை சொன்ன போதுதான் எனக்கு அதன் தாக்கம் புரிந்தது. அவளுடன் நான் மருத்துவரிடம் சென்றேன். அவர் சொன்னது அதிர்ச்சியாகக்கூட இருந்தது. பெண்களுக்குப் பல விதமான கர்ப்பப்பை பிரச்சினைகளால் இப்படிச் சிறுநீர் கசிந்தபடி இருக்கும் என்பதும் இதற்கு பெயர் யூரினரி இன்காண்டினஸ் என்றும் சொன்னார். என் தோழி தொடர்ந்து மருந்து எடுத்து, தற்போது சுமாராக இருக்கிறார்.

சிறுநீர் கழிப்பது என்பது எல்லா மனிதர்களுக்கும் ஒன்றானதல்ல. அதை வேலையின் நிமித்தமும் வேலையிடத்தில் கழிவறை இல்லாதபோது வெளியில் கழிக்க கூச்சப்பட்டு கூச்சப்பட்டும் அடக்கிவைத்து இன்பெக்ஃஷன் ஆகும் பல பெண்களை நான் அறிவேன். இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை நம் சிறுநீரகத்தைக் காலி செய்வது நம் இதயத்திற்கும் நல்லது என்றென் சித்த மருத்துவத் தோழி சொல்வார்.

இன்னும் சில ஆண்கள் பெண்களுக்கு சிறுநீரே வராது என்ற நினைப்பில் இருக்கிறார்கள். ஒரு பயணத்தில் இதை நான் நிறையவே அனுபவித்திருக்கிறேன். தாங்கள் சாலையோர புற்களுக்கு நீர் பாய்ச்சிவிட்டுப் போலாமா என்று கேட்டபடி வாகனம் ஏறும் ஆண்கள் மீது உச்சபட்ச வன்முறையை மனம் செலுத்த விரும்பும்.

வல்லரசாக இந்தியாவை ஆக்குகிறார் மோடி என்ற நம்பிக்கை உத்தரப் பிரதேசத்தில் பலருக்கு இருக்கிறது. அவர்களுக்குக் கல்வியறிவு இல்லை. அவர்களின் பிரதான தொழில் சோளம், ரொட்டி சுட்டு விற்பது. அவர்கள் ஓலைக் குடிசைகளில் வசிக்கிறார்கள். சைக்கிளில் பயணிக்கிறார்கள். காட்டுக்குள் மலம் கழிக்கிறார்கள். ஆனால் மோடியின் திட்டங்களைப் பாராட்டுகிறார்கள். மக்கள் யோசிக்க உதவும் கல்வி என்னும் ஆயுதத்தை இங்கு யாருமே பயன்படுத்துவதில்லை. அரசு அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. கழிவறைத் திட்டம் பற்றிப் பேசுவது சிறந்தது. செயல்படுவது அதனினும் சிறந்தது. கழிவறைத் திட்டத்திற்காக எத்தனை கோடி பணம் ஒதுக்கப்பட்டது, அதில் எவ்வளவு செலவழிக்கப்பட்டது, எத்தனை கட்டி முடித்து உபயோகப்படுத்தப்படுகிறது என்பதை அரசு சார்பில்லாத ஒரு தொண்டு நிறுவனம் புள்ளிவிவரம் எடுத்தால் மட்டுமே நிஜங்கள் புலப்படும். அதிர்ச்சிகள் புலப்படும்.

இந்த வார மின்னஞ்சல் மிக அதிர்ச்சியானது.

அக்கா... கணவர் வருவதற்கு முன்பாக எழுத வேண்டும். இந்த மெயில் எழுதுவதற்கு முன்பே அதை முடிக்க முடியுமா என்று தெரியவில்லை. நீங்க சென்னையா. நான் ஹைதராபாத்தில் வாழும் சென்னை பெண். ஒரு வயது குழந்தை. எனக்கு தாம்பத்ய வாழ்வில் விருப்பமில்லை. அதில் ஈடுபடாமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வேன்.

சின்னப் பிரச்னை தான். ஆனால் சொல்ல கூச்சமாய் இருக்கிறது. அந்த சமயத்தில் நான் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் அவர், என்ன காரணத்தினாலோ சுத்தமாக இருப்பதில்லை. பாத்ரூம் போய்விட்டு வருகிறார். என்னால் மேலே எழுத முடியவில்லை. என்ன செய்யவென்றும் தெரியவில்லை. பெரிய பணக்காரர் வேறு. என்னால் சொல்லவே முடியாது மனம் திறந்து. இதெல்லாம் பிரச்னையாகுதே என்று என்னை நினைத்தே எனக்குப் பிடிக்காமல் போகிறது.

புரிகிறது சகோதரி... சொல்ல முடியாத வார்த்தைகளினோரம் உட்கார்ந்திருக்கும் ஈயின் சிறகுகள் படபடக்கவே செய்கின்றன.

கட்டுரையாளர் குறிப்பு: எழுத்தாளர் தமயந்தி

ஒடுக்கப்பட்ட பெண்களின் சார்பில் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர். இவரது ‘அக்கக்கா குருவிகள்’, ‘சாம்பல் கிண்ணம்’ சிறுகதைத் தொகுப்புகள் வாசகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றவை. இவரது முக்கிய கட்டுரைத் தொகுப்பு ‘இந்த நதி நனைவதற்கல்ல’. திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். இயக்குநர் மீரா கதிரவனின் ‘விழித்திரு’ திரைப்படத்தில் வசனமும், பாடலும் எழுதியுள்ளார்.

வல்லமை தாராயோ - 1 - தமயந்தி

வல்லமை தாராயோ - 2 - தமயந்தி

வல்லமை தாராயோ - 3 - தமயந்தி

வல்லமை தாராயோ - 4 - தமயந்தி

வல்லமை தாராயோ - 5 - தமயந்தி

வல்லமை தாராயோ - 6 - தமயந்தி

வல்லமை தாராயோ - 7 - தமயந்தி

வல்லமை தாராயோ - 8 - தமயந்தி

வல்லமை தாராயோ - 9 - தமயந்தி

வல்லமை தாராயோ - 10 - தமயந்தி

வல்லமை தாராயோ - 11 - தமயந்தி

வல்லமை தாராயோ - 12 - தமயந்தி

வல்லமை தாராயோ - 13 - தமயந்தி

வல்லமை தாராயோ - 14 - தமயந்தி

வல்லமை தாராயோ - 15 - தமயந்தி

வல்லமை தாராயோ - 16 - தமயந்தி

வல்லமை தாராயோ - 17 - தமயந்தி

வல்லமை தாராயோ - 18 - தமயந்தி

வல்லமை தாராயோ - 19 - தமயந்தி

வல்லமை தாராயோ - 20 - தமயந்தி

வல்லமை தாராயோ - 21 - தமயந்தி

புதன், 23 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon