மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 31 ஆக 2017

சிறப்புக் கட்டுரை: வல்லமை தாராயோ - 23 - தமயந்தி

சிறப்புக் கட்டுரை: வல்லமை தாராயோ - 23  - தமயந்தி

மாதவிலக்கு என்பது ஒரு பெண்ணின் கர்ப்பப் பையில் மாதந்தோறும் ஏற்படும் சினை முட்டைகளின் வெளியேற்றத்துக்கான ரத்தப் போக்கு. துரதிஷ்டவசமாக நாம் அதைப் புனிதமற்ற தன்மையாக நினைக்கிறோம். மாதவிடாய் வந்த பெண்ணை நம் கலாசாரத்தின்படி ஒதுக்கி வைக்கிறோம்.. கோயிலுக்குள் நுழையக் கூடாது; பூஜை சாமான்களைத் தொடக் கூடாதென எழுதப்படாத விதியை மறுபடி மறுபடி உறுதிப்படுத்துகிறோம்.

விளம்பரங்களில் இந்த விதியை வேறுவிதமாக வலியுறுத்துவார்கள். சானிடரி பேட்டில் மை ஊற்றி அதை ஏதோ மை கொட்டினால் உறியக்கூடிய பஞ்சுப் பொதி போலக் காட்டுவார்கள். சாதாரண உடலியியல் கூறை இப்படிப்பட்ட சித்திரங்கள் எப்படித் தவறாகச் சமூகத்தில் பிரதிபலிக்கின்றன என்பதற்கு, மாதவிடாய் கறைகள் ஆடையில், பெஞ்சில் பட்டதை ஆசிரியர் கண்டித்ததால் மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்ட பாளையங்கோட்டை மாணவியின் மரணம் ஓர் எடுத்துக்காட்டு. எடுத்துக்காட்டுகள் உதாரணங்களாக ஆவதில்லை என்பதை இந்தச் சம்பவத்தின் வழி நாம் கற்றுக்கொள்ள வேண்டியதுதான்.

பல போலியான மன பிம்பங்களிலிருந்து நாம் இன்னும் விடுதலை பெறவில்லை. குறிப்பாக உறவு பிம்பங்கள் மற்றும் உடல் பிம்பங்கள். உறவு என்பது சமூகம் ஏற்படுத்திய சட்டங்கள் வழிதான் என்றால் இங்கு சட்டரீதியாக அங்கீகரிக்கப்படாத உறவுகள் ஏன் முளைக்கின்றன? இக்கேள்வியை நிராகரிப்பதன் மூலமாக நாம் நம்மை ஒழுக்கசீலர்களாகக் காட்டிக்கொள்ளலாம். ஆனால், தண்டனைக்குரியதாகக் கருதப்படும் இத்தகைய உறவுகள் முழுமையடையாத ஒப்பந்த உறவுகளைக் கேள்வி கேட்பதை நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.

ஒரு சிறுமி மாதவிடாய் தீட்டு வெளியே படுமாறு இருந்துவிட்டாள் என்றால் திட்ட வேண்டும் என்று நம் ஒழுக்கக் கட்டுமானம் மறைமுகமாகச் சொல்லிக் கொடுத்திருக்கிறது. இதுவும் ஒழுக்க சம்பந்தமான விஷயம்தான். ஒருமுறை பேருந்துப் பயணம் ஒன்றில் எனக்கு திடீரென மாதவிலக்கு வந்து புடவை முழுக்க கறைகள். ஆகப் பெரிய குற்றமொன்றை இழைத்துவிட்டது போல் கூனிக் குறுகிப் போனேன். இப்போது நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. வெளியேறும் அனைத்துமே தீட்டு என்றால் காலைக்கடனும் சிறுநீரும் தினம் கழிக்கும் எந்த மனிதனும் கோயிலுக்குப் போக இயலாது.

ஆனால், எல்லா மதங்களிலும் மாதாந்தர விலக்கு தீட்டாகவே உள்ளது. பிறப்புறுப்பில் ரத்தம் கசியும் உடலியல் மாற்றத்துக்கு இங்கு விலக்கு, தீட்டு என்று பெயர் வைக்கப்பட்டு அழைக்கப்படுகின்றன.

நிற்க. இப்போது அந்த மாணவி அந்த நொடியில் எப்படி உணர்ந்திருப்பார் என்று ஒரு நிமிடம் நினைவில்கொள்வோம். அவள் பெயர் சுமதி என்று வைத்துக்கொள்வோம். சுமதிக்கு அன்று மாதாந்தர நாள். காலையில் வரும் போது ரத்தப்போக்கு இத்தனை தூரம் அதிகரிக்குமென அவள் நினைத்திருக்கவில்லை. ஆனால், எதிர்பாராதவிதமாக போக்கு அதிகரிக்க அவளை அறியாமல் அவளது யூனிஃபார்மில்பட்டு உட்காரும் பெஞ்சில் பட்டுவிட்டது.

ஆசிரியர் கேள்வி கேட்க அவள் எழும்பி பதில் சொல்ல, ஆசிரியர் அவளது ரத்தக்கறை படிந்த உடையைப் பார்த்து கத்த, அவள் அவமானமாக உணர்கிறாள். ஒருவேளை அது இரு பாலினருக்குமான பள்ளியாக இருக்கலாம்.

நினைவிலாடும் வார்த்தைகள்போல் கூர்மையான ஆயுதம் வேறில்லை. பள்ளியின் மேல் மாடிக்குப் போய் குதிக்கிறாள் சுமதி. காரணம், மாத ரத்தப்போக்கை அவமானமெனக் கருதும் சமூகத்தில் பிறந்ததினால். எத்தனை பெரிய வன்கொடுமையை நாம் எல்லோருமே செய்தபடி இருக்கிறோம். அது எத்தனை எத்தனை பெரிய மோசமான தாக்கத்தைத் தந்தபடியே இருக்கிறது.

வெகு சில வருடங்களாகத்தான் நம்மால் சானிடரி நாப்கின்களைக் கடையில் பெயர் சொல்லி வாங்க முடிகிறது. முன்பு சிறு தாள்களில் பெயர் எழுதி வாங்குவோம். நானும் அப்படி எழுதிய சீட்டை நீட்டி வெளியே தெரியாத கறுப்பு பாலிதீன் பைகளில் வாங்கி வந்திருக்கிறேன். இன்றும் கிராமங்களில் இது நடைமுறையில் இருக்கலாம்.

என் தோழி வீட்டில் அதை குளியலறை ஷெல்பில் வைத்திருப்பார்கள். அவளது அம்மாவும் அப்பாவும் அது ஒரு சாதாரண பொருள் என்பது போல் ஓர் உணர்வை ஏற்படுத்த முயற்சி செய்திருந்தார்கள். ஒரு படத்தில் நயன்தாராவின் அப்பா வேடத்தில் நடிப்பவர் ஒரு பாடல் காட்சியில் சானிடரி நேப்கின் வாங்கிவிட்டு அவர் குளியலறையிலிருந்து வெளி வரும்போது மறைவார். அதைப் பார்த்து நயன்தாரா லேசாகச் சிரித்து அதை எடுத்து, பின் திரும்பக் குளியலறை கதவைச் சாத்துவார். நாப்கினை ஒரு தகப்பன் வைக்கும் அந்தக் காட்சி அங்கேயே வெட்டப்பட்டிருக்குமாயின் அது அற்புதமான காட்சி. ஆனால், அவர் நகரும்போது அது லஜ்ஜையாய் மாறும் உணர்வை விதைக்கிறது.

வேறு திரைப்படங்களில் பெண்களின் மார்புகள் காட்டப்பட்ட அளவுக்கு பெண்களின் உடல் அரசியல் பேசப்பட்டதோ, காட்சிப்படுத்தப்பட்டதோ இல்லை. எனக்குத் தெரிந்த பெண்ணின் கணவர் திருமணத்துக்குப் பிறகே நாப்கினைக் கண்ணால் பார்த்திருப்பதாக அவள் சொல்லும்போது அது பொய்யாக இருக்கக்கூடுமென நினைத்திருக்கிறேன். ஆனால், அது நிகழ்ந்திருக்கக்கூடிய சூழலில்தான் நாம் இருக்கிறோம் என்று இப்போது தோன்றுகிறது.

இந்த வார மின்னஞ்சல் மிக அதிர்ச்சியான ஒன்றாக இருப்பினும், இது இந்த மின்னஞ்சலுக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கிற மின்முகவரி என்று அப்பட்டமான உண்மையுடன் ஆரம்பிக்கிறது

அக்கா... பெண்கள் பற்றி எழுதுகிறீர்கள். ஆனால் அவர்களை நான் பாலியியல் பார்வையோடுதான் பார்த்திருக்கிறேன். பல பெண்களோடு தொடர்பு இருந்திருக்கிறது. ஒரு பெண் மாதவிலக்கில் இருக்கும்போது வற்புறுத்தி உறவு கொண்டிருக்கிறேன்.

ஆனால், இன்று அதெல்லாம் நினைத்தாலே வெறுப்பாக இருக்கிறது. இன்று சமூகத்தின் மிக முக்கியமான பதவியில் இருப்பவன் நான். வெளியே ஒரு முகம். உள்ளே வேறொரு முகம். இந்த முகங்கள் நடுவில் ஏற்படும் பேதங்களால் மனசோர்வு மாத்திரைகளை மனோதத்துவ மருத்துவரின் பரிந்துரைபடி சாப்பிடுகிறேன்.

எதற்கு இந்தக் கடிதம்? வளரும்போது பெண்ணை உடலாக மட்டும் பார்த்து, பின் வேதனைப்படுவதைத் தவிர்க்கவே... பிரசுரிப்பீர்களா?

பிரசுரித்தாகிவிட்டது. மாதப்போக்கின் கறைகள்பட்ட உடையோடு பன்னிரண்டு வயதுப் பெண் அவமானப்படுத்தப்பட்டு, தற்கொலை செய்துகொண்ட மாலையில்.

கட்டுரையாளர் குறிப்பு: எழுத்தாளர் தமயந்தி

ஒடுக்கப்பட்ட பெண்களின் சார்பில் தொடர்ந்து எழுதிவரும் எழுத்தாளர். இவரது ‘அக்கக்கா குருவிகள்’, ‘சாம்பல் கிண்ணம்’ சிறுகதைத் தொகுப்புகள் வாசகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றவை. இவரது முக்கிய கட்டுரைத் தொகுப்பு ‘இந்த நதி நனைவதற்கல்ல’. திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். இயக்குநர் மீரா கதிரவனின் ‘விழித்திரு’ திரைப்படத்தில் வசனமும், பாடலும் எழுதியுள்ளார்.

வல்லமை தாராயோ - 1 - தமயந்தி

வல்லமை தாராயோ - 2 - தமயந்தி

வல்லமை தாராயோ - 3 - தமயந்தி

வல்லமை தாராயோ - 4 - தமயந்தி

வல்லமை தாராயோ - 5 - தமயந்தி

வல்லமை தாராயோ - 6 - தமயந்தி

வல்லமை தாராயோ - 7 - தமயந்தி

வல்லமை தாராயோ - 8 - தமயந்தி

வல்லமை தாராயோ - 9 - தமயந்தி

வல்லமை தாராயோ - 10 - தமயந்தி

வல்லமை தாராயோ - 11 - தமயந்தி

வல்லமை தாராயோ - 12 - தமயந்தி

வல்லமை தாராயோ - 13 - தமயந்தி

வல்லமை தாராயோ - 14 - தமயந்தி

வல்லமை தாராயோ - 15 - தமயந்தி

வல்லமை தாராயோ - 16 - தமயந்தி

வல்லமை தாராயோ - 17 - தமயந்தி

வல்லமை தாராயோ - 18 - தமயந்தி

வல்லமை தாராயோ - 19 - தமயந்தி

வல்லமை தாராயோ - 20 - தமயந்தி

வல்லமை தாராயோ - 21 - தமயந்தி

வல்லமை தாராயோ - 22 - தமயந்தி

வியாழன், 31 ஆக 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon