மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 4 செப் 2017

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 2 - உதய் பாடகலிங்கம்

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 2  - உதய் பாடகலிங்கம்

வாழ்வையே மாற்றிய பெயர் மாற்றம்

பிறக்கும்போதே இங்கு எவரும் நல்லவராகவோ, கெட்டவராகவோ இருப்பதில்லை. இது சாமியார்களுக்கும் பொருந்தக்கூடியது. ஒருவரது சூழலும் சுற்றமும்தான், சம்பந்தப்பட்டவரை சாமியாராக வளர்த்தெடுக்கிறது. இதில் நாடு, மதம், இனம் என்று எந்தப் பாகுபாடும் இல்லை. ஆனால், ஒரு சாமியாரைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை நூறில் தொடங்கிக் கோடிகளாகப் பெருகும்போது, அவரைப் பற்றிய கதைகளுக்குக் கால்கள் முளைக்கின்றன. பிறக்கும்போதே தொப்புள் கொடிக்குப் பதிலாக, ஒளிவட்டம் நிறைந்திருந்தது என்று பேச்சுகள் வலுப்பெறத் தொடங்குகின்றன. ‘எதையாவது நம்பினால் மட்டுமே வாழ்க்கையை நடத்த முடியும்’ என்றிருப்பவர்கள் இந்த வலையில் எளிதாக விழுகின்றனர். ‘கற்பழிப்பு சாமியார்’ என்ற அடைமொழியை குர்மீத் ராம் ரஹீமுக்குக் கொடுத்துவரும் ஊடகங்கள் பலவும், இவ்வாறான கதைகள் வழியாகத்தான் பல சாமியார்களை வளர்த்தெடுத்திருக்கின்றன என்பது ஆகப்பெரிய முரண். அவர்களில் ஒருவர்தான், குர்மீத் ராம் ரஹீம் சிங்.

‘இந்த குற்றத்தைச் செய்திருக்க மாட்டார். இந்தப் பூமியை தவறுகளில் இருந்து விடுவிப்பதற்காகவே, பிறந்தவர் அவர்’ என்று இப்போதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் குர்மீத்தின் பக்கம் நிற்கின்றனர். அவர்களின் நம்பிக்கை உயிர்ப்புடன் இருப்பதற்கு, தேரா சச்சா சவுதாவின் நலத்திட்டங்களோ, அதனால் அந்த மண்ணில் நிகழ்ந்திருக்கிற சமூக மாற்றங்களோ மட்டும் காரணமில்லை. குர்மீத் சிங் தன்னைப் பற்றிப் பொதுவெளியில் கட்டமைத்திருக்கிற பிரமாண்டமான பிம்பமும் இதற்குப் பின் இருக்கிறது.

ராம் ரஹீம் ‘அவதாரம்’

ராஜஸ்தானிலுள்ள கங்காநாகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ குருசார் மோடியா கிராமத்தைச் சேர்ந்தவர் மஹார்சிங். சீக்கிய மதத்திலுள்ள ஜாட் பிரிவைச் சார்ந்தவர். பெரும் நிலக்கிழாராக அந்தப் பகுதியில் அறியப்பட்டவர். இவரது மனைவி பெயர் நசிப் கவுர். கல்யாணமாகி 18 ஆண்டுகள் கடந்த பின்பும், இந்தத் தம்பதிக்குக் குழந்தை பிறக்கவில்லை. குழந்தை வரம் வேண்டிய இவர்களது கவனம், எல்லோரையும் போல பக்தியின் பக்கம் திரும்பியது.

ராதாசோமி, சச்சா சவுதா, சச்கந்த் பல்லன், நுர்மஹால், நிரங்காரி, நாம்தாரி என்று பல்வேறு தேராக்கள், அப்போது சீக்கிய மக்களை அரவணைப்பதற்காக வடமாநிலங்களில் இருந்தன. இவற்றில் பல, இன்று பல்லாயிரக்கணக்கில் கிளை பரப்பிப் பெருகியிருக்கின்றன. குர்மீத் சிங்கின் தேரா சச்சா சவுதா அவற்றில் ஒன்று. தேரா என்றால் வீடு என்று பொருள். அதாவது, வீடில்லாதவர்களுக்கான, சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான, சம உரிமையை விரும்புபவர்களுக்கான புகலிடம்.

இந்த நோக்கத்தைச் செயல்படுத்துவதற்காகப் புது டெல்லியிலிருந்து 260 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிர்ஸாவில் சச்சா சவுதா என்ற தேரா தொடங்கப்பட்டது. கடந்த 1948ஆம் ஆண்டு பாபா பலோசிஸ்தானி பேபர்வா மஸ்தானா ஜி என்பவரால் இது தொடங்கப்பட்டது. ராதாசோமி என்ற அமைப்பில் இருந்த மஸ்தானாஜி, அதிலிருந்து பிரிந்து சச்சா சவுதாவைத் தொடங்கினார்.

ஆரம்பத்தில், இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நலத்திட்டங்களையும் உதவிகளையும் சிறிய அளவில் செய்துவந்தது. இந்தியா சுதந்திரமடைந்த பிறகு நிலவிய சமூக ஏற்றத்தாழ்வுகள், விவசாயப் புரட்சியினால் கடுமையாக உழைக்க வேண்டிய நிர்பந்தம், அதற்கு ஏற்ற கூலி கிடைக்காதது, மற்ற சீக்கியர்களைப் போல சீக்கிய தலித் மக்கள் வாழ்க்கையமைப்பு இல்லாதது என்று பல்வேறு காரணங்கள் தேரா சச்சா சவுதா மீதான கவனத்தை அதிகப்படுத்தின.

1960ஆம் ஆண்டு மஸ்தானாஜி மறைய, அவருக்குப் பின் சச்சா சவுதாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றார் பரமபிதா ஷா சத்னாம் சிங்ஜி மஹாராஜ். மறைவதற்கு முன்பு, 1960 ஜனவரி மாதம் மஸ்தானாஜி ஆற்றிய தனது கடைசி உரையில், “இன்னும் 7 ஆண்டுகள் கழித்து நான் மீண்டும் மூன்றாவது மூறையாக மறு ஜென்மம் எடுப்பேன்” என்று சொன்னாராம். இந்த வார்த்தைகள்தான், பின்னாளில் குர்மீத் சிங்கின் பிறப்பை புனிதப்படுத்த உதவியிருக்கின்றன.

விஷயத்திற்கு வருவோம். தேரா சச்சா சவுதாவின் செயல்பாடுகளினால் ஈர்க்கப்பட்டு, அங்கு சென்றுவந்தார் மஹார் சிங். ஒருகட்டத்தில் இது வழக்கமாகிவிட்டது. அப்படியொரு நாளில், மஹார் சிங் - நசீப் கவுர் தம்பதி கங்கா நாகரில் இருந்த சந்த் திரிவேணி தாஸ் என்பவரைச் சந்தித்தனர். குழந்தை பாக்கியம் இல்லாதது பற்றி அவர்கள் வருத்தப்பட, “இருவருக்கும் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் உண்டு” என்று அருள்வாக்கு சொன்னாராம் திரிவேணி தாஸ். அதோடு இன்னொன்றையும் சொன்னாராம். “23 வயதான பிறகு அந்த குழந்தை என்ன செய்ய விரும்புகிறதோ, அதைச் செய்ய அனுமதிக்க வேண்டும்” என்றாராம். “சரி” என்று சொன்னார்களாம் இருவரும். அதன்பின் சில மாதங்களில், நசீப் கருவுற்றதாகச் செல்கிறது குர்மீத் சிங்கின் வாழ்க்கை வரலாறு.

1967 ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று, நசீப் கவுர் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறார். மஹார் சிங் அந்தக் குழந்தைக்கு ‘குர்மீத் சிங்’ என்று பெயரிடுகிறார். பெரும் பண்ணையராக இருந்தவரின் மகனுக்கு, அந்தப் பகுதியில் எப்படிப்பட்ட மரியாதை கிடைத்திருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்த ஊருக்கே செல்லப்பிள்ளையாக வளர்ந்திருக்கிறார் குர்மீத் சிங்.

தெய்வக் குழந்தை?

“அவர் மற்ற குழந்தைகளைப் போல, சாதாரணமானவராக இல்லை. விரைவிலேயே, அவர் கடவுளின் பிள்ளை என்பதை அவரது பெற்றோர்கள் உணர்ந்துகொண்டனர். அதனால், அவரை யாரும் அடிக்கவும் இல்லை; திட்டவும் இல்லை. சிறு வயதிலேயே, அவர் கஷ்டப்படும் மக்களைத் தேடிச்சென்று உதவுவார். அதுதான் இன்று அவர் பெரியளவில் நலத்திட்டங்களை செயல்படுத்தக் காரணம்” என்று குர்மீத்தின் புகழ்பாடுகிறது தேரா சச்சா சவுதா இணையதளம்.

குர்மீத்துக்கு 7 வயதாக இருக்கும்போது, அவரையும் அழைத்துக்கொண்டு சிர்ஸாவுக்குச் சென்றிருக்கிறார் மஹார் சிங். அப்போது குர்மீத் சிங்கைப் பார்த்த சத்னாம் சிங், ‘குர்மீத் ராம் ரஹீம் சிங்’ என்று அவரது பெயரை மாற்றியிருக்கிறார். “அந்தக் கணத்திலிருந்து, அவர் மஸ்தானாஜியின் மறு அவதாரம் என்பதையும் கண்டுகொண்டார்” என்று புகழ் பாடுகின்றனர் குர்மீத்தின் பக்தர்கள்.

வழக்கமாக ஜாட் இனத்தைச் சேர்ந்த மஹார் சிங் குடும்பத்தினர் தங்கள் பெயருக்குப் பின்னால் ‘சித்து’ என்று சேர்த்துக்கொள்வது வழக்கம். சத்னாம் சிங், அதனைத் தவிர்த்துவிட்டார் என்பதை வடஇந்தியப் பத்திரிகைகள் கோடிட்டுக் காட்டியிருக்கின்றன. அதாகப்பட்டது, குர்மீத்தின் சாதி அடையாளத்தை வெகு சாமர்த்தியமாக மறைத்துவிட்டார் சத்னாம் சிங்.

குர்மீத் சிங் தனது எதிர்காலத்தைத் தானே வடிவமைத்துக்கொள்வதற்கான விதை, அந்தக் கணத்தில் துளிர்த்திருக்கிறது.

நாளை...

மினி தொடர்: யார் இந்த ராம் ரஹீம்? 1

திங்கள், 4 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon