மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 10 டிச 2019

சிறப்புக் கட்டுரை: ஓடிடி எனும் மாயவன்!

சிறப்புக் கட்டுரை: ஓடிடி எனும் மாயவன்!

கேபிள் சங்கர்

ஓடிடி எனும் வார்த்தையைப் பல வருடங்களுக்கு முன் டெக்னாலஜி ஆட்கள் பயன்படுத்தியதைப் பார்த்திருப்பீர்கள். கேபிள் டிவி ஆபரேட்டர்கள் செட்டாப் பாக்ஸுகள் மூலம் ஒளிபரப்ப ஆரம்பித்தபோது அந்த டெக்னாலஜியை ஓடிடி சாப்பிட்டுவிடும் என்று சொன்னவர்கள் உண்டு. ஓடிடி என்றால் என்ன? ஓவர் த டாப் டெக்னாலஜி. கேபிள், டிவி, டிஷ் போன்றவற்றின் மூலம் மட்டுமல்லாமல் இணையம் மூலம் ஒளிபரப்பாகும் முறைதான் இது. இதைப் பற்றி ஐந்து வருடங்களுக்கு முன்னால் நண்பர்களிடம் நான் சொல்லிக்கொண்டிருக்கும்போது, “ஓ இன்டர்நெட் மூலமாகவா... நம்ம ஊரில் இன்டர்நெட் ஸ்பீட் வந்து, அது ஸ்ட்ரீம் ஆகி... நடக்கிற கதையா சார்? இங்க 2ஜியே தத்தளிக்குது” என்றார்கள். “இல்லை நண்பர்களே இது நிச்சயம் மாறும். அதற்கான காலத்துக்கு நாம் தயாராகிறோமோ... இல்லையோ, டெக்னாலஜி தயாராக்கிவிடும்” என்றேன். அதுதான் இப்போது நடக்க ஆரம்பித்திருக்கிறது.

அகலத் திறக்கும் கதவுகள்

ஜியோ எனும் இன்டர்நெட் சுதந்திரம் கிடைக்க ஆரம்பித்ததில் இருந்து வாட்ஸ்அப்புக்கு டேட்டா பத்தாமல் இருந்தவர்களெல்லாம் இருபத்தி நாலு மணிநேரம் ஆன்லைனில் இருக்க ஆரம்பித்திருக்க, போட்டி கம்பெனிகளும் வேறு வழியேயில்லாமல் டேட்டாக்களை சல்லிசாக அள்ளிக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்குப் பின்னால் இருக்கும் வியாபார அரசியலைப் பற்றிப் பிறகு பேசுவோம். இந்த ஓடிடி பிளாட்பார்ம் எத்தனை இளைஞர்களுக்கு, கலைஞர்களுக்கு, சினிமா வியாபாரத்துக்குத் தன் அகண்ட அலைவரிசைக் கைகளை விரித்துக் கதவுகளை திறந்துவிடப்போகிறது என்பதை இப்போது பார்போம்.

ஓடிடி பிளாட்பார்ம் என்றால் என்ன? இணையம் மூலம் கண்டெண்டுகளை மொபைலில் ஆப்கள் மூலமாகவும், ஸ்மார்ட் டிவிக்கள், ஆண்ட்ராய்டு டிவிக்கள் மூலமாகவும் ஒளிபரப்பப்படும் சேனல்கள். இருக்குற சேனல்களையே பார்க்குறதுக்கு டைமில்லை... இதுல மொபைலில் பார்க்குறதா, டிவியில வரும் 400 சொச்ச சேனல்களைவிடவா நல்ல நிகழ்ச்சிகள் வந்துவிட முடியும். அதெல்லாம் பணக்காரங்க வெச்சிருக்கிற டிவி. தமிழ்நாட்டில் பெரும்பாலானவர்கள் வீட்டில் கலைஞர் கொடுத்த இலவச டிவிதான். இதெல்லாம் இன்னைக்கு சாத்தியமே இல்லை என்று பல கேள்விகள் / கருத்துகள் உலாவரத்தான் செய்கின்றன.

ஆனால், உண்மையில் இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே இன்னொரு பக்கம் டிஜிட்டல் ரைட்ஸ் எனும் உரிமை, கிரிக்கெட் மற்றும் பல விளையாட்டுப் போட்டிகளுக்கு டிவி ரைட்ஸ் அளவுக்குத் தனியே விற்பனையாக ஆரம்பித்திருக்கிறது. அதை வாங்குவதற்குப் போட்டி வேறு. முன்பெல்லாம் டிவி ஷோரூமின் வாசலில் கூட்டமாக மக்கள் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதை பார்த்திருப்பீர்கள். இன்றைக்கு அந்தக் கும்பல் பாதியாகிவிட்டது. ஏனென்றால் இளைஞர்கள் பல பேர் மொபைலில் சில நிமிட பின்தங்கிய ஒளிபரப்பை இலவசமாக ஹெச்.டி. தரத்துடன் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். மொபைலில் வெப்சைட்களைப் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். மின்னம்பலம் போன்ற மொபைல் இதழ்களின் வீச்சே இதற்கு உதாரணம்.

யூடியூப் நட்சத்திரங்கள்

மொபைலில் படம் பார்பது எல்லாம் சரிப்பட்டு வராது. சின்ன ஸ்க்ரீனில் படம் பார்ப்பது என்ன விதமான அனுபவத்தைக் கொடுத்துவிடும். நல்ல டிவியிலேயே அது கிடைப்பதில்லை. அப்படியிருக்க மொபைலில் நோ வே என்பார்கள். இன்றைக்குத் தமிழில் பிரபலமாகிக்கொண்டிருக்கிற வெப் சீரிஸ்களை பஸ், ரயில் என டிராவலில் பார்த்தவர்கள்தான் அதிகம். ஸ்மைல் சேட்டை முதல், புதிது புதியாய் பிரபலமாகிக்கொண்டிருக்கும் யூடியூப் பிரபலங்களின் மேடையே ரயில், பஸ் மற்றும் கம்ப்யூட்டர்கள்தான் என்று சொன்னால் இப்போது ஒப்புக்கொள்வீர்கள். ஏனென்றால் இவர்களை நீங்கள் அறிந்தது இணையம் மூலமாகத்தான்.

சமீபத்தில் வெளியான மீசையை முறுக்கு திரைப்படத்தில் பல யூடியூப் பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இவர்கள் திரையில் தெரியும் காட்சிகளில் எல்லாம் ஒரு பெரிய ஸ்டார் படத்துக்கு வந்த எஃபெக்ட்டை மக்கள் கொடுக்க, இணையத்தில் அவ்வளவாக நடமாடாதவர்கள், “யார் இவரு? எதுக்கு இப்படி எல்லா பசங்களும் கத்துறானுவ? ஒருவேளை கலாய்க்கிறாங்களோ?” என்று புரியாமல் பார்த்தவர்கள் அதிகம். ஆனால் அந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்று இளைஞர்களுக்கு நெருக்கமான யூடியூப் பிரபலங்கள் அதில் இருந்ததும்தான்.

Netflix, Prime video, Hot star, Sun nxt, Voot, Viu, ozee, Yupptv, SonyLiv, tubitv, Altbalaji, Hungama, Eros Now, Daily motion, youtube, viu, yuv, jiotv, jio movies, Airteltv, Hero Talkies, Tenttukotta என வரிசை கட்டிக்கொண்டு நிற்கின்றன. பெரிய டிவி நிறுவனங்கள் எல்லாம் தங்களது பேக்கேஜ் சேனல்களை ஆப் மூலமாய் கொடுக்க ஆரம்பித்திருக்க, இந்த ரேஸில் நாமும் இருக்க வேண்டி யூனானி, ஆயுர்வேத, டேபிள் டாப்களை மட்டுமே விற்கும் குட்டி சேனல்கள் எல்லாம் ஒன்றுசேர்ந்து ஒரு ஆஃப்பை போன வாரம் லாஞ்ச் செய்திருக்கிறார்கள் என்பதை கவனிக்கும்போது மொபைலில், ஆப்களின் மூலமாய் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் மறுக்க முடியாது. வெறும் டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்கத்தான் இந்த ஆப்கள், ஓடிடி பிளாட்பார்மா என்றால் இல்லை... அதன் வீச்சே வேறு. அது என்னவென்று அடுத்த கட்டுரையில்…

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: கேபிள் சங்கர்... எழுத்தாளர், திரைப்பட விமர்சகர், இயக்குநர். ‘சினிமா வியாபாரம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். ‘தொட்டால் தொடரும்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

புதன், 27 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon