மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 2 ஜுன் 2020

பியூட்டி ப்ரியா

பியூட்டி ப்ரியா

நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது, நாம் பார்ப்பது அனைத்துமே அழகாகத்தான் தெரியும். “அழகு என்பது நிறத்தில் இல்லை. அது மனத்தில்தான் இருக்கிறது” என்பதை பலர் அறிந்தாலும் ஏனோ நாம் அழகாக இல்லையோ, அவர்களைவிட நாம் அழகில் குறைந்தவர்களோ என என்னன்னவோ நினைத்து பார்லரே கதி என்று கிடக்கிறோம்.

நேரமும் பணமும் உழைப்பும் அதற்கென கூடுதலாகவே செலவழிக்கிறோம். சிலருக்கு ஒவ்வாமை, பக்கவிளைவுகள் ஆகியவை ஏற்பட்டு மருத்துவரிடம் அதற்கான பணத்தை வாரி கொட்டுவதையும் பார்த்த வண்ணம் உள்ளோம்.

பொலிவான முகம், அழகான முக அங்கங்கள், முழுமையான உதடுகள், வசீகரிக்கும் கண்கள் இவற்றாலும் ஒருவர் அழகானவர் என பார்த்த மாத்திரத்தில் வரையறுக்கப்படுகிறது.

இயற்கை முறையில் தலைமுடி தொடங்கி புருவம், கன்னம், கழுத்து, பாதம் வரையிலான உடல் உறுப்புகள் அனைத்தும் அசாத்தியமான அழகைப்பெறுவது சாத்தியமா என்றால் சாத்தியமே.

இயற்கையாக நம்மிடம் உள்ளவற்றைக்கொண்டே மிகவும் பொலிவாகவும் அழகாகவும் தோன்றிட சில டிப்ஸ்களோடு இனி தினமும் மின்னம்பலத்தில் வலம் வரப்போகிறாள் இந்த பியூட்டி ப்ரியா.

என்னதான் சுவையான பதார்த்தமாக இருந்தாலும் அதை வைக்கும் இடம் சுத்தமாக இல்லையெனில் அப்பொருள் இனிக்காது.

அதுபோல எவ்வளவுதான் முகம் மிகமிக அழகாக இருந்தாலும் கூந்தலின் அடர்த்தி குறைவாக இருந்தால், கலரிங் செய்திருந்தால்கூட முக அழகை குறைத்துத்தான் காட்டும். அதனால் முதலில் கூந்தல் அழகில் கவனம் செலுத்துவது நல்லது.

இன்றைய பெண்களில் பலருக்கு முடி உதிர்தல், வழுக்கை, அடர்த்தி குறைவு, நீளமாக வளர்வது இல்லை. பொடுகு, நரை இவை காரணமாகவே தலைமுடியை குறுகிய அளவோடு வெட்டிக்கொள்கின்றனர்.

பராமரிப்பது சிரமம் என்பதாலும் பொடுகு, பேன் தொல்லை காரணமாகவும் நீளமான கூந்தல் குறுகிப்போய் விடுகின்றன.

தலைமுடியின் வேர் பகுதியில் எண்ணெய் பசை இல்லாமல் வறண்டு போவதால்தான் முடி உதிர்தல் ஏற்படுகிறது. மன அழுத்தம், வேலைப்பளு அதிகம், குறிப்பிட்ட நேரத்தில் பணியை முடிக்க வேண்டிய கட்டாயம், 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை வேலை பார்க்கும் சாப்ட்வேர் இன்ஜினீயர்கள் ஆகியோருக்கு இதுபோன்ற குறைபாடுகள் இருக்கும்.

சுத்தமின்மை, மாதக்கணக்கில் தலைக்கு குளிக்காமல் இருப்பது, தரமற்ற ஷாம்பூ உபயோகிப்பது போன்றவையும் பொடுகு வருவதற்கு காரணமாக அமைகின்றன.

ஒரு டீஸ்பூன் வெந்தயத்துடன், ஒரு டீஸ்பூன் துவரம் பருப்பை நைசாக அரைத்து குளிக்கும் முன் தலையில் வேர் பகுதி வரை நன்கு பூசி தடவிக் கொள்ள வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து குளிக்கும்போது தேய்த்து கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்தால் தலைமுடியின் வேர்ப்பகுதியில் வறட்சி ஏற்படாமல் எப்போதும் குளிர்ச்சியாக வைத்து இருக்கும்.

இது முடி உதிர்வதை தடுப்பதுடன் மீண்டும் வளர ஆரம்பிக்கும். இது போல் வாரம் மூன்று நாள்கள் செய்ய வேண்டும். வயது அதிகரிப்பு காரணமாகவும் உடல் ரீதியான மாற்றங்கள் நேரும்போதும் முடி வளர்ச்சி குறைந்து விடும். இது நபருக்கு நபர் வித்தியாசப்படும்.

தினமும் சுமார் 50 முதல் 100 முடிகள் உதிரும். அதே அளவு முடி வளரவும் செய்யும். முடி கொட்டுகிறதே என்று தலையைச் சீவாமல் இருந்தால் முடி வளர்ச்சி முற்றிலும் நின்று விடும் என்பது பலருக்கும் தெரியாத விஷயமாக இருக்கிறது.

கூந்தலுக்கு ஷாம்பூ, ஹேர் டிரையர், கெமிக்கல் ஹேர் டை பயன்படுத்துவதாலும் பெர்மிங் செய்தல், முடியை நேராக்குதல், அயர்னிங், பிளீச்சிங், கலரிங் செய்து கொள்வதாலும் தலைமுடி உதிர்வதுடன், இளம் வயதிலேயே முடி நரைத்து வயோதிகத் தோற்றத்தை ஏற்படுத்தி விடும்.

- பொலிவோடு நாளையும் வருவாள் பியூட்டி ப்ரியா

ஞாயிறு, 1 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon