மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 10 ஏப் 2020

கிரண்பேடி கையிலெடுக்கும் படகு ஊழல்!

கிரண்பேடி கையிலெடுக்கும் படகு ஊழல்!

புதுச்சேரியில் ஒவ்வொரு பிரச்னையாகத் தோண்டி எடுத்து விஸ்வரூபமாக காட்ட முயன்று கொண்டிருக்கிறார் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி. புதுச்சேரியில் மருத்துவப் படிப்பு சேர்க்கையில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை சி.பி.ஐ. இப்போது விசாரித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சொகுசு படகு டெண்டர்விட்டதில் ஊழல் நடைபெற்றிருப்பதாக, மத்திய ஊழல்தடுப்பு கண்காணிப்புப் பிரிவுக்குக் கடிதம் அனுப்பியதன் மூலம் அடுத்த சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் கிரண்பேடி.

இதுபற்றி நேற்று செய்தியாளர்கள் முதல்வர் நாராயணசாமியிடம் கேள்வி கேட்டபோது, “துணைநிலை ஆளுநர் விதிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும். சொகுசு படகு டெண்டரில் ஊழல் என்று புகார் அனுப்பியுள்ளது எங்களுக்குத் தெரியாது, அது சம்பந்தமாக துணைநிலை ஆளுநர் எங்களுடன் ஆலோசனை செய்திருக்க வேண்டும்.

சொகுசு படகு டெண்டர் கடந்த ஆட்சியில் 2012இல் அறிவிக்கப்பட்டு மீண்டும் மறுடெண்டர் விடப்பட்டு வேலையைத் தொடங்கினார்கள். இதுகூட தெரியாமல், மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார் துணைநிலை ஆளுநர். விசாரணை வரட்டும் மகிழ்ச்சியோடு சந்திக்கிறோம்” என்றார் முதல்வர்.

ஆனால் என்.ஆர்.காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஒருவரோ, “முதல்வர் நாராயணசாமிதான் தெரியாமல் பேசுகிறார். துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ரொம்ப விவரமாகத்தான் விசாரணை கேட்டுள்ளார். சொகுசு படகு டெண்டர் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில்தான் அறிவிக்கப்பட்டது. என்.ஆர்.காங்கிரஸை, பாஜகவுடன் கூட்டணிக்கு இழுக்க முயற்சித்து வருகிறார்கள். ஆனால், என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பிடிகொடுக்கவில்லை. அதனால் ரங்கசாமியை மிரட்டும் வகையில் சொகுசு படகு டெண்டரில் ஊழல் என்று பழைய கோப்புகளைத் தூசு தட்டுகிறார் கிரண்பேடி. உண்மையில் நாராயணசாமி அரசியல் செய்ய வேண்டுமென்றால் கிரண்பேடியின் கோரிக்கையை ஏற்று என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் நடந்த படகு டெண்டர் ஊழலை கண்டுபிடிக்க வேண்டும். அப்போதுதான் பாஜகவால் என்.ஆர். காங்கிரஸோடு கூட்டணி அமைக்க முடியாது” என்றார்.

அட கொடுமையே!

ஞாயிறு, 1 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon