மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 10 ஏப் 2020

சிறப்புப் பார்வை: கிராமப்புறங்களில் தள்ளாடும் டிஜிட்டல் பேமெண்ட் திட்டம்!

சிறப்புப் பார்வை: கிராமப்புறங்களில் தள்ளாடும் டிஜிட்டல் பேமெண்ட் திட்டம்!

அனுஜ் ஸ்ரீவாஸ்

பணப் பரிமாற்றத்தை முற்றிலும் டிஜிட்டல்மயமாக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசின் பிரதான நோக்கமாக இருந்து வருகிறது. பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப்பின் இந்த நோக்கம் ஓரளவு உயர்வு பெற்றது என்றுதான் சொல்ல வேண்டும்.

அதேவேளையில், மத்திய அரசின் செல்ல திட்டங்களான பீம் மற்றும் பீம்-ஆதார் போன்றவை நகர்ப்புறங்களில் அடைந்த வெற்றியைக் கிராமப்புறங்களில் அடையவில்லை என்பது சமீபத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவின் தேசிய கொடுப்பனவு கூட்டமைப்பு (என்.பி.சி.ஐ.) நடத்திய உள் ஆய்வில், போதிய விழிப்புணர்வு இல்லாதது மற்றும் மோசமான பயனர் அனுபவம் காரணமாக கிராமப்புறங்களில் உள்ள பலர் இந்தச் செயலிகளைத் தங்கள் மொபைலில் இருந்து நீக்கியுள்ளனர் அல்லது பயன்படுத்தாமல் உள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

2016ஆம் ஆண்டு டிசம்பரில் பீம் செயலியை அறிமுகப்படுத்தும்போது, ‘தொழில் சார்ந்த அனைத்துப் பரிவர்த்தனைகளும் பீம் மூலம் நடைபெறும் காலம் வெகு தூரமில்லை’ என்று பிரதமர் மோடி பெருமிதத்தோடு கூறினார். தற்போதைய நிலையில், 2 கோடி தடவை பீம் செயலி தரவிறக்கம் செய்யப்பட்டிருந்தாலும், தரவிறக்கம் செய்தவர்களில் வெறும் 30 சதவிகிதத்தினர் மட்டுமே வங்கிக் கணக்குடன் பீம் செயலியை இணைத்துள்ளனர்.

பீம் செயலி தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், புறநகர் மற்றும் கிராமப்புற மக்களுக்கு பீம் செயலி எதற்காக என்பது குறித்தும் அதை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றியும் குறைந்தபட்சப் புரிதலே உள்ளது.

நல்ல செயலிதான்; ஆனாலும்...

அதேவேளையில், பீம் ஆதார் செயலியில் பல்வேறு நல்ல அம்சங்களும் உள்ளன. இதைப் பயன்படுத்துவதும் மிக எளிமையானது. வாடிக்கையாளர் தங்களின் ஆதார் எண் மற்றும் கைரேகையைப் பயன்படுத்திக் கட்டணங்களைச் செலுத்தலாம் என்பது எளிமையானதுதான். பீம் செயலி அறிமுகப்படுத்தப்பட்ட ஆறு மாதங்களில் பீம் செயலியுடன் ஆதாரை இணைத்துக் கட்டணங்களைச் செலுத்தும் பீம் ஆதார் செயலியைப் பிரதமர் அறிமுகப்படுத்தினார்.

கைரேகை பதிவதற்கான பி.ஓ.எஸ். இயந்திரங்களை வங்கிகள் அதிக அளவு பயன்படுத்தும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. 2017 பிப்ரவரி மாதத்தில் இதுதொடர்பாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறும்போது, “இவ்வாண்டு செப்டம்பர் மாதத்துக்குள் 20 லட்சம் பி.ஓ.எஸ். இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்படும்” என்று தெரிவித்தார். ஆனால், இதன் தற்போதைய நிலை என்ன என்பது விடை தெரியாத கேள்வியாக உள்ளது.

பீம் ஆதார் போன்றவை நல்ல திட்டங்கள் என்றபோதும், தேவையான அம்சங்கள் இல்லாதது, கட்டுப்பாட்டு வரம்புகளை உள்ளடக்கியது போன்றவை அவற்றுக்குப் பாதகமாக உள்ளன.

இதனால் பல மாநிலங்களில் இத்திட்டம் தரைதட்டத் தொடங்கியுள்ளது. சாதனங்களை வழங்குவதற்கு முன் வணிகர்களின் தகுதி சரி பார்க்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், பல்வேறு வணிகர்கள் பி.ஓ.எஸ். இயந்திரப் பயன்பாட்டை நிறுத்தியுள்ளனர் அல்லது குறைத்துள்ளனர்.

நடைமுறைச் சிக்கல்கள்

குறைகளை நிவர்த்தி செய்யும் வசதி இல்லாததால் பரிவர்த்தனையின் வெளிப்படைத்தன்மை பாதிக்கப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை தொடர்பான பிரச்னைகளும் எழுகின்றன. இது தொடர்பாகச் சில வணிகர்கள், பரிவர்த்தனை தோல்வி அடைந்தாலோ அல்லது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டாலோ யாரைத் தொடர்புகொள்வதென்றே தெரியவில்லை என்று ஆய்வு நடத்தியவர்களிடம் தெரிவித்துள்ளனர். இத்தகைய பிரச்னைகள் ஏற்படும்போது யாரைத் தொடர்புகொள்ள வேண்டும் என்பது குறித்து அவர்களுக்குப் போதிய அளவு விளக்கப்படாமல் உள்ளது.

மறுபக்கம் வர்த்தகப் பரிவர்த்தனைத் தளமும் குறுகிய அளவிலேயே செயல்படுகிறது. தாங்கள் மேற்கொள்ளும் தினசரி பரிவர்த்தனையை மட்டுமே வணிகர்களால் அதில் பார்க்க முடியும். இதுவரை மேற்கொள்ளப்பட்ட அனைத்துப் பரிவர்த்தனைகளுக்குமான முழுமையான அறிக்கை அவர்களுக்குக் கிடைப்பதில்லை. பரிவர்த்தனை தகவல்களை தரவிறக்கம் செய்யவோ, பிரின்ட் எடுக்கவோ அவர்களுக்கு வாய்ப்பில்லை.

‘வணிகத் தேர்வுக்கு முன் வரையறுக்கப்பட்ட அளவுகோல்கள் தேவை’ என்று ஆய்வை மேற்கொண்ட என்.பி.சி.ஐ கருத்து தெரிவித்துள்ளது. பி.ஓ.எஸ். இயந்திரங்களை நிறுவுவது, பயன்படுத்துவது மற்றும் அதன் பண்புகள் தொடர்பாகக் கடை முதலாளிகளுக்குப் போதிய பயிற்சி வழங்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளது.

பீம் செயலியை நீக்கியுள்ளவர்கள் அல்லது செயல்படுத்தாமல் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பீம், செயலியை எப்படிப் பயன்படுத்துவது, அதை ஏன் பயன்படுத்த வேண்டும், மற்ற சாதனங்களை விட பீம் செயலியை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மை என்ன என்பது பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததே இதற்குப் பிரதான காரணம்.

பீம் செயலியைத் திறக்கும்போதே பிரச்னைகள் தொடங்கிவிடுகின்றன. ஒவ்வொரு திரையிலும் எந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும், தவறான நுழைவு காரணமாக பிழை ஏற்பட்டிருந்தால் அதை எப்படிச் சரி செய்ய வேண்டும் எனத் தெரியாமல் பயனர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நடைமுறைச் சிக்கல்களைக் குறைத்தால்தான் பீம் செயலியை வாடிக்கையாளர்களின் அன்றாட செயல்பாட்டுக்குரியதாக மாற்ற முடியும்.

நன்றி: The Wire

தமிழில்: முருகேஷ்

ஞாயிறு, 1 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon