மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 9 டிச 2019

பதிலடி கொடுக்குமா இந்தியா?

பதிலடி கொடுக்குமா இந்தியா?

ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில், முதல் மூன்று போட்டியில் இந்தியா 3-0 என வென்று தொடரைக் கைப்பற்றியது. பெங்களூரில் நடந்த நான்காவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாக்பூரில் இன்று (அக்டோபர் 1) நடைபெறுகிறது.

இந்திய அணி, நான்காவது போட்டியில் ஏற்பட்ட தோல்விக்குப் பதிலடி கொடுக்கும் ஆர்வத்தில் விளையாடும். அதேபோல் ஆஸ்திரேலிய அணியும் கடந்த போட்டியில் பெற்ற வெற்றியைத் தக்கவைக்கப் போராடும். அதனால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது.

கடந்த போட்டியில் வீரர்கள் தேர்வில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. புவனேஷ்வர் குமார், பும்ராவுக்குப் பதிலாக உமேஷ், சமி இடம்பெற்றனர். உமேஷ் யாதவ் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினாலும் தேவையான சமயத்தில் ஒரு வேகப்பந்து வீச்சாளராகக் கொடுக்க வேண்டிய அழுத்தத்தைக் கொடுக்கவும், முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தவும் தவறிவிட்டார். இதனால் மீண்டும் புவனேஷ்வர் குமார் அணிக்குத் திரும்பி, உமேஷ் இரண்டாவது பவுலராக மாற்ற வாய்ப்புள்ளது. டெஸ்ட் போட்டிகளில் அதகளப்படுத்திய ராஹுலுக்கு மட்டுமே இதுவரை வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதனால் மனிஷ் பண்டேவுக்குப் பதிலாக ராகுல் அணியில் இடம்பெறலாம்.

நான்காவது போட்டியில் அதிரடியாக விளையாடி வென்றது போல் இந்த ஆட்டத்திலும் வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்துடன் ஆஸ்திரேலியா உள்ளது. வார்னர் நல்ல நிலைக்குத் திரும்பியிருப்பது அந்த அணிக்குக் கூடுதல் பலம். அதேபோல் ஆரோன் பிஞ்ச், கேப்டன் சுமித் ஆகியோரும் நல்ல ஃபார்மில் உள்ளனர். சுழற்பந்து வீரர் ஆடம் ஜம்பா கடந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசினார். இன்றைய போட்டியிலும் அவர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

இந்தப் போட்டி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 128ஆவது போட்டியாகும். இதுவரை நடந்த 127 போட்டிகளில் இந்தியா 44 வெற்றியும், ஆஸ்திரேலியா 73 வெற்றியும் (10 போட்டிகளுக்கு முடிவு இல்லை) பெற்றுள்ளன.

ஞாயிறு, 1 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon