மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 1 அக் 2017

கிச்சன் கீர்த்தனா

கிச்சன் கீர்த்தனா

புளி சாதத்துக்குள் முட்டையை ஒளித்துவைத்து, அதற்கு ‘புளியன் பிரியாணி’ எனப் பெயர் சூட்டிய மகான் கவுண்டமணி அவர்களின் காலத்துக்கு முன்பாகவே, சோழர்கள் காலத்திலோ அல்லது பல்லவர்கள் காலத்திலோ கண்டுபிடிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் இந்த ‘உப்புமா’.

அலறி அடித்து ஓடும் கணவன்மார்களை கதிகலங்க வைப்பதும், இல்லத்தரசிகளின் முக்கால ஆயுதமாகவும் திகழ்வது இந்த உப்புமாவே.

அரிசி உப்புமா, ரவை உப்புமா, கோதுமை உப்புமா என்று தொடங்கி இன்று பால் உப்புமா, பணியாரம் உப்புமா என்னும் லெவலை தாண்டிச்சென்று ஆன் லைனிலும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

என்ன செய்கிறோம் என்பதைவிட, அதை எப்படி செய்கிறோம், என்ன பெயர் சூட்டுகிறோம், எப்படி பரிமாறுகிறோம் என்பதில்தான் இருக்கிறது சமையலின் சுவாரஸ்யமே.

சுவையான சமையல், குட்டி குட்டி கிச்சன் டிப்ஸ்கள், சத்துள்ள சமையல்கள், இயற்கையோடு இணைந்த ஆரோக்கிய உணவுகள் என அத்தனை சுவாரஸ்யத்தையும் அனுதினமும் உங்களிடத்தே அளிக்க வருகிறாள் இந்த கிச்சன் கீர்த்தனா.

* வெங்காய ஊத்தப்பம் செய்யும்போது தோசை இருபுறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப்பகுதியில் சிறு ஓட்டை போட்டு எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்தும், சுவையாகவும் இருக்கும்.

* தோசைக்கு அரிசி, உளுந்து ஊற வைக்கும்போது ஒரு கிலோவுக்கு 50 கிராம் வேர்க்கடலை, 50 கிராம் பட்டாணி சேர்த்து ஊறவைத்து அரைத்து மாவுடன் கலந்து தோசை வார்த்தால் நிறமான, சுவை அதிகமான, சத்து நிறைந்த தோசை ரெடி.

* வெங்காயம் வதக்கும்போது சிறிதளவு சர்க்கரை சேர்த்தால் எளிதில் வதங்கி விடும்.

* ஊறுகாய் தயாரிக்கும்போது கைகளைப் பயன்படுத்தக் கூடாது. மரத்தினால் ஆன கரண்டிகளையே பயன்படுத்துங்கள்.

* கோதுமை மாவு அரைக்கும்போது அதனுடன் சோயா பீன்ஸையும் சேர்த்து அரைத்தால் சப்பாத்திகள் ஊட்டம் கூடுவதுடன் ருசியும் அபாரமாக இருக்கும்.

* வெங்காயத்தைத் தோலோடு குளிர்ந்த நீரில் போட்டு பின்னர் நறுக்கினால் கண்களில் நீர் வராது.

* ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி உப்பை கலக்கவும். பிறகு இதில் முட்டையை போடவும். முட்டை மூழ்கினால் அது புதிய முட்டை. மிதந்தால் பழைய முட்டை.

* இஞ்சி, பூண்டு சட்னி தயாரிக்க இரண்டையும் இரண்டுக்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.

* காய்ந்த பழங்களைப் பராமரிக்க அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் 2-3 கிராம்புகளைப் போட்டு வைத்தால் நீண்ட நாள்களுக்கு ருசி கெடாமல் இருக்கும்.

* தண்ணீரில் சிறிதளவு வினிகரைச் சேர்த்தால் விரிசல் விழுந்த முட்டையைக் கூட சமைக்கலாம்.

* முட்டைக்கோஸைச் சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.

* உருளைக்கிழங்குகளை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைக்கக்கூடாது. ஏனெனில், அதிலுள்ள ஈரத்தன்மையால் கிழங்கு அழுகி விடும் வாய்ப்பு இருக்கிறது.

* காலிஃபிளவரை சமைக்கும் முன் அவற்றைக் கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்துக்கு முக்கி எடுக்கவும். அதனால், அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும்.

* குக்கரில் பருப்பை சமைக்கும்போது, ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூளையும், ஒரு டீஸ்பூன் நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மணத்துக்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.

* சப்பாத்திக்கு மாவு உருட்டும்போது அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறைத் துணியை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் அந்த பலகை ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவைத் தேய்க்கலாம்

* வாழைத்தண்டுகள், கீரைத்தண்டுகள் மற்றும் கொத்துமல்லி இலைகள் வாடாமல் இருக்க அவற்றை அலுமினியம் காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.

* பழம், ஃப்ரூட் சாலட், ஜூஸ் ஆகியவற்றின் சுவையை அதிகரிக்க சிறிதளவு தேன் சேர்க்கலாம்.

* தேங்காயைச் சரிபாதியாக உடைக்க தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.

* டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில் உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணத்தோடு சுவையாக இருக்கும்.

* தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க, நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்தமல்லியும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

கீர்த்தனா தத்துவம்:

தோசையை நின்னுகிட்டுதான் ஊத்தணும். ஆனா, கால் வலிக்கும். இட்லியை ஊத்திட்டு உட்கார்ந்துக்கலாம். ஆனா, நிறைய பாத்திரம் கழுவணும். துன்பம் எதில்தான் இல்லே?!

ஞாயிறு, 1 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon