மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 9 டிச 2019

சண்டே சக்சஸ் ஸ்டோரி: சதீஷ்குமார் (மில்கி மிஸ்ட்)

சண்டே சக்சஸ் ஸ்டோரி: சதீஷ்குமார் (மில்கி மிஸ்ட்)

பால் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் தலைவர் சதீஷ்குமார் குறித்து இந்த வார சக்சஸ் ஸ்டோரியில் காணலாம்.

ஈரோடு மாவட்டம், சித்தோட்டில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் சதீஷ்குமார். இவருடைய குடும்பத்துக்குச் சொந்தமாக 20 ஏக்கர் நிலம் மட்டுமே இருந்தது. இவர் தனது பள்ளிக் கல்வியை ஈரோட்டில் உள்ள இந்து கல்வி நிலையத்தில் கற்றார். பள்ளிக் கல்வியையும் முழுமையாக முடிக்காமல் பாதியிலேயே இடை நின்றார். சதீஷ்குமார் தொழில் துறையில் மிகப்பெரிய கனவுகளைக் கொண்டிருந்தார். அதற்கான சவால்களை எதிர்கொள்ளும் துணிவையும் கொண்டிருந்தார். இந்தத் துணிவும், முயற்சியும் சதீஷ்குமாரை தனது 40ஆவது வயதில் மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக ஆக்கியது. அதுகுறித்துக் காண்போம்.

சதீஷ்குமாரின் தந்தை விவசாயம் மட்டுமின்றி நெசவுத் தொழிலிலும் ஈடுபட்டார். பள்ளிக் கல்வியை முடித்த பின்னர் சதீஷ்குமாரும் முதலில் தனது சகோதரருடன் இணைந்து இத்தொழிலிலேயே ஈடுபட்டார். ஆனால் மூன்றே ஆண்டுகளில் இத்தொழிலைக் கைவிட்டு விட்டார். பின்னர் சகோதரர்கள் இணைந்து பால் விற்பனையில் ஈடுபட்டனர். கேன்களில் அடைத்து குளிரூட்டி தினமும் பெங்களூவுக்கு அனுப்பி விற்பனை செய்தனர். ஒரு நாளைக்கு 3,000 லிட்டர் பால் விற்பனை செய்துவந்தனர்.

பிறகு, பனீர் தயாரிக்கும் எண்ணம் சதீஷ்குமாருக்கு ஏற்பட்டது. ஆனால் முதலில் அதை எப்படித் தயாரிப்பது என்பதுகூட இவருக்குத் தெரியாது. இவருக்கு உதவி செய்யவும் யாரும் முன்வரவில்லை. பின்னர் இதற்கான தகவல்களை பல்வேறு வழிகளில் பெற்றார். சூடான பாலில் வினிகரைக் கலந்துதான் பனீர் தயாரிக்கப்படுகிறது என்று இவருக்குக் கிடைத்த தகவல்களைக்கொண்டு பனீர் தயாரிப்பில் ஈடுபட்டார். நல்ல தரமான பனீரை உருவாக்க முடிந்தது.

1993ஆம் ஆண்டு, முதன்முதலாக 10 கிலோ பனீர் தயாரித்து பெங்களூருவுக்கு அனுப்பினார். அப்போதே உணவகங்களுக்கு மொத்த விநியோகம் செய்யும் வகையில் சந்தை வாய்ப்பு கிடைத்தது. அப்போது இவருடைய தயாரிப்புக்கு பிராண்டு பெயர்கூட வைக்கவில்லை. 1995ஆம் ஆண்டு தினசரி 50 கிலோ முதல் 100 கிலோ வரை உற்பத்தி செய்து விநியோகம் செய்தார். பின்னர் அதே ஆண்டில் பால் விநியோகத்தை முற்றிலும் நிறுத்திவிட்டு பனீர் தயாரிப்பில் முழுவதும் கவனம் செலுத்தினர். பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து சில்லறை வர்த்தகத்திலும் ஈடுபட்டனர்.

பெயரே இல்லாமல் இயங்கி வந்த சூழலில், நிறுவனத்துக்குப் பெயர் வைக்க இணையதளங்களில் தேடினர். இறுதியில் மில்கி மிஸ்ட் (milky mist) என்ற பெயரை சதீஷ்குமார் தேர்வு செய்தார். “மில்கி மிஸ்ட் என்ற பெயர் உச்சரிக்க எளிமையாகவும், உலகளாவிய முறையில் பயன்படுத்தும் வகையிலும் இருக்கும். குறிப்பாக இந்தப் பெயரைத் தேர்வு செய்ததற்கு மற்றொரு முக்கியக் காரணம் என்னவென்றால் இந்தப் பெயர் எந்தவொரு பகுதியையோ அல்லது எந்தவொரு மதத்தையோ சார்ந்தது அல்ல” என்கிறார் சதீஷ்குமார்.

பின்னர், 1998ஆம் ஆண்டில், ரூ.10 லட்சம் வங்கிக் கடன் வாங்கி உற்பத்தி நிலையத்தில் தானியங்கி முறையைப் பின்பற்றத் தொடங்கினார். இதன்மூலம் தனது சில்லறை விற்பனையை விரிவுபடுத்தினார். 1990ஆம் ஆண்டுகளில் சென்னை, கோவை, பெங்களூரு ஆகிய நகரங்களில் மில்கி மிஸ்ட் பனீர் விற்பனைக்கு வந்தது. இந்த நிறுவனத்தின் வர்த்தகத்தில், நிறுவனங்களுக்கு வழங்கும் விநியோகம்தான் 80 சதவிகிதப் பங்கை கொண்டிருந்தது. 2001ஆம் ஆண்டு உற்பத்தி நிலையத்தை வாடகை இடத்திலிருந்து சித்தோட்டில் உள்ள சொந்த இடத்துக்கு மாற்றினார். இந்தக் காலகட்டத்தில் நிறுவனத்தின் ஆண்டு விற்றுமுதல் ரூ.2 கோடியாக இருந்தது.

சதீஷ்குமார் மீண்டும் பால் விற்பனையைத் தொடங்கினார். இந்த முறை மில்கி மிஸ்ட் பாக்கெட் பால் விற்பனையில் ஈடுபட்டார். பால் விற்பனையால், பனீர் தயாரிக்க பால் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பால் விற்பனையை மீண்டும் நிறுத்திவிட்டு 2005ஆம் ஆண்டில் பால்கோவா மற்றும் நெய் தயாரிப்பில் ஈடுபட்டார். இந்த முயற்சி பின்னாளில் பால் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட வழிவகுத்தது. 2007ஆம் ஆண்டில் தான் மில்கி மிஸ்ட் லோகோ வடிவமைக்கப்பட்டது.

2008ஆம் ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டுவரை சந்தையை விரிவாக்க பல்வேறு முயற்சிகளை சதீஷ்குமார் எடுத்தார். அதில் ஒரு பகுதியாகக் குளிரூட்டும் நிலையங்கள் அதிகரிக்கப்பட்டன. லாஜிஸ்டிக் வசதிகள் மேம்படுத்தப்பட்டன. தென்னிந்தியா முழுவதும் விநியோக வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. 2010ஆம் ஆண்டில் முதன்முதலாக மில்கி மிஸ்ட் பனீர் விளம்பரம் தொலைக்காட்சிகளில் வெளியானது. தென்னிந்தியாவில் லட்சக்கணக்கான வீடுகளில் மில்கி மிஸ்ட் பிராண்டு வரையப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டது. தொலைக்காட்சி விளம்பரம் மில்கி மிஸ்ட் பனீருக்கு ஓர் அடையாளத்தைக் கொடுத்தது. அப்போது இந்த நிறுவனம் ஆண்டுக்கு 3 டன் அளவுக்குப் பனீர் தயாரித்து வந்தது.

இதன்மூலம் 2011ஆம் ஆண்டில் இந்நிறுவனம் நல்ல வளர்ச்சியைப் பெற்றது. “அன்று பெரும்பாலான கடைகளில் பெப்சி மற்றும் கோககோலா நிறுவனங்களின் குளிரூட்டிகள் மட்டும்தான் இருந்தது. எனவே நாங்கள் எங்கள் நிறுவனத்தின் பெயரில் குளிரூட்டிகளை வழங்க முடிவெடுத்தோம்” என்று கூறுகிறார் சதீஷ்குமார். 2015ஆம் ஆண்டு கணக்குப்படி இந்நிறுவனத்துக்கு தென்னிந்தியாவில் 2200 குளிரூட்டிகள் உள்ளன. தற்போது இதன் எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கக் கூடும்.

அதற்குப் பிறகு மில்கி மிஸ்ட் நிறுவனம் தயிர் தயாரிப்பிலும் ஈடுபட்டது. 2012ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் பால் கொள்முதல் ஒரு நாளைக்கு 1.7 லட்சம் லிட்டராக அதிகரித்தது. ஈரோடு, சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், நாமக்கல், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் உள்ள 25,000 விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதுகுறித்து சதீஷ்குமார் கூறும்போது, “விவசாயிகளிடமிருந்து நேரடியாக நாங்களே பால் கொள்முதல் செய்வதால், இடைத்தரகு முறை ஒழிக்கப்படுகிறது. இதன்மூலம் விவசாயிகளுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ.5க்கு மேல் லாபம் கிடைக்கிறது” என்றார்.

2009-10ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் விற்றுமுதல் ரூ.25 கோடியாக இருந்தது. 2010-11ஆம் ஆண்டில் ரூ.48 கோடியாகவும், 2011-12ஆம் ஆண்டில் ரூ.69 கோடியாகவும், 2012-13ஆம் ஆண்டில் ரூ.121 கோடியாகவும், 2013-14ஆம் ஆண்டில் ரூ.121 கோடியாகவும் விற்றுமுதல் அதிகரித்தது. 2020ஆம் ஆண்டுக்குள் இந்நிறுவனத்தின் விற்றுமுதல் இலக்கை ரூ.3000 கோடியாக அதிகரிக்கவும் இலக்கு வைத்துள்ளனர்.

சிறு தொழிலாகத் தொடங்கி இன்று பில்லியன்களில் லாபம் ஈட்டும் தென்னிந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக மில்கி மிஸ்ட் நிறுவனத்தை மாற்றிய பெருமைக்குப் பின்னால் சதீஷ்குமாரின் உழைப்பு அளப்பரியது.

- பிரகாசு

மின்னஞ்சல் முகவரி: [email protected]

ஞாயிறு, 1 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon