மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 3 அக் 2017

சிறப்புக் கட்டுரை: ஓடிடி எனும் மாயவன் - 2

சிறப்புக் கட்டுரை: ஓடிடி எனும் மாயவன் - 2

கேபிள் சங்கர்

பெரிய திரையைக் காலாவதியாக்கும் இணையம்

நெட்ப்ளிக்ஸ் போன்ற ஸ்ட்ரீமிங் வீடியோ ஓடிடி பிளாட்பார்மில் டிவி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வந்ததெல்லாம் போய், ஸ்பானிஷ், பிரேசில் என உலகின் பல மொழிகளில் ஒரிஜினல் சீரீஸ்களை தயாரித்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களது ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸின் ஹீரோ கெவின் ஸ்பேசி. சமீபத்தில் வில் ஸ்மித்தை வைத்து எண்பது மில்லியனுக்கு நெட்ப்ளிக்ஸில் மட்டுமே ஓடும் திரைப்படம் ஒன்றையும் தயாரித்திருக்கிறார்கள். ஏற்கெனவே ப்ராட் பிட் நடித்து ஒரு படத்தை வெளியிட்டார்கள். நிறைய சிறு முதலீட்டுப் படங்களையும் தயாரிக்கிறார்கள். இரண்டு வருடம் முன்பு பூஷன் உலக சினிமா திருவிழாவில் தெரிவான ரேடியோ பெட்டி, ரிவீலேஷன் எனும் இரண்டு தன்னிச்சையான திரைப்படங்கள் நெட்ப்ளிக்ஸில் மட்டுமே வெளியாகி மக்களின் பாராட்டையும், தயாரிப்பாளர்களுக்கு லாபத்தையும் கொடுத்துள்ளன.

என்னது லாபமா... என்றால் நிச்சயம் ‘ஆம்’ என்றே சொல்ல வேண்டும். என்ன அவர்களுடய பணம் என்பது இரண்டு அல்லது மூன்று வருடத்துக்கு ஒவ்வொரு மூன்று மாதத்துக்கும் டேட் மாறாமல் கொடுப்பார்கள். இது நெட்ப்ளிக்ஸின் முறை. அடக்கமான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இன்டிபென்டட் படங்களைப் பார்த்துத் தெரிவுசெய்து வாங்குகிறார்கள். இவர்களின் போட்டியாளரான அமேசானின் பிரைம் வீடியோவும் தங்கள் பங்குக்கு ட்ராப்டு, லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா, இந்தி மீடியம் போன்ற சிறந்த சிறு முதலீட்டுப் படங்களைத் தியேட்டரில் ஓடுகின்றபோதே வாங்கி வெளியிடுகிறார்கள். பைரஸியைத் தேடி அலையாமல் நல்ல பிரின்ட், சப்டைட்டிலோடு எங்கோ ஒரு மல்ட்டிப்ளெக்ஸில் நடு ராத்திரி ஷோவைத் தேடி ஓடாமல் வீட்டிலிருந்தபடியே நல்ல படங்களைப் பார்க்க முடிகிறது. டிவி ரைட்ஸ் என்றில்லாமல் சினிமாவுக்கு இன்னொரு வருமான வழியாக இன்றைய டிஜிட்டல் பிளாட்பார்ம் உருவாகியிருக்கிறது. இந்திய அளவுக்கான உரிமை, வெளிநாட்டு டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமை என இரண்டு விதமாய் சம்பாதிக்க முடியும். அல்லது இரண்டையும் ஒரே நிறுவனத்திடம் கொடுத்துக் கொஞ்சம் பெரிய பணமாய்ப் பார்க்கவும் வாய்ப்பு உருவாகியிருக்கிறது.

முக்கியமாய் ஒரு விஷயம் இந்த டிஜிட்டல் கன்டெண்டுகளுக்கு சென்சார் கிடையாது. கேம் ஆஃப் த்ரோன்ஸை டிவியில் பார்த்தவர்கள் ‘அட என்ன ஜம்ப் ஆவுது?’ என்று யோசிப்பார்கள். ஆன்லைனில் பார்ப்பவர்களுக்கு அப்படித் தோன்றாது. அந்த சீரியல் அமெரிக்க ஹெச்.பி.ஓ. சேனலில் ஒளிபரப்பாவது என்றாலும் அவர்களது சென்சார் ரேட்டிங்படி சாதாரணம்தான். ஆனால் நமக்கு ஆஹா... ஓஹோ! அப்படியிருக்க, இணையத்துக்காக எடுக்கப்படும் சீரீஸ்கள் எதுவுமே சென்சாருக்கு அஞ்சி எடுக்க வேண்டிய கட்டாயமில்லை. அதனால் எல்லா படங்களிலும், சீரீஸ்களிலும் ஆபாசம் வழிந்தோடும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் பெரிய நோ! கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே வைத்துக்கொண்டு கட்டுப்பாட்டோடுதான் படம் எடுக்கிறார்கள்.

இந்த ஓடிடி பிளாட்பார்மில் இணையத்தில் மட்டுமே கிடைக்கக்கூடிய வெப் சீரீஸ்கள இந்தியில், தமிழில், தெலுங்கில், ஆங்கிலத்தில், ஸ்பானிஷில், பிரேசிலிய மொழி, பிரெஞ்ச் என உலகின் பல மொழிகளில் எடுக்கப்படுகின்றன. சினிமாவைவிட மிக அதிகமான பொருட்செலவில் தரமான கன்டெண்டுகள் டிவியைவிட இரண்டுபடி மேலே கொடுக்கிறார்கள். House of cards, Strange things போன்ற அமெரிக்க வெப் சீரீஸ்கள் ஒருபக்கமென்றால், அமேசான் இன்சைட் எட்ஜ் போன்ற மெகா மகா பட்ஜெட் வெப்சீரீஸ்களை ஒருபக்கம் அவிழ்த்துவிட, டிவியில் சீரியல் பார்க்காத ஆண்கள் எல்லோரும் வெப் சீரிஸில் முழ்கிக் கிடக்கிறார்கள்.

முதல் ஓடிடி பிளாட்பார்ம்

யூடியூப்தான் முதல் ஓடிடி பிளாட்பார்ம் என்று சொல்ல வேண்டும். அனைத்து விதமான கன்டெண்டுகளையும் இணையத்தில் இன்றளவில் இலவசமாய்ப் பார்க்க முடிகிற பிளாட்பார்ம். இதன் மூலம் வருமானம் பெற்று லட்சக்கணக்கில் சம்பாதித்தவர்கள் இருக்கிறார்கள். ஒரு காலத்தில் யூடியூப் என்பதைப் பற்றிச் சாதாரணமாக நினைத்துக் கொண்டிருந்தவர்கள், பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் ஆள் வைத்து இங்கே வேலை செய்து கொண்டிருப்பதைப் பார்த்து, இணையத்துக்காகப் படங்களை வாங்கும் நிலை வந்துவிட்டது. அதேபோல, காப்பி ரைட் பஞ்சாயத்தும் இங்கேதான் அதிகம். ஏனென்றால் இது ஓப்பன் பிளாட்பார்ம். யார் வேண்டுமானாலும் கன்டெண்டுகளை அப்லோட் செய்து பணம் சம்பாதிக்க முடியும். ஆனால், இன்றைக்கு காப்பிரைட் பிரச்னைகளுக்கு என்றே டீம் வைத்துத் தேடித் தேடி கன்டெண்ட் ஐடி வைத்துத் தடை செய்வதில் இவர்களுக்கு இணை வேறு யாரும் இல்லை. அதேபோல பல தைரியமான கன்டெண்டுகளை யூடியூபில் வெளியிட்டு அதற்குக் கிடைத்த வரவேற்பினால்தான் பெரிய கம்பெனிகள் தனி ஓடிடி பிளாட்பார்ம் ஆரம்பிக்க தைரியம்வந்து ஆட்டத்தில் இறங்கவோ அல்லது வேறு நிறுவனங்களுக்கு நிகழ்ச்சிகளைத் தயாரித்து அளிக்கவோ ஆரம்பித்திருக்கிறார்கள். இன்று யாஷ்ராஜ், டி.சீரிஸ், ஈராஸ், பர்ஹான் அக்தர், விரைவில் ஷாருக் கான், அமீர் கான் எல்லாம் வரப்போகிறார்கள் என்கின்றனர்.

முன்னணியில் நிற்கும் தெலுங்கு

ஆனால், அதிகமான வெப் சீரிஸ்களைத் தயாரித்து யூடியூபில் வெளியிட்டது தெலுங்குதான். சின்னச் சின்ன பட்ஜெட்டில் பல இன்ட்ரஸ்டிங்கான வெப் சீரீஸ்கள் வெளியாகி லாபம் பார்க்க, இன்றைக்கு யெப் டிவி தெலுங்குக்காகவே நிறைய வெப் கன்டெண்டுகளை அளிக்கும் நிறுவனமாய் உருவாகியிருக்க, புதியதான வியூ எனும் ஓடிடி பிளாட்பார்மில் விக்ரம் பட் ஒரு வெப் சீரீஸ் இயக்க, இன்னொரு பக்கம் ராணா டகுபதியின் நடிப்பில் ஒரு சீரிஸ் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழில் ஏற்கெனவே நான்கைந்து கன்ட்ரோல் ஆல்ட் டெலிட், தற்போது லிவின் போன்ற வெப் சீரிஸ்கள் வந்து பெரிதான கவனம் பெற்றிருக்க, ஹாட் ஸ்டாரில் இயக்குநர் பாலாஜி மோகனின் “ஆஸ் ஐயம் சஃபரிங் ஃப்ரம் காதல்” எனும் வெப் சீரிஸின் வெற்றி தமிழ்நாட்டில் உள்ள பலரின் கவனத்தைத் திருப்பக் காரணமாயிற்று.

வெப் சீரீஸ்களின் வெற்றி எப்படி, வருமானம் எப்படி போன்றவற்றை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: கேபிள் சங்கர் எழுத்தாளர், திரைப்பட விமர்சகர், இயக்குநர். ‘சினிமா வியாபாரம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். ‘தொட்டால் தொடரும்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். அவரை தொடர்புகொள்ள: [email protected])

ஓடிடி எனும் மாயவன் 1

செவ்வாய், 3 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon