மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

ரஞ்சி கோப்பை: தமிழக அணி தடுமாற்றம்!

ரஞ்சி கோப்பை: தமிழக அணி தடுமாற்றம்!

ஆந்திராவுக்கு எதிரான ரஞ்சி போட்டியில் தமிழக அணி முதல் இன்னிங்ஸில் 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

84ஆவது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று (அக்டோபர் 6) தொடங்கியுள்ளது. தமிழ்நாடு - ஆந்திரபிரதேசம் அணிகள் மோதும் ஆட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. சர்வதேச போட்டிகளில் அனுபவம் உள்ள அபினவ் முகுந்த், அஸ்வின், முரளி விஜய் ஆகிய வீரர்கள் தமிழ்நாடு அணியில் விளையாடுகின்றனர். டாஸ் வென்ற தமிழக அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க வீரரான முரளி விஜய் 4 ரன்னிலும் , முகுந்த் 11 ரன்னிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். அடுத்து வந்த இந்திரஜித் 19 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து தமிழக அணி 17 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்துத் தடுமாறியது. 5ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய பாபா அபராஜித் பொறுப்புடன் விளையாடி 51 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் அஸ்வின் 9, வாஷிங்டன் சுந்தர் 14 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார்கள்.

8 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்து மோசமான நிலையில் இருந்தபோது கடைநிலை வீரர்கள் ஓரளவு நன்றாக விளையாடி ரன்கள் சேர்த்தார்கள். கடைசி விக்கெட்டுக்குக் களமிறங்கிய கே.விக்னேஷ் 25 ரன்கள் எடுத்தார். தமிழக அணி, முதல் இன்னிங்ஸில் 85 ஓவர்களில் 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆந்திரா தரப்பில் பார்கவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் களமிறங்கிய ஆந்திரா அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்திருந்தது. பிரசாத் குமார் 1 ரன்னிலும், ஸ்ரீகர் பரத் 7 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon