மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

சிறப்புக் கட்டுரை: நெசவாளர்களை வாட்டி வதைக்கும் ஜி.எஸ்.டி!

சிறப்புக் கட்டுரை: நெசவாளர்களை வாட்டி வதைக்கும் ஜி.எஸ்.டி!

ஷ்ரேயா ராய் சவுத்ரி

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு நடைமுறையைக் கொண்டுவருவதாகக் கூறி ஜூலை மாதம் 1ஆம் தேதி பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கையாக புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஒரே நாடு - ஒரே சந்தை - ஒரே வரி என்ற நிலை உருவாக்கப்படும் என்று மத்திய அரசு கூறினாலும், இந்தத் திடீர் நடைமுறையால் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜவுளி நெசவாளர்களின் நிலை இன்னும் மோசமாகியுள்ளது.

வாரணாசி, உத்தரப்பிரதேச மாநிலத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்தியாவின் புனிதத் தலைநகரமாகும். இந்நகரம் இந்தியாவின் முக்கியப் புனிதத்தளமாக அறியப்படுவதோடு, பனாரஸ் பட்டுப் புடவைகள் தயாரிப்புக்கும் பிரசித்தி பெற்றுள்ளது. இங்கு பட்டுப் புடவை நெய்யும் தொழிலில் ஈடுபட்டுவரும் அட்டாஃபுர் ரகுமானின் குடும்பம் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தால் முடங்கியுள்ளது. பட்டுப் புடவையை நெய்வதால் வாரத்துக்கு 800 முதல் 1000 ரூபாய் வரை ரகுமானுக்கு கிடைக்கும். ஆனால், செப்டம்பர் மாதத்தில் அது பாதியாகக் குறைந்துவிட்டது. “உண்ணும் உணவு வாங்குவதற்கே மிகவும் சிரமப்படுகிறேன்” என்று ரகுமான் புலம்புகிறார்.

“ஜெய்த்பூரா - சோரா காலனியில் வசிக்கும் எனது அண்டை அயலார் பலர் நெசவுத் தொழிலைக் கைவிட்டு ஆட்டோ ரிக்ஷா ஓட்டச் சென்றுவிட்டனர். எனது மாமாவின் (அப்துல்ஹாசன்) பேப்ரிக் தொழிற்சாலையில் முன்பு 40 நெசவாளர்கள் வரை பணியாற்றினர். ஆனால், இப்போது வெறும் 20 முதல் 25 பேர் மட்டுமே அங்கு உள்ளனர்” என்கிறார் சொராப் அலி என்ற மற்றொரு நெசவாளி.

பட்டுப் புடவை நெசவை மட்டுமே பிரதானமாகக்கொண்ட ஒரு நகரத்தை பணமதிப்பழிப்பு மற்றும் ஜி.எஸ்.டி. ஆகிய இரண்டு மாபெரும் அரசின் கொள்கைகள் பாழடித்துவிட்டன.

வாரணாசியின் ’வஸ்த்ரா உத்யோக் சங்’ என்ற பனாரஸ் பட்டு வர்த்தகச் சங்கத்தின் பொதுச் செயலாளரான ராஜன் பெஹல், “சரக்கு மற்றும் சேவை வரி அமலான பிறகு நெசவுத் தொழில் 50 சதவிகிதம் சரிந்துவிட்டது” என்கிறார்.

வாழ்வாதாரமாகும் நெசவுத் தொழில்:

வட இந்திய மாநிலங்களில் பெரும்பாலான திருமணங்களில் பனாரஸ் பட்டு முக்கிய அங்கம் வகிக்கும். அவற்றுக்கான தேவை அதிகமாக இருப்பதால் அப்புடவைகளை நெய்யும் தொழிலை நம்பி பல்வேறு குடும்பங்கள் உள்ளன. பனாரஸ் புடவைகள் ரூ.300 முதல் ரூ.2 லட்சம் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. சராசரியாக 5,000 ரூபாய் விலையுடைய ஒரு புடவையை நெய்வதற்கு நெசவாளர் ஒருவர் குறைந்தது நான்கு நாள்கள் எடுக்கிறார். பனாரஸ் புடவை விற்பனைச் சந்தை மதிப்பு ஆண்டுக்கு ரூ.5,000 கோடியாக இருப்பதாக ராஜன் பெஹல் கூறுகிறார். வாரணாசி மாநிலத்தில் மட்டும் பனாரஸ் பட்டு நெய்யும் துறையில் சுமார் 5 லட்சம் பேர் வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர்.

நவம்பர் மாதம் வெளியான நோட்டுகள் மீதான தடை அறிவிப்பால் ரொக்கப் பரிவர்த்தனையையே பெருமளவில் சார்ந்துள்ள நெசவுத் தொழில் ஸ்தம்பித்துப் போனது. அதிலிருந்து மீண்டு வரும் தருணத்தில்தான் இந்தச் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய நடைமுறையால் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. “முறைசாராத் துறையைச் சார்ந்த தொழில்களில் சுமார் 90 சதவிகிதம் படிப்பறிவற்ற நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது. இவர்களுக்கு ஜி.எஸ்.டியின் தொழில்நுட்பம் குறித்து எவ்வாறு தெரியும்?” என்று பெஹல் கேள்வியெழுப்புகிறார்.

நெசவாளர்களிடமிருந்து பனாரஸ் புடவைகளைக் கொள்முதல் செய்யும் மொத்த விற்பனை வர்த்தகர்கள் அவற்றைக் கடைகளில் விற்பனை செய்கின்றனர். இவர்கள் அப்புடவைகளுக்கான வரியை நெசவாளர்களிடமிருந்து வசூலிக்காமல் இந்த இழப்பைத் தாங்களே ஏற்றுக்கொள்கின்றனர். அவ்வாறு வரியை வசூலித்தால் புடவைகளுக்கான விலை 20 சதவிகிதம் வரையில் அதிகரிக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்துவதற்கு முன்பு, ஜூன் மாதத்தில் ஜவுளிகளுக்கான வரி உயர்வைக் கண்டித்து வாரணாசி நெசவாளர்கள் எட்டு நாள்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பின்னர் நிவாரணம் கிடைக்காததையறிந்த நெசவாளர்கள் மீண்டும் ஜூலை 9 முதல் 14 வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். நெசவாளர்களின் கோரிக்கையை முன்வைப்பதற்கான முயற்சியில் கூட்டமைப்பு உறுப்பினர்களைச் சந்திக்காமல் பிரதமர் மோடி தவிர்த்துவிட்டதாக வாரணாசி நெசவாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடனில் இயங்கும் தொழில்:

சோரா பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான நெசவாளர்கள் தங்களது முன்னோர்கள் தொடங்கிய நெசவுத் தொழிலைத் தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர். பெஹல் கூட அவரது பாட்டனாரின் மொத்த விற்பனை வர்த்தகத் தொழிலைத்தான் தொடர்ந்து வருகிறார். இவர்கள் தங்களது தொழில் வளர்ச்சிக்காகக் கடன் பெறும் நடவடிக்கையையே தொடர்கின்றனர். அதிக சேமிப்பு எதுவும் இல்லாத குடும்பங்கள் இவ்வாறு கடன் பெற்றே நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

இதன்படி, நெசவாளர்கள் தங்களது நெசவுக்குத் தேவையான நூல் உள்ளிட்ட பொருள்களை கடன் முறையில் வாங்கிவிட்டு, பின்னர் மொத்த விற்பனையாளர்களிடமிருந்து பணம் கிடைத்த பிறகுதான் அந்தக் கடனை அடைக்கின்றனர். இவ்வாறு குறைந்தது ஒரு மாதத்துக்குப் பின்னரே கடன் தொகை திருப்பிச் செலுத்தப்படுகிறது. ஆனால், புதிய சரக்கு மற்றும் சேவை வரியில் ஒவ்வொரு முறையும் தொகை பரிமாற்றம் செய்யப்படும் போது அதற்குரிய ரசீது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு நெசவாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வர்த்தகச் சங்கிலியில் பாதிப்பு

சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பின்னர், பனாரஸ் பட்டுப் புடவை தயாரிப்புக்கான பைபர், தங்கம் - வெள்ளி நூல் போன்றவற்றை கடனில் வழங்க வர்த்தகர்கள் மறுக்கின்றனர். நூல் விநியோகத் தொழிலில் ஈடுபட்டுவரும் ராம்ஜிலால் சந்தக் கூறுகையில், “கடனுக்கு எவ்வாறு பொருள்களை வழங்குவோம்? ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் உண்டான ரசீது மற்றும் மாதத்துக்கு மூன்று ரிட்டன்களை நாங்கள் தாக்கல் செய்ய வேண்டியுள்ளது” என்கிறார். ஆனால், மறுபுறமோ நலிவுற்ற நெசவாளர்களால் தாங்கள் வாங்கும் மூலப்பொருள்களுக்கான தொகையை அம்மாதத்துக்குள் வழங்க இயலுவதில்லை.

மேலும், நெசவு மூலப் பொருள்களுக்கான பல்வேறு வரி விகிதங்கள் பற்றிய குழப்பமும் நெசவாளர்களுக்கு இருக்கிறது. பருத்தி மற்றும் பட்டுக்கு 5 சதவிகிதமும், தங்க நூலுக்கு 12 சதவிகிதமும், பாலியெஸ்டருக்கு 18 சதவிகிதமும் வரி விதிக்கப்பட்டுள்ளதை ராம்ஜிலால் நமக்கு எடுத்துரைக்கிறார். பெரும்பாலான நெசவாளர்களால் அதிகமாகப் பயன்படுத்தப்படும் பாலியெஸ்டருக்கு அதிகபட்சமாக 18 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளதால் நெசவாளர்கள் மிகவும் சிரமப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.

சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பிறகு, அதிக விலை காரணமாக, நூல் வாங்கும் திறன் குறைந்து உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளது. “கடந்த மாதம் 70 சதவிகிதம் வரையில் தொழிலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எனினும், நிலைமை தற்போது சீராகி வருகிறது. ஆனாலும், நெசவாளர்கள் பலர் இந்தச் சரக்கு மற்றும் சேவை வரியை மிகப்பெரிய தொந்தரவாகக் கருதுகின்றனர்” என்கிறார் ராம்ஜிலால்.

முடங்கிய விசைத்தறிகள்

ஒரு வாரப் போராட்டத்துக்குப் பின்னர் நெசவாளர்கள் தங்களது தொழிலைத் தொடங்கிவிட்டனர். எனினும், சோரா பகுதியில் பெரும்பான்மையான விசைத்தறிகள் தூசு படிந்துவிட்டன. சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பிறகு நெசவுத்தொழில் 60 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. அப்துல் ஹாசன் ஆகஸ்ட் மாதத்துக்கான சரக்கு மற்றும் சேவை வரிக்குப் பதிவு செய்துள்ளார். எனினும் ஒரு ரிட்டனைக் கூட அவர் தாக்கல் செய்யவில்லை. எவ்வளவு வரி விதிக்கப்பட்டுள்ளது, நெசவாளர்களிடம் எவ்வளவு வசூலிக்க வேண்டும் போன்ற விவரங்கள் தெரியாததால் ஹாசன் தொழிலுக்கான வரி ரிட்டனைத் தாக்கல் செய்யவில்லை. ரசீதுகளை ஏற்பாடு செய்வதற்கும் தேவையான ஆவணங்களைப் பெறுவதற்கும் சமர்ப்பிப்பதற்கும் வங்கிகளுக்குச் சென்று வந்ததிலேயே தனது நேரம் அனைத்தும் வீணாகிவிட்டதாகப் புலம்பும் ஹாசன், தன்னைப் போல நிறைய வர்த்தகர்கள் ரசீதுகளை ஏற்பாடு செய்வதில் சிக்கல்களைச் சந்தித்து வருவதாகத் தெரிவிக்கிறார்.

இவர்களுக்கு இது மட்டுமே பிரச்னையல்ல; புடவைகளுக்கு எவ்வளவு ஜி.எஸ்.டி. வசூலிக்க வேண்டும் என்பதிலும் இவர்களுக்குக் குழப்பம் உள்ளது. பாலியெஸ்டர் மற்றும் பருத்தி ஆகிய இரண்டையும் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் புடவைக்கான வரி விகிதத்திலும் சிக்கல் உள்ளது. பாலியெஸ்டருக்கு 18 சதவிகித வரி உள்ளதோடு, உற்பத்தியின் ஒவ்வொரு கட்டத்திலும் செலவு அதிகரிக்கிறது. இதனால் விசைத்தறியாளர்களின் வருவாய் குறைந்துள்ளது. முன்பு வாரத்துக்கு ரூ.1,500 ஈட்டிவந்த விசைத்தறியாளர் ஒருவரின் வருமானம் இப்போது 700 ரூபாயாகக் குறைந்துவிட்டது.

ரசீதுகளை ஏற்பாடு செய்வதில் இருக்கும் சிக்கலைப் போக்க புதிய பட்டயக் கணக்காளர் ஒருவரை ஹாசன் நியமித்தார். ரசீதுகள் ஒவ்வொன்றையும் நிரப்பும் இவருக்கு ஊதியாக ரூ.5,000 முதல் ரூ.6,000 வரையில் வழங்கப்படுகிறது. இதனால் வரிச் செலுத்துவது சுலபமானாலும் ஊதியம் வாயிலாகச் செலவு அதிகரித்துவிட்டது.

படிப்பறிவின்மை மட்டுமே ஜி.எஸ்.டிக்கான புரிதலில் பிரச்னையாக இருக்கவில்லை. ஹாசனை எடுத்துக்கொள்வோம். அவர் செப்டம்பர் 27ஆம் தேதி தனது தொழிலுக்கான ஜி.எஸ்.டி. தொகையாக 15,092 ரூபாயை வங்கியில் செலுத்திவிட்டு அதற்கான ரசீதைப் பெற்று வீடு திரும்பியுள்ளார். அதற்கடுத்த நாளில் அவ்வங்கியிலிருந்து ஹாசனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் ஜி.எஸ்.டி. தொகை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் அதைச் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், தசரா மற்றும் வார விடுமுறை உட்பட அன்றிலிருந்து மூன்று நாள்கள் விடுமுறை என்பதால் ஜி.எஸ்.டியைத் தாமதமாகச் செலுத்த வேண்டியுள்ளதோடு அதற்கான அபராதத்தைச் செலுத்த வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளதை எண்ணி ஹாசன் மிகவும் வருந்துகிறார்.

இந்த முறைசாரா துறையைச் சேர்ந்த முறைசார் அமைப்பின் வர்த்தகர்கள் சரக்கு மற்றும் சேவை வரியைச் செலுத்திவிட்டு அதற்கான தொகையை நெசவாளர்களிடமிருந்து உள்ளீட்டுக் கட்டணமாக வசூலித்துவிடுகின்றனர். இதுபோன்ற நடைமுறையால் நெசவுத் தொழிலின் அனைத்துப் பிரிவுகளும் முறைசார் துறைக்குள் வந்துவிடும் என்று மொத்த விற்பனையாளர்கள் நம்புகின்றனர். ஆனால், இதில் சிக்கல்கள் உள்ளன. புடவைகளின் தரம் மற்றும் பிரிவுகளுக்கேற்ப அவற்றுக்கான வரி மாறுபடும் என்பதால் அனைத்து வர்த்தகர்களாலும் தங்களது விநியோகஸ்தர்களுக்கான வரியையும் சேர்த்துச் செலுத்த இயலாது.

மத்திய அரசானது ஒவ்வோர் ஆண்டும் கைத்தறித் துறைக்கு ரூ.6,000 கோடி மானியத் தொகையை ஒதுக்கீடு செய்கிறது. ஆனாலும், அத்தொகையோ அல்லது அதற்கான பலனோ நெசவாளர்கள் அனைவருக்கும் சென்று சேருவதில்லை. எனவே, இந்த மானியத்தைத் திரும்பப் பெற்று, அதற்குப் பதிலாக தங்களுக்குச் சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்பதே இந்த நெசவாளர்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது. இல்லையெனில் பாரம்பர்யமிக்க பனாரஸ் பட்டுப் புடவைகளை உருவாக்கும் கலை முற்றிலும் அழிந்துவிடும் என்கின்றனர் இந்த நலிவுற்ற நெசவாளர்கள்.

நன்றி: லைவ் மிண்ட்

தமிழில்: செந்தில் குமரன்

மின்னஞ்சல்: [email protected]

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon