மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

சிறப்புக் கட்டுரை: கேரளாவும், மத சர்ச்சைகளும்!

சிறப்புக் கட்டுரை: கேரளாவும், மத சர்ச்சைகளும்!

இந்துகள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய மும்மதத்தினரும் பெரும்பான்மையாக வாழும் மாநிலமாகக் கேரளா உள்ளது. எனினும், சமீப நாள்களாக மதம் தொடர்பான சர்ச்சைகளில் அம்மாநிலத்தில் பெயர் தொடர்ந்து அடிபட்டு வருகிறது. இந்துவான அகிலா, இஸ்லாம் மதத்துக்கு மாறி ஹாதியா என்று தனது பெயரை மாற்றிக்கொண்டது அதன் பின்னர் இஸ்லாமியர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்னும் விசாரணையில் இருந்து வருகிறது.

இந்தச் சம்பவத்தின் பின்புலம் குறித்து ஏற்கெனவே நாம் பதிவிட்டிருந்தோம். இது தொடர்பான சர்ச்சைகள் ஓயாத நிலையத்தில் மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.

சிவசக்தி யோகா வித்யா கேந்திரம் கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும் இங்கு வந்து, தங்கியிருந்து யோகா பயின்று செல்கின்றனர். கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி சுவேதா ஹரிதாசன் என்ற பெண் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார். அதில், சிவசக்தி யோகா நிலையத்தில் தான் மன, உடல் ரீதியிலான தொல்லைகளை அனுபவித்ததாகத் தெரிவித்திருந்தார். ஸ்ருதி மெலதத் என்ற பெண்ணும், யோகா மையத்தில் தான் பாதிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார். ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதத்துக்கு இடைப்பட்ட 58 நாள்களுக்கு யோகா மையத்தில் தான் தாக்குதலுக்கு உள்ளானதாக அவர் கூறியுள்ளார். ஸ்ருதி அனீஸ் ஹமித் என்பவரைக் காதலித்து வருகிறார். அவரைத் திருமணம் செய்துகொள்ளலாம் என்று திட்டமிட்டுள்ள நிலையில், அவரை மறக்க வேண்டும் என்று சிவசக்தி யோகா நிலையத்தில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாம்.

இந்த யோகா மையத்தை கே.ஆர்.மனோஜ் என்பவர் நிறுவினார். அதன் நிர்வாக இயக்குநராகவும் உள்ள அவர், போலீஸ் விசாரணை தொடங்கிய பின் மாயமாகியுள்ளார். கேரளாவில் லவ் ஜிகாத் என்ற பெயரில் இந்துகள் இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்படுவதாக இந்துத்துவ அமைப்புகள் கூறிவரும் நிலையில், இவ்விரு பெண்களின் குற்றச்சாட்டுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகின்றன.

சுவேதா ஹரிதாசன் கடந்த நவம்பர் மாதம், ரிண்டோ ஐசக் என்பவரைப் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்தார். பின்னர் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஐசக் வீட்டில் வசித்துவந்தனர். திருமணம் செய்துகொண்டாலும், இருவரும் அவரவர் மதத்தையே பின்பற்றி வந்தனர்.

இந்த நிலையில், ஒன்பது மாதங்கள் கழித்து எர்ணாகுளத்தில் உள்ள சகோதரி வீட்டுக்கு சுவேதா சென்றபோது, அவரது பெற்றோர் வலுக்கட்டாயமாக சிவசக்தி யோகா வித்யா கேந்திரத்தில் சேர்த்துவிட்டுள்ளனர். அங்கு, கணவரை விட்டுப் பிரிய வேண்டும் என சுவேதா நிர்ப்பந்திக்கப்படுகிறார்.

ஜூலை 31ஆம் தேதி மையத்தில் சேர்ந்த அவர் ஆகஸ்ட் 21ஆம் தேதிதான் விடுதலை செய்யப்படுகிறார். அதுவும் இந்து ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதாக அவர் ஒப்புக்கொண்ட பிறகே. பின்னர் பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து தப்பித்த அவர் செப்டம்பர் 11ஆம் தேதி கணவருடன் மீண்டும் சேர்கிறார். அதன் பின்னரே, இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார். “வீட்டு வேலைகள் செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டேன். நான் கணவருடன் திரும்ப வாழச் சென்றால் அவரைக் கொன்றுவிடுவோம் என்று குருஜி (மனோஜ்) என்னைப் பயமுறுத்தினார்” எனத் தனது வாக்குமூலத்தில் சுவேதா கூறியுள்ளார்.

மேலும், அங்கு தங்கியுள்ளவர்கள் அனைவரும் வெறும் தரையில் தூங்கக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். கழிவறைக் கதவுகளுக்குத் தாழ் கிடையாது. பெரும்பாலானோர் நோயுற்ற நிலையில் உள்ளனர். எனினும் அவர்களுக்குத் தகுந்த சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்று மையத்தில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ருதியின் நிலையும் ஏறக்குறைய இதேதான். கன்னூரைச் சேர்ந்த ஸ்ருதி அதே பகுதியைச் சேர்ந்த அனீஸ் ஹமீத் என்பவரைக் காதலித்து வந்தார். அவரைத் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த நிலையில், யோகா வித்யா கேந்திரத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு தனக்கு ஏற்பட்ட நிலை குறித்து நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில், “யோகா மையத்தில் இருந்தவர்கள் ஹமீதை விட்டுப் பிரிந்துசெல்லும்படி என்னை நிர்பந்தித்தனர். நான் மறுத்தபோது, முகத்தில் அறைந்தனர். வயிற்றில் மிதித்து கொடுமைப்படுத்தினர். கத்தாமல் இருப்பதற்காக எனது வாயில் துணியை வைத்து அடைத்தனர். இதற்கெல்லாம் மேலாக, வலுக்கட்டாயமாகக் கர்ப்பப் பரிசோதனைகளும் எடுக்கப்பட்டன” என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.

யோகா மையத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போலீஸார் தயக்கம் காட்டினர் என்று இரண்டு பேருமே குற்றஞ்சாட்டியுள்ளனர். சுவேதா கூறும்போது, “எர்ணாகுளத்தில் உள்ள உதயம்பேரூர் பகுதி போலீஸார் இந்த வழக்கு தொடர்பாக எஃப்ஐஆர் பதிவு செய்யக் காலதாமதம் செய்தனர். செப்டம்பர் 15ஆம் தேதி மதியம் காவல் நிலையத்துக்குச் சென்ற எங்களை 3 மணி நேரம் காக்க வைத்தனர். எங்களின் வழக்கறிஞர் தலையிட்ட பின்னரே எஃப்ஐஆர் பதிவு செய்தனர்” எனத் தெரிவித்துள்ளார்.

ஸ்ருதி விவகாரத்திலும் போலீஸாரின் செயல்பாடுகள் கேள்விக்குரியதாகவே உள்ளன. அவரது புகாரை போலீஸார் கையாண்ட விதம் தொடர்பாக கேரள உயர் நீதிமன்றமே கவலை தெரிவித்துள்ளது. எஃப்ஐஆரில் தாக்குதல் தொடர்பான முக்கியத் தகவல்களைச் சேர்க்காமல் விட்டதற்குக் கண்டனம் தெரிவித்த நீதிமன்றம் ஸ்ருதியின் வாக்குமூலத்தை நேரிடையாகவே பதிவு செய்துகொண்டது. இந்த விவகாரத்தை எளிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று வழக்கு விசாரணை இயக்குநருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹமீதுடன் வாழ்ந்த ஒரு மாத காலத்தில் மதம் மாற வேண்டும் என்ற எண்ணம்கூடத் தனக்கு ஏற்படவில்லை என்று கூறுகிறார் ஸ்ருதி. சுவேதா, ஐசக் தம்பதி இந்த விவகாரத்தில் நிறையவே பாதிக்கப்பட்டுள்ளனர். “எங்கள் வாழ்க்கையில் மதத்தை நுழைக்கக் கூடாது என்று திருமணத்துக்கு முன்பே நாங்கள் முடிவு செய்துவிட்டோம். இது எங்களுக்கு மதம் சார்ந்த பிரச்னையல்ல. வாழ்க்கை சார்ந்தது” என்று வேதனையுடன் கூறுகிறார் ஐசக்.

மேலும் அவர், “மதம் சம்பந்தப்பட்ட திருமணங்கள் தொடர்பான சமுதாயத்தின் அக்கறையின்மை என்னைக் கவலை அடையச் செய்கிறது. விரும்பியவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புபவர்களின் எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொள்ள ஏன் கேரள மக்கள் தவறுகின்றனர் என்று ஆச்சர்யப்படுகிறேன். மதம் இல்லாத உலகம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன்” எனவும் தெரிவித்துள்ளார்.

சிவசக்தி யோகா வித்யா கேந்திரத்தின் நிறுவனர் மனோஜ் கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் மறுசீரமைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். “தேச விரோத மதமாற்றங்களை எதிர்த்துவரும் பிற இந்து அமைப்புகளுடன் இணைந்து அர்ஷ வித்யா சமாஜம் செயல்பட்டு வருகிறது. எங்களுக்கு, ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிஷத், இந்து ஐக்கிய வேதி, சின்மையா மிஷன் போன்றவையுடன் நல்ல உறவு உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக யோகா மைய அதிகாரிகள் யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. அம்மையத்தின் இணை ஒருங்கிணைப்பாளராக உள்ள ஸ்ருதி தொலைக்காட்சி ஒன்றுக்குக் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி பேட்டியளித்திருந்தார். அதில், “இத்தனை ஆண்டுகளில் ஒருவர்கூட எங்கள் மையம் மீது புகார் தெரிவித்ததில்லை. பெற்றோருடன் வரும் மாணவர்களையே நாங்கள் சேர்த்துக்கொள்கிறோம். மையத்தை விட்டு சென்ற இரண்டு மாதங்களுக்குப் பின் ஏன் சுவேதா புகார் தெரிவிக்க வேண்டும்? மற்ற மதத்துக்கு மாறியவர்களை மீண்டும் தாய் மதத்துக்கே திரும்பச் செய்யும் எங்களின் சேவை பிடிக்காதவர்கள் இதன் பின்னர் உள்ளனர் என நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கேரள பெண்கள் ஆணையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தாரா, “கட்டாயப்படுத்தித் தாய் மதத்துக்கு மாற்றப்படுகிற சம்பவம் தொடர்பாகப் புகார் வந்தால் நிச்சயம் கடுமையான நடவடிக்கை எடுப்பேன். பெண்களைக் கொடுமைப்படுத்தி இந்து மதத்துக்கு மாற்றும் இத்தகைய மையங்கள் தொடர்பாகக் கேள்விப்படும்போது வெட்கப்படுகிறேன். இதுபோன்ற மையங்களை மாநிலத்திலிருந்து அகற்ற, அரசு சட்டமியற்ற வேண்டிய நேரம் இது” என்றும் தெரிவித்துள்ளார்.

மதம், இனம், மொழி, நாடு போன்றவற்றைக் கடந்ததுதான் காதலும் திருமணமும் என்னும்போது, அவற்றை மையமாக வைத்தே மோதல்கள் வருவது தனிநபர்களுக்கு மட்டுமல்ல சமூகத்துக்கும் நல்லதல்ல.

நன்றி: Scroll.in

தமிழில்: முருகேஷ்

வெள்ளி, 6 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon