மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

பிரபாஸ் - அனுஷ்கா வதந்திக்குப் புகார்!

பிரபாஸ் - அனுஷ்கா வதந்திக்குப் புகார்!

தெலுங்கு திரையுலகில் தற்போது பெரும் விவாதமாக மாறியுள்ள செய்தி, பிரபாஸுக்கும் நடிகை அனுஷ்காவுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக வந்த வதந்தி. இது தொடர்பாக தெலுங்கு திரைப்பட நடிகர்கள் சங்கம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பிரபாஸும் அனுஷ்காவும் நீண்டகால நண்பர்கள். ‘பாகுபலி 2’ படத்துக்குப் பிறகு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால், இதை இருவரும் மறுத்தனர். நாங்கள் நல்ல நண்பர்கள். திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்று தெரிவித்தனர்.

சமீபத்தில் நடைபெற்ற சில விருந்து நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக கலந்துகொண்டனர். இதையடுத்து, இருவருக்கும் நெருக்கம் அதிகமாகிவிட்டதாகப் பேசப்பட்டது. சில இணையதளங்களில், “பிரபாஸ், அனுஷ்கா இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துவிட்டனர். இருவரின் பெற்றோரும் இவர்களது திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து விட்டனர். விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது. இதனால்தான் அனுஷ்கா புதிய படங்களை ஒப்புக்கொள்ளவில்லை. பிரபாஸ் நடிக்கும் 'சாஹோ' படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு டிசம்பரில் திருமண நிச்சயதார்த்தம் நடத்த திட்டமிட்டுள்ளனர்” என்று செய்தி வெளியானது.

இந்த விவகாரம் தொடர்பாக பிரபாஸ் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், “என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள எனக்கு விருப்பமில்லை. நான் நிச்சயதார்த்தம் செய்துகொண்டால் அப்போது உங்களிடம் தெரிவிக்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், ஆந்திரா மற்றும் தெலங்கானா திரைப்பட நடிகர்கள் சங்க தலைவர் சிவாஜி ராஜா, விஜயவாடா காவல்துறை டிஜிபி சாம்பசிவ ராவிடம் இதுபோன்ற வதந்திகளைப் பரப்புபவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், “நடிகர், நடிகைகள் பற்றி இணையதளங்களில் உண்மைக்கு மாறாக வதந்திகள் பரப்பப்படுகின்றன. பிரபாஸ், அனுஷ்கா திருமணம் குறித்த வதந்தி மட்டுமல்லாது பல நடிகைகள் பற்றிய தவறான செய்திகள் வெளியாகின்றன. இதனால் திரையுலகைச் சேர்ந்த பலர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, திரையுலகைப் பாதிக்கும் வகையில் வதந்திகளைப் பரப்புவோர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon