மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 26 பிப் 2021

சிறப்புக் கட்டுரை: கமல், ரஜினி - யாரிடம் இருக்கு அரசியல் சரக்கு?

சிறப்புக் கட்டுரை: கமல், ரஜினி - யாரிடம் இருக்கு அரசியல் சரக்கு?

மின்னம்பலம்

ம.தொல்காப்பியன்

எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் போன்ற மேதைகளோடு கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரை ஒப்பிட்டுப் பேசும்போதெல்லாம் வழமையான ஒரு புரிதல் வெளிப்படுத்தப்படுவதைப் பார்க்கிறோம். சிவாஜியின் வாரிசு கமல் என்றும் எம்.ஜி.ஆரின் வாரிசு ரஜினிகாந்த் என்றும் கருதப்பட்டு வருவதையே நான் குறிப்பிடுகிறேன்.

இங்கே வாரிசு என்ற வார்த்தையை “போன்ற திறனுடையவர்” என்ற பொருளில் எடுத்துக்கொள்ள வேண்டும். வாரிசு என்கிற சொல் இன்று அரசியல் களத்தில் சில விளைவுகளை ஏற்படுத்திக்கொண்டிருப்பதால் இது குறித்த சரியான கண்ணோட்டத்தை நாம் பெற வேண்டியது தேவையாக இருக்கிறது.

சிவாஜி கணேசனுக்குப் பிறகு அவரது ஆளுமைகளை யார் கொண்டிருக்கிறார்கள் என்பது வேண்டுமானால் வெறுமனே கடந்து போகக்கூடிய கேள்வியாக இருக்கலாம். ஆனால், எம்.ஜி.ஆருக்குப் பிறகு அவரது அரசியல் ஆளுமைகளை யார் செயலாக்கம் செய்யப் போகிறார்கள் என்ற வாதம் முன்வைக்கப்படும்போது அது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிடுகிறது. அதனால் அதற்கான பதிலைப் பெற வேண்டியதும் அவசியமான ஒன்றே. இந்த அவசியம்தான் இந்த கட்டுரையை உருவாக்கியுள்ளது.

ஏனெனில், சிவாஜியின் அரசியல் இயலாமையும் எம்.ஜி.ஆரின் அரசியல் நிபுணத்துவமும் அவர்களோடு நின்றுவிடாமல் அவர்களது பிந்தைய சமூகத்தின் மீதும் தொடர் தாக்கத்தை வெளிப்படுத்திவருவதை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.

சிவாஜி – கமல்

எம்.ஜி.ஆர் - ரஜினி

இந்த வரிசை சரியா?

சிவாஜி கணேசனின் நடிப்பாற்றல் கமலுக்கு இருப்பதும் எம்.ஜி.ஆரின் ரசிகாபிமானம் ரஜினிக்கு இருப்பதும் இத்தகைய ஒப்பீடுகளுக்கு ஆதாரங்களாகக் காட்டப்படுகின்றன.

மேலோட்டமான பார்வைக்கு இது சரியாகத் தோன்றினாலும் அது அத்தனை சரியானதல்ல என்பதே எனது கருத்து.

என் கருத்தைச் சரியாக உணர்த்த வேண்டுமானால் திறன்கள் அடிப்படையில் ஓர் ஆய்வை இங்கே நிகழ்த்த வேண்டியிருக்கிறது. சுருக்கமாகவே அதைப் பார்க்கலாம்.

சிவாஜி கணேசன் சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஒரு சிறந்த நடிகராக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார். இது உலக அளவிலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில், அவரது போட்டியாளரான எம்.ஜி.ஆர். ஒரு மோசமான நடிகர் என்று கருதப்படுவதில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

திறமைகள் செய்து காட்டப்படும்போது பிரமிப்பூட்டுகின்றன. ஒரு கலைஞனிடமிருந்து நடிப்புத் திறன் வெளிப்படும்போது பார்வையாளரை மெய்சிலிர்க்கச் செய்து தன்னை நிரூபித்துக்கொள்கிறது.

விமர்சகர்கள், தாங்கள் கற்றறிந்த நடிப்புக் கலை பற்றிய ‘கோட்பாடுகள்’, உணர்வுகளை வடித்துக் கொடுக்கும் ‘துல்லியம்’, ரசிகர்களிடம் அந்த நடிப்பு செலுத்தும் ‘தாக்கம்’ இவற்றை எல்லாம் பரிசீலித்து எது சிறந்த நடிப்பு என்று தீர்ப்பளிக்கிறார்கள்.

கலை பற்றிய ‘கோட்பாடு’, அதன் வெளிப்பாட்டுத் ‘துல்லியம்’, கலையின் ‘தாக்கம்’ இவையே ஒரு நடிப்பை வரையறுக்க முதன்மை விதிகளாக விளங்குகின்றன எனலாம். இவற்றின் அடிப்படையில் எது நடிப்பு என்று வரையறுக்கப்பட்டிருக்கிறதோ அந்தக் கோட்பாட்டை நிறைவு செய்வதாக சிவாஜியின் நடிப்பு இருக்கிறது.

எப்படி நடிக்க வேண்டுமோ அப்படி அந்த நடிப்பை வெளிப்படுத்தி அந்த நடிப்பின் உணர்ச்சியைத் துல்லியமாக ரசிகனுக்குக் கடத்தியும் விடுகிறார் சிவாஜி.

ரசிகனின் இதயத்தில் ஏற்றுக்கொண்ட கேரக்டரை அப்படியே பதியச்செய்து விடுகிறார்.

அதாவது, ஒரு நடிப்பை அளவிடக்கூடிய மூன்று அடிப்படை விதிகளையும் கச்சிதமாக, ரசிகன் முன்னால் சமர்ப்பிக்கிறார் சிவாஜி கணேசன்.

சிவாஜியோடு ஒப்பிடும்போது எம்.ஜி.ஆர். எந்த நிலையில் இருக்கிறார்?

ஒரு கோட்பாட்டில் அடங்குவதில்லை எம்.ஜி.ஆரின் நடிப்பு. எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிடலாம்... எம்.ஜி.ஆருக்கு அழத் தெரியாது. சிரிப்பதும் அப்படித்தான். சிவாஜி கணேசனோ பல்வேறுபட்ட சிரிப்புகளை பதிவு செய்து வைத்திருக்கிறார். அதேபோல வித விதமாக அழுதும் காட்டியிருக்கிறார். அவையெல்லாம் இன்றைக்குப் பாடங்களாக விளங்குகின்றன.

ஆனால் எம்.ஜி.ஆரின் நிலை என்ன?

கோபம், தாபம். மகிழ்ச்சி, துக்கம், குரோதம், கொண்டாட்டம், வேதனை, கருணை, காதல், ஆசை, அன்பு பாசம், பரிவு போன்ற வாழ்வின் உணர்வுகளை எம்.ஜி.ஆரால் கோட்பாட்டின் அடிப்படையில் துல்லியமாக வெளிப்படுத்த முடிந்ததில்லை. ஆனால், அவற்றின் விளைவுகளை அதை விடவும் அதீதமாக ரசிகனிடம் கொண்டு சேர்க்க அவரால் முடிந்திருக்கிறது.

காதலோ, பிரிவுத் துயரோ, சாந்தமோ, சண்டையோ அல்லது மேற்சொன்ன எதுவொன்றோ அதை ரசிகனிடம் அளவுக்கு அதிகமாகவே உண்டுபண்ணி விடுகிறார் எம்.ஜி.ஆர்.

செயல்கள்தான் ஒரு கலையின் வெளிப்பாட்டுக்கு முக்கியமானது என்பது மறுக்க முடியாத உண்மை. சில வேளைகளில், விளைவுகளை வைத்தும் கலையின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டியுள்ளது.

எப்படி ‘நடித்தான்’ என்பது எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு, அந்த நடிப்பின் மீது ரசிகன் எப்படி ‘வினைபுரிந்தான்’ என்பதும் முக்கியத்துவம் பெறுகிறது. பார்வையாளர் ரசிகனாக மாறி குதூகலிக்காமல் அசைவற்று வெறும் கல்லாக இருப்பாரேயானால் எத்தகைய நடிப்பினாலும் என்ன பயன்? நடிப்பு பார்வையாளனிடம் எழுப்பும் சலனமே அதி முக்கியம்.

பாத்திரத்துக்குள் கூடுபாய்தல்

சிவாஜி ஒரு காட்சியின் சூழலை உணர்ந்து செயல்படுகிறார். இயக்குநரின் விருப்பங்களைத் தெரிந்துகொண்டு, அதில் தனது கற்பனையைக் கலந்து, கொடுக்கப்பட்ட பாத்திரத்தின் மன நிலையை கேமராவின் முன் பதிவுசெய்கிறார். சிவாஜியால் தன் கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்தப்படும் பாத்திரத்தை ஆரத் தழுவிக்கொண்டு சிலிர்த்துப் போகிறான் ரசிகன். அவனைப் பொறுத்தவரையில் அது ஒப்பற்ற கலை தரிசனமாகி விடுகிறது.

எம்.ஜி.ஆரிடம் இத்தகைய கூடுபாய்தலை எதிர்பார்க்க முடியாது. சிவாஜியைப் போலப் பாத்திரத்துக்குள் ஊடுருவி வேறொரு மனிதராக தோன்றும் வித்தையை எம்.ஜி.ஆர். பெரும்பாலும் நிகழ்த்துவதில்லை. சித்திரிக்கப்பட்ட பாத்திரத்தின் எல்லைக்குள்ளும் எம்.ஜி.ஆர்., எம்.ஜி.ஆராகவே வருகிறார். பாத்திரத்தின் வரைவிலக்கணத்தை அவர் உடைக்கிறார்.

ரசிகன் கொடுக்கப்பட்ட பாத்திரத்துக்குள் தன்னையே காணும்படி செய்துவிடுகிறார் எம்.ஜி.ஆர். அங்கே, பாத்திரத்தின் வேதனை எம்.ஜி.ஆரின் வேதனையாகிவிடுகிறது. பாத்திரங்கள் எவை ஆனாலும் அவற்றின் பிரச்னை எம்.ஜி.ஆரின் பிரச்னை ஆகிவிடுகிறது. அதாவது ஒரு நடிகன் நின்று செயல்படும் இலக்கணத்துக்குப் புறம்பாகவே எம்.ஜி.ஆர் செயல்படுகிறார்.

இவை இப்படி இருந்தாலும், பாத்திரத்தின் உணர்ச்சி வேகத்தை சிவாஜி கணேசன் எப்படி எல்லாம் சிரத்தையாக நடித்து ரசிகனுக்குள் செலுத்துகிறாரோ அதைவிடவும் சற்றுக் கூடுதலாகவே எம்.ஜி.ஆர். செய்துவிடுகிறார் என்பதே விளைவுகள் நமக்கு சொல்லும் பாடங்களாகும். ரசிகனை உணர்ச்சிவசப்படுத்துவதில் எம்.ஜி.ஆர். முன்னிலை வகிக்கிறார். அவனைக் கிளர்ச்சிக்குள்ளாக்குவதில் வல்லவர் அவர்.

ஒரு நடிகனாக சிவாஜி நின்று அசத்தும் இடத்தில் எம்.ஜி.ஆர். ஓர் ‘உருவ மாதிரி’யாக மட்டுமே நின்று கவனத்தைப் பெறுகிறார். அதாவது சிவாஜி கணேசன் ஏற்றுக்கொண்ட பாத்திரத்துக்குத் தனது உயிரைக் கொடுக்கிறார்; தன்னிடமிருந்து உணர்ச்சியை ஊட்டுகிறார். ஆனால், எம்.ஜி.ஆர். அந்தப் பாத்திரத்தின் உயிரையும் உணர்ச்சியையும் தான் எடுத்துக்கொள்கிறார். அதனால்தான் வேலை முடிந்ததும் சிவாஜி தனித்துச் சென்றுவிடுகிறார். அதே நேரத்தில் எம்.ஜி.ஆர். நடித்து முடிந்தாலும் தன் வாழ்நாள் முழுவதும் அந்தப் பாத்திரத்தோடு சேர்ந்தே எண்ணப்படுகிறார். ஒரு மேன்மையான பாத்திரத்தில் சிவாஜி நடிக்கிறார். ஆனால், தான் ஏற்றுக்கொண்ட பாத்திரத்தின் மேன்மைகளை எம்.ஜி.ஆர். தன் நிஜ வாழ்வின் மீது ஏந்திக்கொள்கிறார்.

அதாவது சிவாஜி கணேசன் தனது பாத்திரப் படைப்புக்காக ரசிகனிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றுக்கொண்டிருக்கும்போது, அதே ரசிகன் எம்.ஜி.ஆர். மீது அவர் வந்துபோன பாத்திரத்தின் பொறுப்புக்களை சுமத்திக் கொண்டிருக்கிறான்..

சிவாஜியின் நடிப்புத் திறன் உணரப்பட்ட அளவுக்கு எம்.ஜி.ஆரின் நடிப்புத் திறன் அல்லது பாணி இதுவரை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதனால்தான் எம்.ஜி.ஆரின் நடிப்பை நாம் குறைத்து மதிப்பிட்டு வருகிறோம்.

சிவாஜி – எம்.ஜி.ஆர் இருவரும் ஒப்பிட முடியாத, ஆனால் சம பலம் வாய்ந்தவர்கள் என்பதே நமது முடிவு.

மக்களின் அபிமானம் சிவாஜியிடம் ‘கலா ரசனை’ என்ற அளவில் மட்டுமே நின்றுகொண்டதற்கும் அதே கவனம் எம்.ஜி.ஆரிடம் ‘காவியத் தலைவன்’ என்ற தகுதியை அடைந்துவிட்டதற்கும் காரணம் இருவரின் மாறுபட்ட செயல்பாடுகளே அன்றி வேறு அல்ல. எப்படி ஒரு நடிகராகிய எம்.ஜி.ஆர். மக்கள் தலைவர் ஆனார் என்ற மாபெரும் கேள்விக்கான விடை இதுதான்.

நடிகர் திலகம் சிவாஜியைக் கமலும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை ரஜினியும் பிரதிபலிக்கிறார்களா? ஆம்... என்பதுதான் நாம் பெறும் பொதுவான பதிலாக இருக்கிறது.

“தமிழ் நாட்டின் முதல்வராகும் தகுதி எனக்கு இருக்கிறது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் என்னவோ ரஜினிகாந்துக்குத்தான் இருக்கிறது”

என்ற நடிகர் சாருஹாசனின் புகழ்பெற்ற வாசகம் இதை வலியுறுத்த எழுந்த ஒன்றுதான்.

இதுதான் உண்மையா?

கமல், சிவாஜி கணேசனையும் ரஜினிகாந்த், எம்.ஜி.ஆரையும் பிரதிபலிக்கிறார்களா?

(தொடர்ந்து அலசுவோம்...)

கட்டுரையாசிரியர்: ம.தொல்காப்பியன்... எழுத்தாளர், இயக்குநர். அவரைத் தொடர்புகொள்ள: [email protected]

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon