மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

மரண தண்டனையை மாற்ற மத்திய அரசிடம் கேள்வி!

மரண தண்டனையை மாற்ற மத்திய அரசிடம் கேள்வி!

‘குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் மரண தண்டனை முறையை ஏன் மாற்றியமைக்கக் கூடாது?’ என்று மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கடுமையான குற்றம் புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான மரண தண்டனை விதிக்கப்படும். அதுபோன்று இந்தியாவில் மரண தண்டனை கைதிகள் தூக்கிலிடப்படுவார்கள். இந்த முறையை மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ரிஷி மல்கோத்ரா என்பவர் தொடர்ந்த வழக்கில், “மரண தண்டனையின்போது குற்றவாளிகளின் துன்பத்தைக் குறைக்க வேண்டும். அதாவது ஒரு மனிதன் தூக்கிலிடப்படுகையில், அவனுடைய கண்ணியம் அழிக்கப்படுகிறது. ஒருவர் தனது வாழ்நாள் முடியும் நிலையில் வலியால் இறக்கக் கூடாது. அமைதியாக இறக்க வேண்டும். எனவே தூக்கு தண்டனைக்குப் பதில் மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நேற்று (அக் 6) உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மரண தண்டனை முறையை ஏன் மாற்றியமைக்கக் கூடாது என்று மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மரணத்தின்போதுகூட ஒருவர் கவுரவமாக உயிரிழக்க உரிமை உண்டு. மரண தண்டனை விதிக்கப்பட்டவர் அமைதியாக மரணமடைய வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளது. மரண தண்டனையின் அரசியல் சாசனத் தன்மையை கேள்விக்குட்படுத்தவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது. உயிர் வாழ்வது மற்றும் கவுரவத்துக்கான அடிப்படை உரிமையை எப்படி அரசியல் சாசனம் 21ஆம் பிரிவு புனிதமாகக் கருதுகிறதோ, அதேபோல் கவுரவமாக மரணித்தல் என்பதையும் கருத இடமளிக்கிறது.

ஐக்கிய நாடுகளில் விஷ ஊசி போட்டுக் குற்றவாளிகள் கொல்லப்படுகிறார்கள். அதுபோன்று நவீன அறிவியல் சாத்தியங்களை கொண்டு வலியற்ற மரணம் நிகழ்வதற்கான நடைமுறைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

வெள்ளி, 6 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon