மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 15 ஆக 2020

குஷ்புவுடன் மோதும் கராத்தே தியாகராஜன்!

குஷ்புவுடன் மோதும் கராத்தே தியாகராஜன்!

அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு, ராகுல் காந்தி தலைவராகப் பொறுப்பேற்கும் முன்பு, இந்தியா முழுவதும் மாநிலம் வாரியாக ஜனநாயக முறையில் உட்கட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்றும், மாநிலப் பொதுக்குழுவில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஒப்புதல் தீர்மானம் போடச்சொல்லி வாய்மொழி உத்தரவு போட்டுள்ளது டெல்லி தலைமை.

அதன்படி தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் 19 வருடங்களுக்குப் பிறகு நேற்று (அக்டோபர் 6) தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தப் பொதுக்குழுவில், மொத்தமுள்ள 688 பொதுக்குழு உறுப்பினர்களில், 640 பேர்தான் கலந்துகொண்டனர். காரணம் கடலூர், கன்னியாகுமரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுக்குழு உறுப்பினர்கள் நியமிப்பதில் சமரசம் ஏற்படவில்லையாம். அதனால் மூன்று மாவட்டங்களின் பொதுக்குழு உறுப்பினர்களை அறிவிக்காமல் முடிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர்.

பொதுக்குழு காலை சரியாக 10.30 மணிக்கு தொடங்குவதாய் இருந்தது. ஆனால், ஒரு மணி நேரம் தாமதமாக 11.30 மணிக்கு தொடங்கப்பட்டது. அதில், “ராகுல் காந்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராக பொறுப்பேற்க இந்தப் பொதுக்குழு ஒப்புதல் வழங்குகிறது. மேலும், அனைத்து அதிகாரத்தையும் அகில இந்திய தலைவருக்கு அளிக்கிறது” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வெற்றிகரமாக ஒரு மணிக்குள் பொதுக்குழுவை முடித்தனர்.

688 பொதுக்குழு உறுப்பினர்களில் 100 பொதுக்குழு உறுப்பினர்களை மாநில தலைவர் நியமித்துக் கொள்ளலாம் என்பது கட்சியின் மறைமுகமான விதி என்பதால், டெல்லி தலைமை ஆலோசனைப்படி திருநாவுக்கரசர் கோட்டாவில் உள்ள நூறு பொதுக்குழு உறுப்பினர்களின் பதவியில், ஒரு பதவிக்கு குஷ்புவை நியமித்தார். குஷ்புவும் பொதுக்குழு உறுப்பினராகப் பொதுக்குழுவில் கலந்துகொண்டார்.

முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆதரவாளராக குஷ்பு அறியப்பட்டவர். ஆனால், சென்னை தெற்கு மாவட்டத் தலைவர் கராத்தே தியாகராஜன், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளராவார். தியாகராஜன் மாவட்டத் தலைவராக இருக்கும் பகுதியில்தான் குஷ்புவின் இல்லம் உள்ளது.

அதையடுத்து தன்னுடைய ஒப்புதலில்லாமல் குஷ்புவை[ பொதுக்குழு உறுப்பினராக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிகையாளர்களிடம் கராத்தே தியாகராஜன் பேசியுள்ளார். பொதுக்குழுவிலும் முணுமுணுத்துள்ளார்.

“25 உறுப்பினர்களைக் கட்சியில் சேர்த்தவர்தான் தீவிர உறுப்பினர். அவருக்குத்தான் பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்க வேண்டும். ஆனால், ஓர் உறுப்பினரைக்கூட சேர்க்காத குஷ்புவை எப்படி பொதுக்குழு உறுப்பினராக நியமிக்கலாம்?” என்று தனது எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளார் தியாகராஜன்.

“தியாகராஜனின் அதிருப்தி பேச்சால் சிறு சலசலப்பு ஏற்பட்டது. இது திருஷ்டி கழிப்பதுபோல் இருந்தது” என்கிறார் ஒரு பொதுக்குழு உறுப்பினர்.

வெள்ளி, 6 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon