மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

உலகக்கோப்பை: லட்சம் பேர் எழுதிய முதல் அத்தியாயம்!

உலகக்கோப்பை: லட்சம் பேர் எழுதிய முதல் அத்தியாயம்!

-சிவா

17 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நேற்று முதல் தொடங்கியிருக்கிறது. முதல் போட்டியை இந்திய அணி வெற்றிகரமானதாக மாற்றவில்லை என்றாலும், இந்திய ரசிகர்கள் உலக அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டார்கள்.

நேற்றைய முதல் போட்டியில் நியூசிலாந்து மற்றும் துருக்கி அணிகள் மோதியதில் 1-1 என ஆட்டம் டிராவில் முடிந்தது. ஆட்டம் தொடங்கிய 18ஆவது நிமிடத்திலேயே துருக்கியின் மிட்ஃபீல்டர் அஹமது குட்டுகு கோல் அடித்து துருக்கிக்கு முன்னிலை கொடுத்தார். அதன்பிறகு இரண்டாவது பாதியில்தான் நியூசிலாந்தின் கேப்டன் மேக்ஸ் மட்டா 58ஆவது நிமிடத்தில் கோல் அடித்து ஆட்டத்தை சமன்படுத்தினார். அதன்பிறகு மட்டா உட்பட நியூசிலாந்து அணியின் வீரர்கள் எவ்வளவோ முயன்றும் துருக்கி அணி வீரர்களின் தடுப்புச்சுவரைத் தாண்டிச் செல்ல முடியவில்லை. போட்டி வெற்றி பெறுவதைவிட தோல்வியைத் தழுவிவிடக் கூடாது என்பதில் துருக்கி வீரர்கள் கவனமாக இருந்தனர்.

துருக்கி அணியின் பயிற்சியாளர் மெஹ்மெட் பந்தைப் பார்த்து திரும்பாதீர்கள் என்று என் வீரர்களுக்கு நான் எவ்வளவோ சொல்லியிருந்தேன். ஆனால், அதைத்தான் அவர்கள் இன்று செய்தார்கள். கவனமின்மையை இது காட்டுகிறது. இதனால் வெற்றிக்கான வாய்ப்பு நழுவிவிட்டது. ஆனால், அடுத்த முறை இதைவிட சிறப்பாக வருவோம் என்று கூறியிருக்கிறார். நியூசிலாந்து துருக்கி அணிகள் மும்பையிலுள்ள படில் ஸ்டேடியத்தில் விளையாடிய இந்தப் போட்டியைப் பார்த்து ரசித்த ரசிகர்களின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்து எழுநூற்று இருபத்து ஏழு.

இரண்டாவது போட்டி டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. கொலம்பியா - கானா அணிகள் மோதிய இந்தப் போட்டியில் கானா நாட்டின் சாதிக் இப்ராஹிம் அடித்த கோல் மூலமாக தனது முதல் வெற்றியை ருசித்தது கானா அணி. கொலம்பிய வீரர்களின் ஆட்டத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இது மிகப்பெரிய ஏமாற்றமே. டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியைப் பார்த்து ரசித்த ரசிகர்களின் எண்ணிக்கை இருபத்து நான்காயிரத்து முந்நூறு.

மூன்றாவதாக பராகுவே மற்றும் மாலி நாடுகளுக்கிடையேயான போட்டி தான் பட்டாசு ரகம். போட்டி தொடங்கிய 12ஆவது நிமிடத்தில் காலியானோ மற்றும் 17ஆவது நிமிடத்தில் சான்சஸ் ஆகியோர் பராகுவே நாட்டுக்காக இரண்டு கோல்களை அடித்தார்கள். தொடர்ந்து ஸ்கோர் செய்யப்பட்ட இந்த கோல்கள் மாலி அணியை சோர்வடையச் செய்யும் என போட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் எதிர்பார்க்க, 20ஆவது மற்றும் 34ஆவது நிமிடங்களில் முறையே டிராமே மற்றும் டியாயே ஆகிய இருவரும் மாலி அணிக்காக கோல்களை அடித்து பராகுவே அணியை ஆச்சர்யப்படுத்தினார்கள். முதல் பாதி எவ்வித முன்னிலையும் இல்லாமல் சமநிலையில் முடிய, இரண்டாவது பாதியின் 55ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்ட்டி கோல் வாய்ப்பை பராகுவே நாட்டின் ஆலன் ரோட்ரிகுவெஸ் சரியாகப் பயன்படுத்தி பெற்ற முன்னிலையில் பராகுவே வெற்றி பெற்றது. இந்தப் போட்டியைப் பார்த்து ரசித்தவர்களின் எண்ணிக்கை இருபத்து ஐந்தாயிரத்து முந்நூற்று நாற்பத்து இரண்டு.

நேற்று இரவு 8 மணிக்கு இந்திய அணி தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் அமெரிக்காவை எதிர்த்து களமிறங்கியது. இந்தப் போட்டியைப் பொறுத்தவரையில் அமெரிக்க அணிக்கு எந்தவிதத்திலும் சளைத்ததாக இந்திய அணி இல்லை. அவர்கள் தவறு செய்த இடம், கவுன்ட்டர் அட்டாக்கை (Counter Attack) சாத்தியப்படுத்தாததுதான். முதல் அரைமணி நேரத்துக்குள்ளாகவே அமெரிக்க அணி பலமுறை இந்திய கோல் கம்பத்தை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியது. ஆனால், அந்த மாதிரி சூழ்நிலையில் தங்களது எல்லையிலிருந்து பந்தை கிளியர் செய்வதற்கு மட்டுமே இந்திய அணி முயன்றதே தவிர, எதிர் தாக்குதல் நடத்தவில்லை. இதனால், மிக தைரியமாக அமெரிக்க அணியினர் இந்திய எல்லைக்குள் புகுந்தபோதுதான் ஜிதேந்தர் சிங் அமெரிக்க அணியின் கேப்டனை பெனால்ட்டி பாக்ஸுக்குள் கீழே தள்ளிவிட்டார். இதனால் கிடைத்த பெனால்ட்டி வாய்ப்பில் தொடங்கிய கோல் மூன்று கோல்களை அடித்தபிறகு தான் நின்றது. இந்திய அணிக்கு உள்ளே நுழைவதற்கே வாய்ப்பு தராமல் விளையாடிய அமெரிக்க அணியைப் பாராட்ட வேண்டும் என்றால், அவர்களையும் ஏமாற்றி உள்ளே புகுந்து ஓடிய கோமல் தத்தலை என்ன சொல்வது?

இந்திய அணியின் மிட் ஃபீல்டரான கோமல் பலமுறை அமெரிக்க டிஃபண்டர்களுக்கு தலைவலியாக அமைந்தார். ஆனால், கோல் அடிக்காமல் விட்டுவிட்டார். 83ஆவது நிமிடத்தில் இந்திய வீரர்கள் அடித்த பந்து கிராஸ் பாரில் பட்டு திரும்ப வர, அதை சிறந்த எதிர் தாக்குதலாக மாற்றி அமெரிக்க அணியின் ஸ்டிரைக்கர் கார்லடன் மூன்றாவது கோலாக மாற்றினார். நேற்றைய போட்டிகளிலேயே நடுவரிடமிருந்து ஒரு எச்சரிக்கையைக் கூட பெறாமல் வீரர்கள் விளையாடிய போட்டியென்றால் அது இந்திய - அமெரிக்க அணிகள் விளையாடிய போட்டிதான். அத்தனை நேர்மையாக விதிகளை மீறாமல் நடைபெற்ற இந்தப் போட்டி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது. தோல்வியடையப் போகிறோம் எனத் தெரிந்தும் வீரர்களை ஊக்கப்படுத்த கைதட்டிக்கொண்டும், சத்தங்களை உருவாக்கிக்கொண்டும் இருந்த இந்திய ரசிகர்களை உலகம் முழுவதும் சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளை நடத்திவரும் FIFA அமைப்பு பாராட்டியிருக்கிறது.

FIFA இணையதளத்தில் இந்திய ரசிகர்களின் வரவேற்பு அற்புதமான ஒன்று. விளையாட்டை விளையாட்டாக ரசிக்கும் தன்மை இவர்களிடம் அதிகமாக இருக்கிறது. அவர்களுக்கு நல்ல விளையாட்டைக் கொடுத்தால் போதும் என்று கூறியிருக்கிறது. இதற்காகத்தான் ஒவ்வொரு போட்டியிலும் எத்தனை ரசிகர்கள் கலந்துகொண்டார்கள் என்பதை ஒவ்வோர் இடத்திலும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியா - அமெரிக்கா போட்டியைப் பார்த்த ரசிகர்களின் எண்ணிக்கை நாற்பத்து ஆறாயிரத்து முந்நூற்று ஐம்பத்து ஒன்று. எனவே மொத்தமாக நேற்று மாலை தொடங்கிய உலகக்கோப்பை போட்டிகளை நேரில் சென்று பார்த்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து ஐந்தாயிரத்து எழுநூற்று இருபது. இது அல்லாமல், தொலைக்காட்சி ஆன்லைன் ஸ்டிரீமிங்கில் பார்த்தவர்கள் என இந்த எண்ணிக்கை மேலும் கூடக்கூடியது.

இந்தியாவின் கால்பந்து வரலாற்றின் முதல் அத்தியாயம் மேலே குறிப்பிட்ட ஒரு லட்சத்து ஐந்தாயிரத்து எழுநூற்று இருபது ரசிகர்களால் எழுதப்பட்டிருக்கிறது.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon