மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

டெல்லி சென்ற துணை முதல்வர்!

டெல்லி சென்ற துணை முதல்வர்!

இரட்டை இலை தொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேற்றைய தினம் அவசரமாகப் புறப்பட்டு டெல்லி சென்றார்.

இரட்டை இலை வழக்கை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த நிலையில், நேற்று (அக்டோபர் 6) இரட்டை இலை தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன. தினகரன் தரப்பில், “ஒன்றிணைந்த அணியினர் நிர்வாகிகளை மிரட்டி, பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்துள்ளனர். தவறான ஆவணங்களைத் தாக்கல் செய்ததை நிரூபிக்க கால அவகாசம் வேண்டும்” என்று வாதிடப்பட்டது.

தொடர்ந்து முதல்வர் அணியினர், “சசிகலா, தினகரன் கையில் அதிமுக சிக்கினால், அதன் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். மேலும், இன்றே இறுதி விசாரணை நடத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது. ஒருங்கிணைந்த அணியின் சார்பில் பன்னீர் அணியில் இருந்த கே.பி.முனுசாமி, மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.

இந்தச் சூழ்நிலையில் நேற்று ஆளுநர் பதவியேற்பு முடிந்தபிறகு அவசரமாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் டெல்லி சென்றார். அங்கு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்கே கிடைக்கும் என்ற நம்பிக்கை உறுதியாக உள்ளது” என்றார்.

“பரோலில் வெளிவந்துள்ள சசிகலாவைச் சந்திப்பீர்களா?” என்ற கேள்விக்கு, சிரித்தபடியே பதில் ஏதும் சொல்லாமல் சென்றார். பின்னர் தலைமை தேர்தல் ஆணையத்துக்குச் சென்றார்.

வெள்ளி, 6 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon