மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

வாக்கி டாக்கி ஊழல்: டிஜிபியை நீக்க வேண்டும்!

வாக்கி டாக்கி ஊழல்: டிஜிபியை நீக்க வேண்டும்!

வாக்கி டாக்கி ஊழல் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்தவும், அதுவரை சட்டம் - ஒழுங்கு டிஜிபியை பொறுப்பிலிருந்து விடுவிக்கவும் ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று (அக்டோபர் 06) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ‘தமிழக அரசு வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும்’ என்று தெரிவித்து இருப்பதை வரவேற்கிறேன்.

ஆளுநர் இதுபோன்று கூறியிருக்கின்ற நிலையில், மாநிலத்தின் சட்டம் - ஒழுங்குப் பணிகளுக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் மிக முக்கியமான தொடர்பு சாதனமாக திகழும் ‘வாக்கி டாக்கி’ கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

செய்திகள் வெளிவந்து மூன்று தினங்கள் கடந்தும், இதுவரை காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மவுனம் காத்து, ‘குட்கா’வில் தொடர்புடைய அதிகாரிக்குப் பதவி உயர்வு கொடுத்ததுபோல், இப்போது ‘வாக்கி டாக்கி’ முறைகேடுகளையும் போர்வை போட்டு மூடப் பார்ப்பது வேதனைக்குரியது.

இந்த முறைகேடு குறித்த கேள்விகளை எழுப்பியிருப்பது எதிர்க்கட்சிகள் அல்ல, மாநில உள்துறைச் செயலாளராக இருக்கும் நிரஞ்சன் மார்டி. அவர் டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், டெண்டர் முறைகேடுகளை சுட்டிக்காட்டி, அதன் நகலை முதல்வருக்கும் தலைமைச் செயலாளருக்கும் அனுப்பியிருக்கிறார்.

உள்துறைச் செயலாளர் தனது கடிதத்தில், இந்த டெண்டரில் 11 விதிமீறல்கள் இருப்பதாகவும், வாக்கி டாக்கிக்கு 28 சதவிகிதமாக இருந்த வரி, ஜி.எஸ்.டி சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு 12 சதவிகிதமாக குறைக்கப்பட்டாலும், அந்தக் கம்பெனிக்கு 28 சதவிகிதமாகவே கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

‘2017-18ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் காவல்துறையை நவீனமயமாக்குவதற்கு 47 கோடி ரூபாய் நிதிதான் ஒதுக்கப்படும் என்கிறபோது 88 கோடி ரூபாய்க்கு டெண்டர் விட்டது எப்படி?’ என்ற மிகப்பெரிய கேள்வி ஒன்றை எழுப்பியுள்ள உள்துறைச் செயலாளர், ‘88 கோடி ரூபாய் டெண்டரில் ஒரேயொரு நிறுவனம் மட்டும் கலந்துகொண்ட நிலையில், அந்த நிறுவனத்துக்கே ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது எப்படி? எந்த விதி அதை அனுமதிக்கிறது?’ என்ற மிக முக்கியமான கேள்விகளையும் எழுப்பி இருக்கிறார்.

இந்த மெகா முறைகேட்டில் இருந்து தப்பித்துக்கொள்ள சட்டம் - ஒழுங்கு டிஜிபியும், மாநில உளவுத்துறை ஐஜியும் ‘கூட்டணி’ அமைத்து, ஊழலை தட்டிக்கேட்ட உள்துறைச் செயலாளரை மாற்ற வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்து வருவதாகவும் தெரியவருகிறது.

‘வெளிப்படையான நிர்வாகத்தைத் தமிழக அரசு வழங்க வேண்டும்’ என்று இன்றைய தினம் பொறுப்பேற்றுள்ள ஆளுநர் தனது முதல் பேட்டியிலேயே கூறியிருக்கின்ற நிலையில், காவல்துறைக்கு ‘வாக்கி டாக்கி’ கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் நடைபெற்றுள்ள 88 கோடி ரூபாய் முறைகேடு குறித்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் ஒரு சுதந்திரமான விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், நாட்டின் பாதுகாப்புக்குப் பயன்படும் வாக்கி டாக்கி ஒப்பந்த முறைகேடு மீதான விசாரணை முடியும் வரை, சட்டம் - ஒழுங்கு டிஜிபி பொறுப்பிலிருந்து டி.கே.ராஜேந்திரனை விடுவிக்கவும் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 6 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon