மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

கவுரி லங்கேஷ் கொலையில் 5 பேர்

கவுரி லங்கேஷ் கொலையில் 5 பேர்

எழுத்தாளர் கவுரி லங்கேஷ் கொலையில் வலதுசாரி அமைப்பான சனாதன் சன்ஸ்தாவைச் சேர்ந்த 5 பேருக்குத் தொடர்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கன்னட எழுத்தாளரும் பகுத்தறிவுவாதியுமான கவுரி லங்கேஷ் கடந்த செப்டம்பர் 5ம் தேதி அவரது வீட்டு வாசலில் வைத்து மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மரணம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு விசாரித்து வருகிறது. இந்தக் கொலைக்கும் முன்னர் கொலை செய்யப்பட்ட முற்போக்குவாதியான கல்பர்கியின் கொலைக்கும் தொடர்பு இருப்பது தடவியல் சோதனையில் தெரியவந்துள்ளது. இந்த இரு கொலைகளிலும் ஒரே மாதிரியான ஆயுதங்கள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வலதுசாரி அமைப்பான சனாதன் சன்ஸ்தா மீது போலீசாரின் சந்தேகப் பார்வை விழுந்துள்ளது. அந்த அமைப்பைச் சேர்ந்த சராங் அகோல்கர், ஜேபிரகாஷ், பிரவீன் ஆகிய மூவரின் விவரங்களை தரும்படி என்.ஐ.ஏ, சி.பி.ஐ. இடம் சிறப்பு விசாரணைக் குழு கேட்டுள்ளது. முற்போக்குவாதிகளான கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர், மற்றும் கல்புர்கி ஆகியோரின் மரணத்திற்கும் இவர்களுக்குச் சம்பந்தம் உள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த 2009ம் ஆண்டு கோவாவில் நிகழ்ந்த வெடிகுண்டு வழக்கில் இவர்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இண்டர்போல் அமைப்பு அவர்களுக்கு எதிராக ரெட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. தற்போது, தலைமறைவாக உள்ள இவர்களைப் பிடித்தால் கவுரி லங்கேஷ் மரணத்தின் மர்ம முடிச்சுகள் அவிழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon