மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

ப்ரோ கபடி: குஜராத் தொடர்ந்து முதலிடம்!

ப்ரோ கபடி: குஜராத் தொடர்ந்து முதலிடம்!

ப்ரோ கபடி லீக் போட்டியின் 111-ஆவது ஆட்டத்தில் குஜராத் பார்ச்சூன்ஜயன்ட்ஸ் அணி, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தி முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டது.

ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் ப்ரோ கபடி தொடரின் நேற்றைய ஆட்டத்தின் தொடக்கத்திலேயே குஜராத் அணியின் சந்திரன் இரு புள்ளிகளைக் கைப்பற்ற, 3-ஆவது நிமிடத்தில் குஜராத் அணி 3-0 என முன்னிலை பெற்றது. அதைத் தொடர்ந்து ஜெய்ப்பூரும் அபாரமாக விளையாட ஆட்டம் விறுவிறுப்பாகச் சென்றது. இருப்பினும் குஜராத் அணி தனது சிறப்பான தடுப்பாட்டதால் தொடர்ந்து முன்னிலை வகித்தது. முதல் பாதியின் கடைசி நிமிடங்களில் ஜெய்ப்பூர் அணியின் நிதின் ரவால் சிறப்பாக ஆடி ஸ்கோரை 11-11 எனச் சமநிலை பெறச் செய்தார்.

பின்னர் நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் 25வது நிமிடத்தில் குஜராத் அணி 2 புள்ளிகளைப் பெற்று 15-13 என முன்னிலை பெற்றது. 30வது நிமிடத்தில் ஸ்கோரை சமன் 16-16 செய்தது ஜெய்ப்பூர். அதன் பிறகு குஜராத் அணி 4 புள்ளிகளைப் பெற்று 20-16 என்ற முன்னிலையை எட்டியது. 37வது நிமிடத்தில் ஜெய்ப்பூர் அணி ஆல்அவுட் ஆனது. இறுதியில் குஜராத் அணி, 29-23 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

குஜராத் தரப்பில் ரஞ்சித் 7 புள்ளிகளையும், சச்சின் 6 புள்ளிகளையும் கைப்பற்றினர். ஜெய்ப்பூர் அணி 16 ஆட்டங்களில் விளையாடி 7 தோல்வியுடன், 45 புள்ளிகளுடன் 'ஏ' பிரிவில் 5-ஆவது இடத்தில் உள்ளது.

இன்றைய ஆட்டங்கள்:

ஹரியாணா ஸ்டீலர்ஸ் - தெலுகு டைட்டன்ஸ், (இரவு 8 மணி)

ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - யு மும்பா, (இரவு 9 மணி)

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon