மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 13 ஜூலை 2020

டெங்கு விழிப்புணர்வு நடை பயணத்தில் கிரண்பேடி

டெங்கு விழிப்புணர்வு  நடை பயணத்தில் கிரண்பேடி

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் டெங்கு காய்ச்சலின் தாக்குதல் மிகத் தீவிரமாக உள்ளது. இந்நிலையில் டெங்கு காய்ச்சலை தடுக்கப் புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி குற்றம் சாட்டி இருந்தார். மேலும் இந்த டெங்கு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தத் தானே களத்தில் இறங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப் போவதாகவும் சமீபத்தில் கூறியிருந்தார். தான் கூறியபடியே கிரண் பேடி களத்தில் இறங்கிவிட்டார். கடந்த சில நாட்களாகக் கள ஆய்வு செய்ய பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்தார்.. மேலும் மக்களிடம் டெங்கு காய்ச்சல் எதனால் வருகிறது.. ? அதன் அறிகுறி என்ன? வீடு மற்றும் சுற்றுப்புறங்களை எப்படி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று மக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த 5 கி.மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொள்ளப் போவதாகவும் நேற்று அறிவித்தார்.

அதன்படியே இன்று 7.10.2017 காலை 6.30 மணியளவில் துணை நிலை ஆளுநர் மாளிகையில் இருந்து விழிப்புணர்வு நடைபயணத்தை கிரண்பேடி தொடங்கினார். கிரண்பேடியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வர்த்தக சங்கங்கள், குடியிருப்போர் நல சங்கத்தினர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் நடைபயணத்தில் பங்கேற்றனர்.

நடைபயணத்தின் போது துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது கையில் ஏடீஸ் கொசுவின் படம் வரைந்த பதாகையை ஏந்தியபடியே நடந்தார். வழியெங்கும், டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மக்களிடம் மேற்கொண்டார். ஆளுநருடன் கலந்து கொண்ட பேரணியினர் டெங்கு விழிப்புணர்வு கோஷம் எழுப்பியபடி மக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீசும் வழங்கினர். ஆளுநர் மாளிகையில் இருந்து கடற்கரை சாலை, குருசு குப்பம், சோலை நகர், பெருமாள் கோவில் வீதி, டி.வி. நகர், மிஷன் வீதி வழியாக மீண்டும் மீண்டும் ஆளுநர் மாளிகையை அடைந்தார் கிரண்பேடி. காலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த நடைபயணத்தை 8.15 மணிக்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடி நிறைவு செய்தார். புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை இரண்டு பேர் டெங்கு காய்ச்சலுக்குப் பலியாகியிருக்கிறார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon