மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

போயஸ் கார்டன்: தீபா புதிய வழக்கு!

போயஸ் கார்டன்: தீபா புதிய வழக்கு!

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு தடை கேட்டு, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து ஓராண்டு முடிவடையவுள்ள நிலையில், கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி அவரது போயஸ் கார்டன், வேதா இல்லத்தை நினைவிடமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்ற தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபா, தீபக் இருவரும் நினைவிடமாக்குவது தொடர்பாக தங்களின் முடிவை கேட்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா, போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (அக்டோபர் 7) சென்னை உயர்நீதிமன்றத்தில் புதியமனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். மனுவில்,"அத்தை ஜெயலலிதாவுடன், அப்பா ஜெயக்குமார் என கூட்டுக் குடும்பமாக போயஸ் கார்டன் இல்லத்தில் வசித்து வந்தோம், பிறகு எங்களது படிப்புக்காக தி.நகர் இல்லத்திற்கு நாங்கள் குடியேறிவிட்டோம்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா இறந்துவிட்டார். இதைத் தொடர்ந்து போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்க முயற்சி செய்யப்படும் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதையெதிர்த்து முதலமைச்சர், தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு கடிதம் கொடுத்தேன். எனது கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை. ஜெயலலிதா உயில் ஏதும் எழுதிவைக்காத நிலையில், அவரின் சொத்துக்களுக்கு நானும், தீபக்கும்தான் சட்டப்பூர்வமான வாரிசுகள். தனியார் சொத்தை நினைவு இல்லமாக மாற்றுவது குறித்த அறிவிப்பை வெளியிட அரசுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. எனவே ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக அறிவித்த அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவின் மீதான விசாரணை வரும் 9ஆம் தேதி நீதிமன்றத்தில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தீபாவின் சகோதரர் தீபக், தான்தான் ஜெயலலிதாவின் வாரிசு என்று சான்றளிக்கக் கோரி கிண்டி தாசில்தாரிடம் மனுதாக்கல் செய்தார். அவரை உரிமையியல் நீதிமன்றத்தை அணுக தாசில்தார் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon