மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

இன்டர்நெட் உலகம்... மிரட்டும் `கீ'!

இன்டர்நெட் உலகம்... மிரட்டும் `கீ'!

'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்துக்குப் பிறகு ஜீவா நடிக்கும் திரைப்படம் 'கீ'. அறிமுக இயக்குநர் காளீஸ் இயக்கத்தில் உருவாகும் இதில் ஜீவாவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். இதன் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், இதன் டீசரை வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (அக்டோபர் 6) வெளியிட்டார்.

இதன் டீசரில் "போன்ல இன்டர்நெட் இருக்குன்னா.. நீங்க உலகத்தை பார்க்குறீங்க மட்டும் இல்ல..உலகம் உங்களையும் தான் பார்த்துட்டு இருக்கு.." என்ற வசனமே படத்திற்கான எதிர்பார்ப்பையும் பயத்தையும் ஏற்படுத்துகிறது. "இனி இந்த கம்ப்யூட்டர் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது" என்கிற ஜீவாவின் வசனத்தின் மூலம் மாறிவரும் உலகைப் பற்றிய படமாக உருவாகிவருகிறது எனத் தெரிகிறது.

புளூ வேல் கேமால் பாதிப்புகள் வருவதைப் போலவே ஸ்மார்ட் போனால் பலர் தங்களையும் அறியாமல் எத்தகைய பிரச்னைகளில் மாட்டிக்கொள்கிறார்கள் என்பதை சொல்லும் படமாக உருவாகி வருகிறது. கம்ப்யூட்டர் மற்றும் ஹேக்கர் சம்பந்தமான கதை என்பது என டீசரில் அறிய முடிகிறது.

'கீ' என்ற வார்த்தைக்கு எவ்வளவு நன்மைகள் இருக்கோ அதே அளவுக்குத் தீமைகளும் இருக்குனு தொல்காப்பியம் கூறும் அர்த்தத்தை மையமாகக் கொண்டு இப்படத்திற்கு `கீ' என்ற தலைப்பை வைத்துள்ளதாக காளீஸ் தெரிவித்துள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி மற்றும் 'காவியத் தலைவன்' படத்தில் நடித்த அனைகா ஷோடி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அனிஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகின்றன.

கீ டீசர்

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon