மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

எடப்பாடியின் நன்றிக் கடன்: கொதித்த தினகரன்

எடப்பாடியின் நன்றிக் கடன்: கொதித்த தினகரன்

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து பரோல் கிடைத்ததை அடுத்து நேற்று மாலை அங்கிருந்து புறப்பட்ட சசிகலா, நேற்று இரவு 9.50 மணியளவில், சென்னை தியாகராயர் நகரில் உள்ள கிருஷ்ண ப்ரியா வீட்டிற்கு வந்தடைந்தார்.

சசிகலாவை வீட்டில் சிறிது நேரம் சந்தித்துப் பேசிய தினகரன் அதன் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, தன்னை முதல்வர் பதவியில் நியமித்த சசிகலாவுக்கு எடப்பாடி பழனிசாமி எல்லா வகையிலும் நன்றி செலுத்திவருவதாகக் குறிப்பிட்டார் தினகரன். சசிகலா பரோலில் வந்தால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனத் தமிழக அரசு பல நிபந்தனைகளைப் பரிந்துரைத்ததாகவும் டிடிவி கூறினார். அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது, சென்னையை விட்டு வெளியில் செல்லாமல் இருக்க வேண்டும், போயஸ் இல்லத்தில் தங்கிக்கொள்ள அனுமதிக்கக் கூடாது, அரசியல்வாதிகளைச் சந்திக்கக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் இருப்பதாகக் கூறிய அவர், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று பழனிசாமி அன்கோ மறைமுகமாக அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜெயலலிதாவுக்காகச் சிறை சென்ற சசிகலாவை தேசத்துரோகி போல எடப்பாடி பழனிசாமி சித்தரிப்பதாக டிடிவி குறிப்பிட்டார். சசிகலா கார்டனில் தங்குவதாக திட்டம் இல்லை என்றும் இந்த பரோல் கால தாமதம் ஆனதற்கு பழனிசாமி அரசு தான் காரணம் என்றும் அவர் கூறினார்.

பழனிசாமியை முதல்வராக்கியதற்கான நன்றிக்கடனை அவர் சசிகலாவுக்கு செய்துள்ளார் என டிடிவி குத்தலாகத் தெரிவித்தார். உறவினர்கள், நண்பர்கள், கட்சி நிர்வாகிகளைச் சந்திக்கலாம். சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்திக்கலாம், கட்சி நடவடிக்கையில் மட்டும் ஈடுபடக் கூடாது என விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் யாவும் எடப்பாடி அரசு வற்புறுத்தியதன் விளைவாகத்தான் என அவர் கூறினார்.

சசிகலா கட்சி நடவடிக்கையில் ஈடுபட்டால் ஆட்சிக்கு ஆபத்து வரும் என்ற நிலையில்தான் எடப்பாடி , தகிடுதத்த வேலைகளைச் செய்துவருவதாக அவர் தெரிவித்தார். இந்த ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டுவருவதாகக் கூறிய டிடிவி, முன்னாள் ஆளுநரிடம் பல ஏமாற்றங்களை சந்தித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என்றும் முதல்வர் ஆக்கியவருக்கே துரோகம் செய்த இந்த ஆட்சி, நீதி தேவதையின் ஆசியுடன் வீட்டுக்கு அனுப்பப்படும் என்றும் அவர் கூறினார்.

பழனிசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும்போது தங்களது ஸ்லீப்பர் செல்கள் எவ்வாறு செயல்படுவார்கள் என்பதை அனைவரும் பார்ப்பார்கள் என்றும் சொல்லி முடித்தார் டிடிவி தினகரன்.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon