மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

காந்தி கொலை வழக்கு: வழக்கறிஞர் நியமனம்!

காந்தி கொலை வழக்கு: வழக்கறிஞர் நியமனம்!

மகாத்மா காந்தியின் மரணம் தொடர்பாக சந்தேகம் கிளப்பப்பட்டுள்ள வழக்கை விசாரிப்பதா, வேண்டாமா என்பது குறித்து முடிவெடுப்பதில் நீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்கறிஞர் அமரேந்திர சரணை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.

மகாத்மா காந்தி கடந்த 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில், கோட்சே, நாராயணன் ஆப்தே ஆகியோருக்கு 1949 நவம்பர் 15ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது, 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. போதிய ஆதாரம் இல்லாததால் சாவர்க்கர் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், காந்தியின் மரணத்தில் மர்மம் உள்ளதாகக் கூறி ‘அபினவ் பாரத்’ அமைப்பின் அறங்காவலர் டாக்டர் பங்கஜ் குமுத்சந்த் பத்னிஸ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், காந்தி மீது 4 குண்டுகள் பாய்ந்ததாகவும், அதில் 3 குண்டுகள் கோட்சோவால் சுடப்பட்டது என்றும், 4வது குண்டு யாருடையது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த நான்காவது குண்டுதான் காந்தி உயிரிழக்கக் காரணமாக அமைந்தது. இதில் வெளிநாட்டுச் சதி அடங்கியுள்ளது. இது குறித்து மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே, எல்.நாகேஸ்வரராவ் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று (அக்.06) விசாரணைக்கு வந்தது. அப்போது, காந்தியை வேறொருவர் கொன்றிருந்தால், தண்டனையைப் பெற அவர் உயிரோடு உள்ளாரா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த மனுதாரர், இந்தக் கொலைக்கு பின்னால் ஒரு அமைப்பு உள்ளது. எனவே, கொலை செய்தவர் மரணமடைந்திருந்தாலும் அந்த அமைப்பு குறித்துத் தகவலை வெளிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவும்படி மூத்த வழக்கறிஞரும் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான அமரேந்திர சரணுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களைப் பரிசீலித்து இதில் சட்டரீதியாக என்ன செய்ய முடியும் என்று நீதிமன்றம் முடிவெடுக்க உதவும்படி அவருக்கு உத்தரவு பிறப்பித்தனர். வழக்கின் விசாரணை 30ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon