மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

பிறந்தநாள் கட்டுரை: ஞானக்கூத்தன்- தமிழ்க் கவி மரபில் காலத்தின் அடையாளம்!

பிறந்தநாள் கட்டுரை: ஞானக்கூத்தன்- தமிழ்க் கவி மரபில் காலத்தின் அடையாளம்!

தினேஷ் பாரதி

பாரதியாரை ஆணிவேராகக் கொண்டு வளர்ந்த கவிதை மரபில் ந.பிச்சமூர்த்தி, க.நா.சுப்பிரமணியன் போன்ற முதல் தலைமுறைக் கவிஞர்ககளை அடியொற்றி வளர்ந்த இரண்டாவது தலைமுறைக் கவிஞர்கள் சி.மணி, பிரமிள், நகுலன், பசுவய்யா, ஞானக்கூத்தன், எஸ்.வைத்தீஸ்வரன் உள்ளிட்டவர்கள். இவர்களில் புதுக்கவிதைப் பயணத்துக்கான சாலையை இன்னும் நீளமானதாகவும் விரிவானதாகவும் மாற்றிவைத்த ஞானக்கூத்தனின் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 7).

மரபின் காதும் நவீன மனமும் கொண்டவை ஞானக்கூத்தனின் கவிதைகள். மாறிவரும் சமூக மாற்றங்களின் போக்குகளை எவருக்கும் வளையாமல் எதற்கும் இசைந்து கொடுக்காமல் மிக நாசுக்காக, நகைச்சுவையாக, எள்ளலோடு கவிதைகளைப் படைத்தவர் ஞானக்கூத்தன். நவீன கவிதைக்கு வேராகத் திகழ்ந்த ஞானரதம், ழ, கசடதபற, கவனம் ஆகிய சிற்றிதழ்களின் ஆசிரியர் குழுக்களில் தனது தீவிர பங்களிப்பைச் செலுத்தியவர்.

ஞானக்கூத்தன் எனக்கு அறிமுகமானது `சைக்கிள் கமலம்' என்ற கவிதையின் மூலமே. யுகபாரதி தனது கட்டுரைத் தொகுப்பில் இந்த கவிதை குறித்து சிலாகித்து எழுதியிருந்தார். அதன் பிறகுதான் இவருடைய தொகுப்புகளைத் தேடிப் படிக்கத் தோன்றியது. அப்படியாகத் தேட கிடைத்தது அவருடைய முதல் தொகுப்பான, அவருடைய திருமணப் பரிசாக வெளிவந்த ‘அன்று வேறு கிழமை’என்னும் கவிதைத் தொகுப்பு. மனித மனத்தின் எல்லாவற்றையும் பாடிய மனோரஞ்சிதத் தொகுப்பு.

அந்த தொகுப்பில்தான் சைக்கிள் கமலம் கவிதை இடம் பெற்றிருந்தது. பால்ய காலங்களில் சைக்கிள் ஓட்டிப் பழகிய நாட்களையும், சைக்கிள் மீதான சித்தரிப்பையும் கண்முன் காட்சிப்படுத்திய கவிதை.

அப்பா மாதிரி ஒருத்தன் உதவினான்

மைதானத்தில் சுற்றிச் சுற்றி

எங்கள் ஊர்க் கமலம் சைக்கிள் பழகினாள்

தம்பியைக் கொண்டு போய்ப்

பள்ளியில் சேர்ப்பாள்

திரும்பும் பொழுது கடைக்குப் போவாள்

கடுகுக்காக ஒரு தரம்

மிளகுக்காக மறு தரம்

கூடுதல் விலைக்குச் சண்டை பிடிக்க

மீண்டும் ஒரு தரம் காற்றாய்ப் பறப்பாள்

வழியில் மாடுகள் எதிர்ப்பட்டாலும்

வழியில் குழந்தைகள் எதிர்ப்பட்டாலும்

இறங்கிக் கொள்வாள் உடனடியாக

குழந்தையும் மாடும் எதிர்ப்படா வழிகள்

எனக்குத் தெரிந்து ஊரிலே இல்லை

எங்கள் ஊர்க்கமலம் சைக்கிள் விடுகிறாள்

என்மேல் ஒருமுறை விட்டாள்

மற்றப் படிக்குத் தெருவில் விட்டாள்.

என்று அந்த கவிதையை வாசித்து முடிக்கையில் நினைவுகளை மீட்டி விட்டு, வாய்விட்டு சிரிக்க வைத்துவிடும்.

ந.பிச்சமூர்த்தி, க.நா.சு, நகுலன், பிரமிள், ஆத்மாநாம், ஞானக்கூத்தன், பசுவய்யா, சி.மணி, எஸ்.வைத்தீஸ்வரன், விக்கிரமாதித்யன், ந.ஜெயபாஸ்கரன், கலாப்ரியா, கல்யாண்ஜி, தேவதேவன், தேவதச்சன் என்று செல்லும் இந்த வரிசை கவிஞர்களில் பலரும் தத்துவம், தனிமை, ஆற்றாமை, காலம், இடம் என தேடலின் தீவிரத்தில் இயங்கியவர்கள். இவர்களிலிருந்து நிறைய வேறுபட்டு நிற்கிறார் ஞானக்கூத்தன்.

அப்படியான ஒரு கவிதை `அம்மாவின் பொய்கள்'.

பெண்ணுடன் சினேகம் கொண்டால்

காதறுந்து போகும் என்றாய்

தவறுகள் செய்தால் சாமி

கண்களைக் குத்தும் என்றாய்

தின்பதற் கேதும் கேட்டால்

வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்

ஒருமுறை தவிட்டுக்காக

வாங்கினேன் உன்னை என்றாய்

எத்தனைப் பொய்கள் முன்பு

என்னிடம் சொன்னாய் அம்மா

அத்தனைப் பொய்கள் முன்பு

சொன்ன நீ எதனாலின்று

பொய்களை நிறுத்திக் கொண்டாய்

தவறு மேல் தவறு செய்யும்

ஆற்றல் போய் விட்டதென்றா?

எனக்கினி பொய்கள் தேவை

இல்லையென் றெண்ணினாயா?

அல்லது வயதானோர்க்குத்

தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்

பொறுப்பினி அரசாங்கத்தைச்

சார்ந்ததாய்க் கருதினாயா?

தாய்ப்பாலை நிறுத்தல் போலத்

தாய்ப் பொய்யை நிறுத்தலாமா

உன்பிள்ளை உன்னை விட்டால்

வேறெங்கு பெறுவான் பொய்கள்?

என அக்கவிதையில் ஒரு உணர்வுபூர்வமான மன்றாடல் இருக்கும். அம்மாவிடம், “வயதானவர்களுக்கு பொய் சொல்லும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உரியது என எண்ணினாயா?” எனக் கேட்பார். அதுதான் ஞானக்கூத்தன். தன் ஒவ்வொரு கவிதைக்குள்ளும் அரசியல் விமர்சனத்தை நாசுக்காக முன்வைப்பார்.

அவருடைய கவிதைகளில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. "எனக்கும் தமிழ்தான் மூச்சு... ஆனால் அதைப் பிறர்மேல் விட மாட்டேன்'' என்ற இக்கவிதை வரிகள்தான். "தமிழுக்கும் அமுதென்று பேர்.. அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!" என்றும் "வரிப்புலியே! இளந்தமிழா எழுந்திரு நீ!" என்றெல்லாம் கேட்டுப் பழகிய தமிழ் வாசகனுக்கு ஞானக்கூத்தனின் கவிதைகள் அதிர்ச்சியைத் தந்ததில் வியப்பில்லை. ஆனால் எழுபதுகளில் களைகட்டிய அரசியல் இயக்கங்களின் வெற்றுக் கோஷங்களையும் அதை வைத்து மட்டுமே அரசியல் நடத்திக்கொண்டிருப்பதையுமே அவரது ''எனக்கும் தமிழ்தான் மூச்சு'' கவிதை பகடி செய்தது என்பதைப் பிற்பாடுதான் புரிந்துகொள்ள முடிந்தது.

மேலோட்டமான உணர்ச்சிப் பெருக்கில் தம்மைக் கவிஞர்களாக நிலைநிறுத்திக்கொண்டவர்கள் மத்தியில் ஆரவாரமற்றுத் தன் கவித்துவத்தை வெளிப்படுத்தியவர் ஞானக்கூத்தன். ஆழ்ந்த சங்க இலக்கியப் பயிற்சி கொண்ட அவரது கவிதைகள் சொல் வளம் மிக்கவையாகத் திகழ்ந்ததில் எந்த வியப்பும் இல்லை. ஆனால், நவீனத் தன்மையுடனும் எளிமையுடனும் அவை இருந்தன. மொழி நேர்த்தியும் வடிவ ஒழுங்கும் கொண்டவை அவை. `தமிழ் தமிழ்' என்று சொல்லிவந்த அரசியல்வாதிகளின் போக்குகளை கடுமையாக விமர்சனம் செய்பவர் என்றாலும் இடஒதுக்கீடு, ஈழத்தமிழர் ஆதரவு போன்றவற்றில் பற்றுக் கொண்டவராக திகழ்ந்தவர்.

அவரது ‘போராட்டம்’ என்கிற கவிதை காதல் குறித்தது.

கைவசமிருந்த காதல்

கடிதங்கள் எரித்தேன்

வாசல் கதவுமுன்

குவித்துப் போட்டு

காகிதம் எரிந்து கூந்தல்

சுருளெனக் காற்றில் ஏறி

அறைக்குள்ளே மீளப் பார்க்கக்

கதவினைத் தாழ்ப்பாளிட்டேன்

வெளிப்புறத் தாழ்ப்பாள் முன்னே

கரிச்சுருள் கூட்டம் போட்டுக்

குதித்தது அறைக்குள் போக

காகிதம் கரியானாலும்

வெறுமனே விடுமா காதல்.

என மனதளவில் ஒன்றிப் போன காதலை என்ன செய்தாலும் அழியாது என்பதை எள்ளலோடு பதிவு செய்துள்ளார்.

ஞானக்கூத்தனால் உத்வேகம் பெற்ற அடுத்த தலைமுறைக் கவிஞர்களில் ஆத்மாநாம் முக்கியமானவர். அவரின் பெரும்பாலான கவிதைகள் ஞானக்கூத்தன் என்னும் கிளையில் பூத்த மலர்களாய் இருக்கும். ஆர். ராஜகோபாலன், ஆனந்த் என்று இன்னும் நிறைய பேர் கவிதைகளில் ஞானக்கூத்தனின் முகம் இருக்கும். இன்றைய இளம் தலைமுறைக் கவிஞர்களான இசை, முகுந்த் நாகராஜன், யுகபாரதி, உள்ளிட்ட பலரின் படைப்புகளிலும் ஞானக்கூத்தனின் வேர் இருக்கும்.

அரங்கநாதன் என்னும் இயற்பெயர் கொண்ட ஞானக்கூத்தன் நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை அருகே உள்ள திருஇந்தளூர் பிறந்தார். `திருமந்திரம்' ஏற்படுத்திய தாக்கத்தால் ஞானக்கூத்தன் என புனைப்பெயர் இட்டுக் கொண்டார்.

அன்று வேறு கிழமை, சூரியனுக்குப் பின் பக்கம், கடற்கரையில் சில மரங்கள், ஞானக்கூத்தன் கவிதைகள், என் உளம் நிற்றி நீ, இம்பர் உலகம் போன்றவை ஞானக்கூத்தன் கவிதைத் தொகுப்புகளில் குறிப்பிடத் தகுந்தவை. ஞானக்கூத்தன் 2016இல் தனது 77ஆவது வயதில் காலமானார்.

ஞானக்கூத்தன் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன், "நவீனத்துவத்துவத்தின் அடிப்படை இயல்புகளான எதிர்ப்பு, வன்மை, கசப்பு ஆகியவை நுட்பமான பகடியாக வெளிப்பட்ட கவிதைகள் அவருடையவை. ஏறத்தாழ 30 ஆண்டுகள் சென்னயில் ஒரு இலக்கிய மையமாக அவர் திகழ்ந்தார். ஆத்மாநாமிலிருந்து தொடங்கி இரண்டு தலைமுறைக் கவிஞர்கள் அவரிடமிருந்து உருவாகிவந்தனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய காலத்திற்கும் பொருந்தும்படியாக அவருடைய பிரச்னை என்ற கவிதை ஒன்று உண்டு. அந்தக் கவிதையில்,

திண்ணை இருட்டில் எவரோ கேட்டார்

தலையை எங்கே வைப்பதாம் என்று

எவனோ ஒருவன் சொன்னான்

களவு போகாமல் கையருகே வை.

சட்டெனப் புரிபடாத இக்கவிதையின் ஆழத்தைப் புரிந்துகொண்டால் நுட்பம் புரியும்.

தமிழ்க் கவிதையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்த செழுமையான ஒரு காலத்தின் அடையாளம் ஞானக்கூத்தன்.புதுக்கவிதைக்குக் காத்திரத்தையும் நெகிழ்வுத் தன்மையையும் ஞானக்கூத்தன் ஒருங்கே அளித்தார் என்பது மிகையான கூற்று அல்ல.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon