மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

ஏழு மாவட்ட விவசாயிகளுடன் போராடுவோம்!

ஏழு மாவட்ட விவசாயிகளுடன் போராடுவோம்!

விவசாயிகளைப் பாதிக்கும் வகையில் கெயில் கியாஸ் திட்டத்தை நிறைவேற்ற முற்பட்டால், மேற்கு மண்டலத்தை சேர்ந்த ஏழு மாவட்ட விவசாயிகளுடன் இணைந்து திமுக போராட்டம் நடத்தும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று( அக்டோபர் 7) ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமிழகத்தில் உள்ள விளைநிலங்களின் ஊடாக கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய்களைப் பதிக்க, மீண்டும் மத்தியில் உள்ள பாஜக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொள்வதற்கு திமுக சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்ட விளைநிலங்களின் வழியாக 310 கி.மீ. தூரத்துக்கு, 20 மீட்டர் அகலத்தில் செல்லும் இந்த எரிவாயுக் குழாய்கள் சிறு - குறு விவசாயிகளின் எதிர்காலத்தை நசுக்கும் ஆபத்தான திட்டம்.

மேற்கு மண்டலத்தில் உள்ள ஏழு மாவட்டங்களையும் பேரிடருக்கு உள்ளாக்கும் இந்த கெயில் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் கொதித்தெழுந்து உள்ளனர். துப்பாக்கி குண்டுகளுக்கும் அஞ்சாமல் எங்கள் விளைநிலங்களைப் பாதுகாப்போம் என்ற விவசாயிகளின் ஆவேசக் குரலை மத்திய அரசு உதாசீனப்படுத்தக் கூடாது.

கடந்த 25-03-2013 அன்று நடைபெற்ற தி.மு.க தலைமைச் செயற்குழுவில், "பாதிப்பில்லாதா வகையில் கெயில் கியாஸ் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுமக்கள் நலன் கருதி, விவசாய நிலங்களுக்கு ஊடே எரிவாயுக் குழாய் பதிக்கும் முடிவினை மத்திய அரசு கைவிட்டு, விவசாயிகளையும்பொது மக்களையும் பாதிக்காத வகையில் இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த வேண்டுகோளையும் மீறி மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளைப் பாதிக்கும் வகையில் கெயில் திட்டத்தை நிறைவேற்ற முற்பட்டால், மேற்கு மண்டலத்தில் உள்ள ஏழு மாவட்ட விவசாயிகளுடன் இணைந்து திமுக போராடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்"என்று குறிப்பிட்டுள்ளார்.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon