மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

மாவோயிஸ்ட்களை துரத்திய காவலரின் வீரம்!

மாவோயிஸ்ட்களை துரத்திய காவலரின் வீரம்!

கடைநிலை காவலர் ஒருவர் தன் உயிரையும் பொருட்படுத்தாது மாவோயிஸ்ட்டுகள் கையிலிருந்த துப்பாக்கியைப் பறித்து அவர்களை ஓட ஒடத் துரத்தியிருக்கிறார். சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் அதிகம். அதிலும் குறிப்பாக அந்த மாநிலத்தில் உள்ள தண்டேவாடா மாவட்டத்தில் உள்ள குவாகோண்டா பகுதியில் மாவோயிஸ்டடுகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இதே பகுதியில்தான் இருக்கிறது ஹித்வார் என்ற கிராமம். இந்தக் கிராமத்தில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் இருப்பதாகக் காவல் துறைக்குத் தகவல் வந்தது.. இது குறித்து துப்பறியக் காவலர் பீமாராம் குஞ்சம் நேற்று 6.10.2017 இரவு அந்த கிராமத்திற்குச் சென்றுள்ளார். இவர் வந்த நோக்கத்தை அறிந்து கொண்ட ஐந்து பேர் திடீரென்று காவலரிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார்கள். இந்த வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது. அப்போதுதான் அது நக்சலைட் கும்பல் என்று பீமாராமிற்குத் தெரிய வந்திருக்கிறது இந்நிலையில் அந்தக் கும்பலில் இருந்த ஒருவன் திடீரென்று துப்பாக்கியை எடுத்து காவலரை சுட்டுவிடுவதாக மிரட்டியிருக்கிறான். ஆனால் அந்த மிரட்டலுக்கு அஞ்சாத காவலர் பீமாராம் எதிர்பாராத தருணத்தில் அவன் மீது பாய்ந்து அந்த துப்பாக்கியை கைப்பற்றியிருக்கிறார். எதிராளிகள் சுதாரிக்கும் முன் அந்த நக்சலைட் கும்பலை நோக்கி சுடத் தொடங்கியிருக்கிறார். இதனால் அஞ்சிய அந்தக் கும்பல் தலைதெறிக்க ஓடித் தலைமறைவாகிவிட்டது.

அந்த துப்பாக்கியை ஆய்வு செய்ததில், அது 2014-ம் ஆண்டு குவாகோண்டாவில் நடந்த மாவோயிஸ்ட் தாக்குதலில் கொல்லப்பட்ட சப்-இன்ஸ்பெக்டரின் துப்பாக்கி என்பது தெரிய வந்தது. அந்த துப்பாக்கியை வைத்துதான் தங்களைப் பற்றி தகவலறிய வந்த காவலர் பீமாராமை கொல்ல முயற்சி செய்திருக்கிறார்கள் மாவோயிஸ்டுகள், ஆனால், காவலர் நிலைமை விபரீதமாவதை அறிந்து துணிச்சலுடன் போராடி மாவோயிஸ்டுகளை விரட்டியடித்துள்ளார். காவலர் பீமாராமின் துணிச்சலையும் தைரியத்தையும் காவல்துறை அதிகாரிகள் பாராட்டினர். மேலும், அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு கமலோச்சன் காஷ்யப் அறிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநில காவல்துறை வட்டாரத்தில் தற்போது காவலர் பீமாராம் குஞ்சம் தான் கதாநாயகன்.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon