மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

பெண்களின் கூந்தல் கத்தரிப்பு: இண்டர்நெட் முடக்கம்!

பெண்களின் கூந்தல் கத்தரிப்பு: இண்டர்நெட் முடக்கம்!

காஷ்மீரில் பெண்களின் கூந்தல் வெட்டப்படுவது குறித்த வதந்தி பரவுவதை தடுக்க மொபைல் இண்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் பெண்களின் கூந்தல் வெட்டப்படும் சம்பவம் கடந்த சில தினங்களாக அதிகரித்துள்ளது. இதனால், அனந்த்நாக் உள்ளிட்ட மாவட்டத்தில் போராட்டங்களும் வன்முறைகளும் ஏற்பட்டுள்ளன. பல இடங்களில் சந்தேகத்தின் பேரில் அப்பாவி நபர்கள் தாக்கப்பட்டுவருகின்றனர். பாரமுல்லா மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன், இளைஞர் ஒருவர் பெண்ணின் கூந்தலை வெட்ட வந்ததாகக் கூறிச் சரமாரியாகத் தாக்கப்பட்டுள்ளார். மேலும், அப்பகுதியில் நடந்த திருமணம் ஒன்றில் கூந்தல் வெட்ட வந்ததாக கூறி இரு பெண்கள் தாக்கப்பட்டனர்.

கடந்த மூன்று வாரங்களில் 50க்கும் மேற்பட்ட பெண்களின் கூந்தல்கள் வெட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இளம் பெண்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையிடம் முதல்வர் மெஹபூபா முஃப்தி, உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவையும் காவல் துறை நியமித்துள்ளது

இந்தச் சம்பவத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தப் பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சமூக வலைதளங்களில் வதந்திகளைப் பரப்புவதைத் தடுப்பதற்காக நேற்று (அக் 6) முதல் மொபைல் இண்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது. 4 ஜி, 3 ஜி மற்றும் 2 ஜி என அனைத்துச் சேவைகளும் பள்ளத்தாக்கில் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் இதுபோன்று பெண்களின் கூந்தல் கத்தரிக்கும் சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon