மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

முதல் முச்சதம் - காத்திருந்த சாதனை!

முதல் முச்சதம் - காத்திருந்த சாதனை!

ரஞ்சி கிரிக்கெட் தொடரின் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகின்றன. இதில் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் இமாச்சலப் பிரதேச வீரரான பிரசாந்த் சோப்ரா முச்சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

தர்மசாலாவில் நேற்று (அக்டோபர் 6) தொடங்கிய இந்த ஆட்டத்தில் இமாச்சலப் பிரதேச அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. முதல் நாளன்று 2 விக்கெட் இழப்புக்கு 459 ரன்கள் குவித்தது. பிரசாந்த் சோப்ரா 271 ரன்களுடனும் டோக்ரா 99 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இரண்டாவது நாளிலும் தனது அதிரடியைத் தொடர்ந்த பிரசாந்த், 318 பந்துகளில் ஒரு சிக்ஸர், 40 பவுண்டரிகளுடன் முச்சதத்தை எட்டினார். முதல் தர கிரிக்கெட்டில் அவருடைய முதல் முச்சதம் இது. 363 பந்துகளில், 338 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் இமாச்சலப் பிரதேசம் அணி, 148 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 729 ரன்கள் குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி இரண்டாம் நாள் ஆட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் குவித்தது. ஜீவன் ஜோத் சிங் 34 ரன்னிலும், உதய் 2 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.

தமிழ்நாடு - ஆந்திர பிரதேசம் அணிகள் மோதும் மற்றொரு ஆட்டம் சென்னையில் நடைபெற்றுவருகிறது. தமிழக அணி, முதல் இன்னிங்ஸில் 85 ஓவர்களில் 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆந்திரா அணி, விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்திருந்தது. இன்றைய (அக்டோபர் 7) இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியவுடன் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. ஆந்திர அணி, 64 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய சுமந்த்-அஷ்வின் ஹெப்பர் ஜோடி சிறப்பாக ஆடி அணியைச் சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அரை சதம் கடந்து அஷ்வின் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். இரண்டாம் நாள் ஆட நேர முடிவில் ஆந்திரா அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்தது. சுமந்த் 72 ரன்களுடனும், சோயப் கான் 14 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon