மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

ஜி.எஸ்.டி.: சிறு நிறுவனங்களுக்குச் சலுகை!

ஜி.எஸ்.டி.: சிறு நிறுவனங்களுக்குச் சலுகை!

ரூ.1.5 கோடி வரையில் விற்றுமுதல் கொண்ட சிறு நிறுவனங்கள் இனி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தங்களது வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்தால் போதும் என்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தின் முடிவில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 06ஆம் தேதி டெல்லியில் 22வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் தலைமை வகித்த இக்கூட்டத்தில் ஏற்றுமதியாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வு, பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி வரம்பை மாற்றியமைப்பது, ஜி.எஸ்.டி. நெட்வொர்க் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தின் முடிவில் சிறு வணிக நிறுவனங்களுக்குச் சலுகை வழங்கும் வகையில், ரூ.1.5 கோடி வரையில் விற்றுமுதல் கொண்ட நிறுவனங்கள், மாதத்திற்கு ஒரு முறை தங்களது ரிட்டன்களைத் தாக்கல் செய்வதற்குப் பதிலாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தாக்கல் செய்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரி இணக்கத் திட்டத்தின் விற்றுமுதல் வரம்பானது ஒரு கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் 75 லட்சம் ரூபாய்க்கு கீழ் வணிகம் புரிவோருக்கு மட்டுமே இந்த வரி இணக்க முறை சலுகை வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் இதுவரையில் 15 லட்சம் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் இந்த எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon