மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 29 செப் 2020

லவ் ஜிகாத்: என்ஐஏ விசாரணை தேவையில்லை!

லவ் ஜிகாத்: என்ஐஏ விசாரணை தேவையில்லை!

லவ் ஜிகாத் வழக்கில் கேரள போலீசார் விசாரணையே திறமை வாய்ந்ததாக உள்ளதால் என்ஐஏ விசாரணை தேவையில்லை எனக் கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த அகிலா என்ற இளம்பெண் கடந்த டிசம்பர் மாதம் ஷபின் ஜஹான் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அதற்கு முன்பாகவே இஸ்லாம் மதத்துக்கு மாறிய அவர் தனது பெயரை ஹாதியா என்று மாற்றிக்கொண்டார். தனது மகள் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றும் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் அவரைச் சேர்க்க சதி நடப்பதாகவும் பெண்ணின் தந்தை கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்தத் திருமணம் லவ் ஜிகாத் என்றும், எனவே செல்லாது என்றும் கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஜகான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தீவிர விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் என்ஐஏ தாக்கல் செய்தது. அதில், இந்துப் பெண்ணை முஸ்லிமாக மதமாற்றம் செய்து அவர்களைத் தீவிரவாதத்துக்கு இட்டுச் செல்வது ஒரு வழக்கமான பாணியாகக் கேரளாவில் இருந்துவருகிறது எனக் குறிப்பிட்டிருந்தது.

இந்த வழக்கு கடந்த 3ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, “ஜகானுக்கும் ஹாதியாவுக்கும் இடையே நடந்த மத இணைப்புத் திருமணத்தைத் தடை செய்யக் கேரள உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை” என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறினார்.மேலும் அந்தப் பெண்ணை அவரது தந்தை கடந்த பல மாதங்களாகத் தன் பிடியில் வைத்திருப்பதற்குக் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், சட்டப் பிரிவு 226இன்படி இந்தத் திருமணத்தைச் செல்லாது என்று உயர் நீதிமன்றம் அறிவிக்க முடியுமா, என்ஐஏ விசாரணை அவசியமா ஆகிய இரண்டு விவகாரங்கள் குறித்து தர்க்கபூர்வ சட்டப்பூர்வ வாதங்களை நாங்கள் கேட்போம் எனவும் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் ஒன்றை இன்று (அக்.07 ) தாக்கல் செய்துள்ளது. அதில், “இதுவரையிலான கேரள போலீஸின் விசாரணையில் என்ஐஏவால் பட்டியலிடப்பட்ட குற்றங்கள் எதுவும் நடந்ததாகத் தெரியவரவில்லை. எனவே என்ஐஏ விசாரணை தேவையற்றது” என்று தெரிவித்துள்ளது.

மாநிலத் தலைமை போலீஸ் ஏற்கெனவே ஏடிஜிபி (கிரைம்ஸ்) மட்ட விசாரணைக்காக வழக்கை ஒப்படைத்துள்ளது. இதற்காகச் சிறப்பு விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறிய கேரள அரசு, விசாரணை திடீரென என்ஐஏவுக்கு மாற்றப்பட்டது ஏன் எனவும் கேள்வியெழுப்பியது.

“கேரள போலீசார் திறமையான முறையில் முழுமையான விசாரணை மேற்கொண்டுள்ளர். கேரள போலீஸுக்கு இந்த வழக்கைக் கையாளும் திறமை உள்ளது. என்ஐஏ சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட குற்றங்கள் எதுவும் நடந்திருந்தால் மத்திய விசாரணை அமைப்புக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கும்” என்று கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு திங்கட்கிழமை (அக்.9) மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

சனி, 7 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon